வட இந்தியாவிலுள்ள பழமையான கத்தோலிக்க கல்லறை வளாகங்களில் இந்த ஆக்ரா ரோமன் கத்தோலிக் கல்லறை வளாகம் முக்கியமான ஒன்றாக அறியப்படுகிறது. ஆக்ரா நீதிமன்ற வளாகத்துக்கு அருகே மஹாத்மா காந்தி சாலையில் கிழக்குப்பகுதியில் இந்த கல்லறை வளாகம் அமைந்துள்ளது.
சுற்றுச்சுவரால் சூழப்பட்டிருக்கும் இந்த கல்லறை வளாகம் அளவில் சிறியதுதான் என்ற போதிலும் இதன் உள்ளே பல வரலாற்றுப்பிரபல்யங்களின் கல்லறைகள் அமைந்துள்ளன.
கலைஞர்கள், சாகச தளபதிகள், வீரர்கள் போன்றோரின் கல்லறைகளை இங்கு காணலாம். ஜான் வில்லியம் ஹெஸ்ஸிங் என்ற டச்சு தளபதியின் கல்லறையை இங்கு பிரதான நுழைவாயிலுக்கு அருகிலேயே காணலாம். தாஜ் மஹாலை பிரதியெடுத்தாற்போன்று இவரது கல்லறை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஜெனரல் பெரோன், முகலாய அரசுக்கான ஆங்கிலேய தூதராக இருந்த ஜான் மைடன்ஹால், இத்தாலிய கட்டிடக்கலை நிபுணர் ஜெரோம் வெரோனியோ ஆகியோரது கல்லறைகளும் இங்குள்ளவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.