Search
  • Follow NativePlanet
Share

அஜந்தா – உலக பாரம்பரிய சின்னம்

16

கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமான ‘அஜந்தா குடைவறைக்கோயில்கள்’ புராதன இந்தியாவில் ஏக காலத்தில் தழைத்தோங்கியிருந்த ஹிந்துமரபு, புத்த மரபு மற்றும் ஜைன மரபு போன்றவற்றின் ஆதாரச் சான்றுகளாக காலத்தால் அழியாமல் நின்று ஆயிரம் மௌனக் கதைகள் கூறுகின்றன.

உலகப்பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் இந்த அற்புத வரலாற்றுஸ்தலமானது இதைப்போன்றே ஔரங்காபாத் நகருக்கு அருகிலுள்ள எல்லோரா  எனும் ஸ்தலத்திலுள்ள குடைவறைக்கோயில்களுடனும் சேர்த்து ‘அஜந்தா-எல்லோரா’ என்று  பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த இரட்டை குடைவறைக்கோயில் ஸ்தலங்களுக்கான வாயில் நகரமாக விளங்கும் ஔரங்காபாத் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரங்களுள் ஒன்றாகும்.

புத்தரின் வாழ்க்கை – பதியப்பட்டுள்ள காட்சிகள்!

இந்த அஜந்தா ஸ்தலத்தில் ஏறக்குறைய 30 குடைவறைக்கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் பௌத்தம், ஹிந்து, ஜைனம் ஆகிய மூன்று முக்கிய மரபுகள் குறித்த இயற்கை வண்ண ஓவியங்கள், சிற்பங்கள், கூரைப்பூச்சு ஓவியங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

பொது யுகத்திற்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டில் (2nd century BCE) தொடங்கி பொது யுகத்தின் 6ம், 7ம் நூற்றாண்டு வரை இந்த ஸ்தலத்தின் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை அக்கால நாகரிகம், கலை உன்னதம் போன்ற அம்சங்களை நமக்கு காட்டும் ஜன்னல்களாக காட்சியளிக்கின்றன. இங்குள்ள எல்லா குடைவறைக்கோயில்களும் ஒரு பொது விஷயத்தை நுணுக்ககமாக வெளிப்படுத்துகின்றன.

அது புத்தர் மோட்சம் அடைந்த காலம் வரையிலான அவரது வாழ்க்கை வரலாறு ஆகும். இன்னொரு அதிசயமான அற்புதம் என்னவெனில் இந்த குகைக்கோயில்களை போன்றே ஷீலங்காவிலுள்ள சிகிரியா கோயில்கள் காட்சியளிப்பதுதான்.

இந்த இரண்டு கோயில்களுக்குமான ஒற்றுமையை உற்று நோக்கும்போது நமக்கு எண்ணற்ற வரலாற்று யூகங்கள் தோன்றுகின்றன.

இந்த கோயில்கள் தற்போது நாம் காணும் முழு வடிமைப்புடனும் உருவாவற்கு சுமார் 800 வருடங்கள் பிடித்திருக்கின்றன எனும் தகவல் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

19ம் நூற்றாண்டு வாக்கில் ஆங்கிலேய படைத்தளபதி ஒருவரும் அவரது குழுவினரும் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது இங்குள்ள குதிரை குளம்பு வடிவிலான பாறையை கண்டிருக்கின்றனர்.

இன்னதென்று தெரியாமலே அவர்கள் மேலும் அந்த பிரதேசத்தை துழாவியிருக்கின்றனர். அப்போதுதான் மறைந்து கிடந்திருந்த இந்த புராதன ஆவணச்சின்னங்கள்  வெளிப்பட்டிருக்கிறன. உடனே அரசாங்கத்திற்கு அந்த தகவல் தெரியப்படுத்தப்பட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த குடைவறைக் கோயில்களை ஆய்ந்தனர்.

இதையடுத்து நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சியூட்டும்படியாக மண்படிவுகளில் புதையுண்டிருந்த ஸ்தூபங்கள், தாரகைகள், துவாரபாலகர்கள், விஹாரங்கள் மற்றும் சைத்யா போன்ற புத்த சிற்பக்கலை படைப்புகள் வெளிக்கொணரப்பட்டன.

இங்குள்ள எல்லா ஓவியங்களும் புத்த மரபு மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்திருந்ததோடு மட்டுமல்லாமல் புத்தரின் வாழ்க்கை வரலாற்றின் ஆவணப்பதிவாகவும் காட்சியளித்தன.

இங்குள்ள குடைவறைக்கோயில்களின் விசேஷ அம்சங்கள்!

இந்த அஜந்தா ஸ்தலத்தில் மொத்தமாக 29 குடைவறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் புத்தரின் வாழ்க்கை குறித்த ஒவ்வொரு தகவலை அளிக்கின்றன.

முதலாவது குகை 6ம் நூற்றாண்டினை சேர்ந்ததாக உள்ளது. இதில் முக்கியமான சின்னங்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. வாயிலைக் கடந்தபின் ஒரு பிரம்மாண்ட புத்த சிலையை பார்க்க முடிகிறது. இது ஒவ்வொரு கோணங்களில் ஒவ்வொரு விதமாக தெரியும்படி வடிக்கப்பட்டுள்ளது. அருகில் காவல் தேவதைகளாக நாக தேவதைகள் காணப்படுகின்றன. இது 20வது குகையில் இருப்பதைப் போன்றே உள்ளது. அப்படியே திரும்பி மேலே இடது புற மூலையை கவனித்தால் ஒரு பெண் தெய்வச்சிலை வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது பூமித்தாய் அல்லது நதிக்கடவுளைக் குறிப்பதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் கையில் புத்தருக்கான மாலையுடன்  ஒரு குள்ள தேவதை உருவத்தையும் பார்க்க முடிகிறது. பிரம்மாண்ட புத்த சிற்பத்தை தவிர இங்கு ஒரு புறத்தில் கையில் தாமரையை ஏந்தியுள்ள பத்மாபாணி அவகிதெஸ்வரா மற்றும் வஜ்ராயுதத்தை கையில் ஏந்தியுள்ள வஜ்ரபாணி ஆகிய ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு உருவங்களுமே போதிசத்துவரின் அம்சங்களாக இந்த ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு புடைப்பு சிற்பத்தில் நான்குவிதமான உடல் அமைப்புகளைக்கொன்ட மான்கள் ஒரே தலையுடன் காட்சியளிக்கும்படி வடிக்கப்பட்டுள்ளன. காம இச்சை தவிர்க்கப் படவேண்டியது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ஒரு காதலர் ஜோடி ஓவியமும், ஒரு கருப்பு நிற இளவரசியின் உருவமும் இங்குள்ளன. இந்த கறுப்பு இளவரசி ஓவியம்  ஆந்திர தேசத்தைச்சேர்ந்த ஒரு இளவரசியின் உருவத்தை மாதிரியாக கொண்டே வரையப்பட்டுள்ளது. இதர சுவாரசிய ஓவியங்களாக தூணை சாய்ந்து நிற்கும் இளவரசி, நடன மங்கை, சோகமாய் காட்சியளிக்கும் தாதிப்பெண் ஆகியவற்றைக்காணலாம். தங்க வாத்து, இளஞ்சிவப்பு யானை மற்றும் சண்டைக்காளை போன்றவை இங்கு ஒற்றைக்குடையின்கீழ் எல்லா உயிர்களும் ஒன்றே எனும் கருத்தை வலியுறுத்துவதுபோல் வரையப்பட்டுள்ளன.

இரண்டாவது குகை முதல் குகையை நகல் எடுத்தது போன்றே எல்லா அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன் வாயில் அலங்கார வடிவமைப்புகள் புராதன இந்தியக் கோயில்களில் காணப்படுவது போன்றே காட்சியளிக்கின்றன. இதன் கூரை வெகு நுட்பமான கலையம்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த குகையின் உட்புறச்சுவர்களில் ஆயிரம் புத்த உருவங்கள் துல்லியமான ஓவிய நுட்பங்களுடன் வரையப்பட்டுள்ளன. வலது புறம் உள்ள கூடத்தில் ஒரு இளம்பெண் ஊஞ்சலில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி வரையப்பட்டுள்ளது. இது புத்தரின் தத்துவமான உடல் சக்தியே மனச்சக்தியாக மாறுகிறது எனும் தத்துவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

நான்காவது குகையானது 17 வது குகையுடன் சேர்த்தே உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இது முடிவடையாத நிலையில் காட்சியளிக்கின்றது. இங்கு புத்தரின் வாழ்க்கையை குறிக்கும் பல ஓவியங்கள் முடிக்கப்படாமல் காட்சியளிக்கின்றன. குனிந்த நிலையிலுள்ள ஒரு மான்,  ஒரு குள்ள இசைக்கலைஞர் உருவம் மற்றும் மலரலங்கார ஓவியத்தீற்றல் போன்றவை இங்கு காணப்படுகின்றன.

6 வது குகையானது மஹாயான பௌத்தப்பிரிவை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு புத்தர் அமர்ந்த நிலையில் காணப்படும் உருவம் உள்ளது. அவரது இருபுறமும் பறக்கும் தேவதை உருவங்கள் காட்சியளிக்கின்றன. இந்த குகையில் உள்ள தூண்கள் மற்ற குகைகளில் உள்ளவைகளைக்காட்டிலும் நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இவை எண்முக வடிவைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தாமரையுடன் காட்சியளிக்கும் பிட்சுவின் உருவமும் இங்கு காணப்படுகிறது.

9வது குகையில் சைத்யா சபைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு ஒரு பெரிய குதிரைக்குளம்பு வடிவ சாளரமும் அமைந்துள்ளது. நாக வழிபாடு செய்பவர்கள் மற்றும் மந்தை மேய்ப்பர்கள் என்ற இரண்டு ஓவியங்கள் இந்த குகையில் காணப்படுகின்றன.

10 வது குகையானது ஒன்பதாவது குகையைப்போன்றே கலையம்சத்திலும் வடிவத்திலும் காணப்படுகிறது. இங்கு யானை மீதமர்ந்த ஷதா-தந்த் ஜடகா புத்தரை காணலாம். மேலும் தன் படை மற்றும் ஷியாமா ஜடகாவுடன் காட்சியளிக்கும் ஒரு மன்னனின் சித்தரிப்பும் இங்கு உள்ளது. யானைத்தந்தத்துடன் காட்சியளிக்கும் இளவரசி, ஒற்றைக்கண் துறவியுடன் காட்சியளிக்கும் புத்தர் ஆகிய இரண்டு ஓவியங்களும் கூட இங்கு உள்ளன.

11 வது குகையில் ஹீனயான மரபிலிருந்து மஹாயான மரபுக்கு மாறும் மாற்றத்தைக் குறிப்பிடும் முனைப்புகள் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு புத்த ஸ்தூபங்கள் அமைந்துள்ளன.

16 வது குகையில் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ள முன்விதானத்துடன் கூடிய வாயில் அமைப்பு மற்ற வாயில் அமைப்புகளுக்கு முன்னுதாரணமாய் அமைந்துள்ளது. இந்த குகையிலிருந்து பார்த்தால் மட்டுமே கீழே உள்ள ஆற்றின் அழகை நன்றாக ரசிக்க முடிகிறது. இந்த குகையில் பிச்சைப்பாத்திரத்துடன் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும்  ஒரு பிரம்மாண்ட புத்தர் சிலை, புத்த பஹவானின் வருகைக்காட்சி, வில்லை வளைக்கும் இளம் சித்தார்த்தர் உருவம் போன்றவற்றை பார்க்கலாம். மேலும் இந்த குகையில் உலகப்புகழ் பெற்ற ஓவியமாக கருதப்படும் ‘இறக்கும் இளவரசி’ எனும் ஓவியத்தையும் பார்க்காலம். அதாவது தன் கணவன் துறவறம் பூண்டுவிட்டான் என்ற செய்தியை கேட்ட ராணியின் முகத்தில் தோன்றும் அதிர்ச்சி இந்த ஓவியத்தில் அவ்வளவு தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இங்குள்ள சுதாசன ஜடகா எனும் மற்றொரு சிற்பமும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

17 வது குகையானது அன்பை மையப்படுத்திய கலைப்படைப்புகளோடு காட்சியளிக்கின்றது. இங்கு அப்சரஸ் மற்றும் பறக்கும் தேவதைகள் மற்றும் இந்திரன் போன்ற ஓவியங்கள் உள்ளன. இளவரசர் சித்தார்த்தர் ஒரு பிச்சைக்கார கோலத்தில் தன் மனைவி குழந்தையுடன் சேர்வதற்கு திரும்பி வரும் காட்சி இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. திரும்பிய புத்தர் என்று இந்த ஓவியம் அழைக்கப்படுகிறது.

21வது குகையானது மற்ற எல்லா குகைகளைக்காட்டிலும் வடிவமைப்பில் மேம்பட்டதாக காட்சியளிக்கின்றது. இந்த குகையின் உட்பகுதி நல்ல முறையில் திட்டமிடப்பட்டு அழகாக வடிக்கப்பட்ட தூண்களுடன் காட்சியளிக்கிறது. முன்னர் ஓவியங்கள் காணப்பட்ட சுவற்றில் இப்போது பூச்சுகள் காட்சியளிக்கின்றன. இது கூடத்தை ஒட்டிய திறந்த வெளி சபைக்கூடத்தையும் (சைத்யா) கொண்டுள்ளது. தொடர்ச்சியான தோரண வாயில் அமைப்புகள் மற்றும் 26 தூண்களைக்கொண்ட ஒரு கட்டமைப்பும் இங்கு காணப்படுகிறது. சுவர்களில் புடைப்புச் சிற்பங்களும் இங்கு உள்ளன. சுவரை ஒட்டியுள்ள கூடத்தில் ஒரு புத்தர் சிலை உறக்க நிலையில் காட்சியளிக்கிறது. புத்த குருக்கள் இது புத்தரின் பரிநிர்வாணக்காட்சி என்று விளக்கம் தருகின்றனர். இதே சுவர்ப்பகுதியில் புத்தரின் இச்சை எனும் பெயரிடபட்ட சிற்பம் ஒன்றும் உள்ளது.

24 வது குகையில் 3 அம்சங்கள் காணப்படுகின்றன. தூண் அமைப்பு, உத்தர அமைப்பு மற்றும் முன்விதான அமைப்பு என்பவையே அவை. இங்குள்ள தூண் கட்டமைப்பு முடிவடையாமல் காட்சியளித்தாலும் அவற்றின் தோற்றம் கவனிக்கக்கூடியதாய் உள்ளது. முன்விதான கட்டமைப்பில் சிக்கலான உத்தர அமைப்பு காணப்படுகிறது. இவை எல்லாம் இருந்தும் இந்த 24வது குகை பாதியிலேயே நின்றுள்ளது. 7ம் நூற்றாண்டில் கடைசியான இணைப்பாக  விதானத்துடன் கூடிய அலங்கார வாயில் பகுதி மேற்பக்க வலது மூலையில் ஆங்கில எழுத்து T வடிவில் அமைந்துள்ளது.

26வது குகையானது சிரவஸ்தி அற்புதம் எனும் காட்சி, குடும்ப அமைப்பு, சுருள் முடியுடன் கூடிய புத்தர் தலை போன்றவற்றைக்கொண்டுள்ளது. இந்த குகையை சுற்றி வரும் பாதையின் சுவர்களில் புத்தரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிரவஸ்தி எனும் கிராமமானது புத்தர் தன் எல்லா ரூபங்களுடனும் வானத்தில் தரிசனமளித்த காட்சியை தரிசித்த கிராமமாக நம்பப்படுகிறது. குடும்ப அமைப்பு என்பது அக்காலத்திய மாதிரிக்குடும்ப அமைப்பை சித்தரிப்பதாகும். இது மலர் அலங்கார அம்சங்களுடன் வரையப்பட்டுள்ளது. பெரிய காதுகள் மற்றும் சுருள் முடியுடன் காட்சியளிக்கும் புத்தரின் தலை வடிவம் சுருள் முடி புத்தர் என்றழைக்கப்படுகிறது. ஐதீகத்தின்படி புத்தர் அமர்ந்திருக்கும் தாமரை மலர் அண்டவெளியாக கருதப்படுகிறது. நாகா, நந்தா மற்றும் அனுமநந்தா ஆகியோர் இந்த தாமரை மலர்க்காம்பினை தாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள சைத்யா குதிரைக்குளம்பு வடிவ தோரணவாயில் பல அற்புதமான சிற்ப வடிப்புகளைக்கொண்டுள்ளது. இவை 5ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

27வது குகை இரண்டு பகுதிகளைக்கொண்டுள்ளது. ஒன்று நாகா துவாரபாலகர்கள். மற்றொன்று விதானத்துடன் கூடிய வாயில். இங்குள்ள புத்த கோயிலின் வெளிப்பகுதியில் இந்த நாகா துவாரபாலகர்கள் அமைந்துள்ளன. இந்த குகையானது 20 வது குகையை நகலெடுத்ததுபோல் அமைந்துள்ளது. இருப்பினும் இங்குள்ள நாகர் சிலை 20வது குகையில் உள்ளதைப்போன்று நுட்பமாய் வடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இங்குள்ள விதான வடிவமைப்பு 2வது குகையில் உள்ளதைப்போன்றே காணப்படுகிறது.

அஜந்தா – எல்லாக் காலத்திலும் விஜயம் செய்யலாம்

இந்த அஜந்தா குகைகள் பருவநிலைகளால் பாதிக்கப்படாமல் காலத்தில் நீடித்து நிற்கின்றன. இந்த ஸ்தலத்துக்கு பயணிகள் வருடத்தின் எல்லா நாட்களிலும் பயணம் மேற்கொள்ளலாம்.

இருப்பினும் கோடைக்காலத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த ஸ்தலத்தை சுற்றிப்பார்க்க அதிகம் கால் நடையாகவே நடக்க வேண்டியுள்ளது என்பதால் கோடைக்காலத்தில் அது உங்களை சோர்வடைய வைக்க வாய்ப்புள்ளது.

ஆகவே மழைக்காலம் இந்த அற்புதமான வரலாற்றுத்தலத்துக்கு விஜயம் செய்ய தகுந்த காலமாகும். அப்போது இங்கு ஓடும் ஆறும் பெருக்கெடுத்தோடும் நீருடன் காட்சியளிக்கின்றது. சுற்றிலும் பசுமையும் கூடியிருக்கும் என்பதால் அக்காலத்தில் பயண அனுபவம் ரசிக்கும்படி இருக்கும்.

அஜந்தா குகைகள் விமானம், சாலை மற்றும் ரயில் போன்ற மூவழிகள் மூலமாக எளிதில் சென்றடையும்படி உள்ளது. ஔரங்காபாத் விமான நிலையம்100 கி.மீ தூரத்தில் அருகிலுள்ள விமான நிலையமாக அமைந்துள்ளது. மேலும் ரயில் நிலையமும் ஔரங்காபாதிலேயே அமைந்துள்ளது.

ஜல்காவ்ன் நகரத்தில் உள்ள ரயில் நிலையம் மூலமாகவும் இந்த அஜந்தா குகைகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். சாலை மார்க்கமாக எனில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களால் ஔரங்காபாதிலிருந்து இயக்கப்படும் சுற்றுலாப்பேருந்துகள் மூலமாக 2 அல்லது 3 மணி நேரத்தில் அஜந்தா குகைகளை அடையலாம்.

முக்கியமான குறிப்பு

அஜந்தா குடைவறைக்கோயில்களின் உன்னதத்தைம் அவை ஒரு பயணியின் மனதில் ஏற்படுத்தும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் விவரிப்பது கடினம். வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மௌனக்கதைகளை இங்குள்ள சிற்பங்களும் ஓவியங்களும் தங்களைக்காணும் மனங்களிடம் பகிர்ந்து கொள்கின்றன.

அவற்றை எந்த மொழியாலும் சொற்களாலும் வெளிப்படுத்தவே முடியாது. ஆகவே வாழ்வில் ஒரு முறை விஜயம் செய்யுங்கள் இந்த அஜந்தா குடைவறைக்கோயில்களுக்கு.

இனந்தெரியாத அமைதி உங்கள் நெஞ்சில் நிறைவதை உணர்வீர்கள். உலகின் அற்புதமான இந்த பாரம்பரிய வரலாற்றுச் சின்னம் நம் இந்திய மண்ணில் நம் இந்திய பாரம்பரியத்தை தாங்கி நிற்பது நமக்கு பெருமையும் கூட. இனியும் சொல்ல ஏதுமில்லை - உங்கள் வருகைக்காக அஜந்தா காத்திருக்கின்றது என்பதைத்தவிர.

அஜந்தா சிறப்பு

அஜந்தா வானிலை

சிறந்த காலநிலை அஜந்தா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அஜந்தா

  • சாலை வழியாக
    அஜந்தா சுற்றுலாஸ்தலம் அதன் அருகாமையிலுள்ள முக்கிய நகரங்களான மும்பை, புனே, ஷிர்டி, நாசிக் மற்றும் இதர நகரங்களுடன் நல்ல போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த நகரங்களிலிருந்து நிறைய பேருந்து சேவைகள் அஜந்தா சுற்றுலாஸ்தலத்துக்கு உள்ளன. ஔரங்காபாத்திலிருந்து 2-3 மணி நேர பயணத்தில் அஜந்தா உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அஜந்தா சுற்றுலாஸ்தலம் அதன் அருகிலுள்ள ஔரங்காபாத் ரயில் நிலையத்தின் மூலம் பயணிகளுக்கு ரயில் பிரயாண வசதியை அளிக்கின்றது. மும்பையிலிருந்து தபோவண் எக்ஸ்ப்ரஸ் மற்றும் தேவ்கிரி எக்ஸ்ப்ரஸ் ஔரங்காபாத் நகருக்கு தினசரி இயக்கப்படுகின்றன.மற்றும் அஜந்தாவிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள ஜலகாவ்ன் ரயில் நிலையமும் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகளைக் கொண்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அஜந்தாவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் ஔரங்காபாத் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லி சர்வதேச விமான நிலையங்களுடன் இது விமான சேவைகளைக் கொண்டுள்ளது. அஜந்தாவுக்கு இன்னும் அருகிலுள்ள ஜலகாவ்ன் எனுமிடத்திலும் விமான நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri