Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» அந்தமான் நிகோபார் தீவுகள்

அந்தமான் நிகோபார் தீவுகள் – ஆழிசூழ் அமைதிக்கு நடுவே வீற்றிருக்கும் சொர்க்கத்தீவுகள்

பொதுவாக வெப்பப்பிரதேச கடற்கரைச்சுற்றுலா என்றாலே நாம் அனைவரும் தேடுவது சந்தடியற்ற, தனிமை கவிழ்ந்திருக்கும் எழிற்கடற்கரைகளைத்தான். அது பிரேசில் நாட்டு அமேசான் ஆற்றங்கரையாக இருந்தாலும் சரி ஸ்பெயின் நாட்டு ‘இபிசா’ கடற்கரையாக இருந்தாலும் சரி, ‘தனிமை’ மட்டுமே ஒரு சுற்றுலாப்பயணியை ‘சாந்த நிலை’க்கு இழுத்துச்சென்று இயற்கையோடு ஒன்ற வைக்கிறது. அப்படி ஒரு தனிமையான அமைதியான மாசுபடாத கடற்கரைச்சூழலை தேடும் பட்சத்தில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் - இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் அன்றி வேறில்லை.  வாழ்வில் ஒரு முறையாவது இந்தியப்பயணிகள் விஜயம் செய்யவேண்டிய தீவுச்சொர்க்கமே இந்த அந்தமான் தீவுப்பிரதேசம்.

அந்தமான் நிகோபார் தீவுகளின் புவியியல் அமைப்பு

அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் நிலப்பகுதியை விட்டு விலகி தென்கோடியில் வங்காளவிரிகுடாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய இந்திய யூனியன் (தீவு) பிரதேசமாகும். சுமார் 8000 ச.கி.மீ க்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த தீவுகளில் மனித சுரண்டலுக்கு உட்படாத இயற்கை வளம் நிரம்பி வழிகிறது.

இந்த இந்திய யூனியன் பிரதேசமானது ‘அந்தமான்’ மற்றும் ‘நிக்கோபார்’ என்ற இரண்டு தனித்தனியான -10 டிகிரி வடக்கு அட்ச ரேகையால் பிரிக்கப்பட்ட - தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான போர்ட் பிளேர் நகரம் முக்கிய போக்குவரத்து இணைப்பான விமான நிலையத்தை கொண்டுள்ளதுடன், இந்த தீவுப்பகுதியிலேயே அதிகமான மக்கள் வசிக்கும் இடமாகவும் விளங்குகிறது.

போர்ட் பிளேர் நகரத்திலிருந்து மற்ற சிறு தீவுகளுக்கு விஜயம் செய்ய பலவிதமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடலுக்கடியில் வீற்றிருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும்.

இந்த கடலடி மலைத்தொடர் அமைப்பு தெற்கு வடக்காக 800 கி.மீ நீளத்துக்கு நீண்டு அமைந்துள்ளது. விமானமார்க்கம் தவிர, சென்னை மற்றும் கல்கத்தா துறைமுகங்களிலிருந்து ‘ஃபெர்ரி’ எனப்படும் ‘சொகுசு பயணக்கப்பல்’ மூலமாகவும் போர்ட் பிளேர் நகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

அந்தமான் நிகோபார் தீவுகளின் விசேஷ அம்சங்கள்

முடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும்‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் அற்புதமான ‘கடலடி காட்சிப்பயணம்’,  விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். இந்திய பயணிகளுக்கு ‘விசா’ மற்றும் ‘பணமாற்றம்’ போன்ற எந்த சிக்கல்களும் இல்லாமல் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய சொர்க்கத்தீவுகளுக்கு இணையான ஒரு சுற்றுலா அனுபவத்தை தருவதற்கு இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் காத்திருக்கின்றன. சிக்கனமான முறையில் ‘ஸ்கூபா டைவிங்’ அனுபவங்களை பெற இந்தியப்பயணிகளுக்கு இந்த தீவுகளை விட்டால் வேறு இடமில்லை என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.  

கன்னிமை குறையாத கடற்கரைகள் மற்றும் ஸ்கூபா டைவிங் மட்டுமல்லாமல் அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன. இயற்கை வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும் வேறெங்கும் பார்க்க முடியாத மலர்த்தாவரங்களையும் காணலாம்.

இது போன்ற சூழல் தேனிலவுப்பயணிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுப்பகுதியின் இயற்கைச்சூழலை பயணிகள் சிரமமில்லாமல் ரசித்து மகிழ்வதற்காக இங்குள்ள உள்ளூர் மக்கள் இயற்கையோடு இயைந்த கட்டமைப்புகளையும், ரிசார்ட் வசதிகளையும் உருவாக்கி சூழலின் தூய்மை கெடாமல் ஒரு ஒழுங்குட்பட்டு பேணிவருகின்றனர். 

அந்தமான் நிகோபார் தீவுகளில் 2200 வகையான தாவர இனங்கள் காணப்படுகின்றன என்பதும், இவற்றில் 1300 வகைகள் இந்திய நிலப்பகுதியில் வளர்வதில்லை என்பதும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளின் தனித்தன்மையான இயற்கை வளத்தை எடுத்துச்சொல்ல போதுமானது.

அலங்கார சங்குச்சிப்பிகள், முத்துச்சிப்பிகள், கடல் பொருட்கள் போன்றவற்றுக்கான வியாபாரக் கேந்திரமாகவும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் விளங்குகின்றன. இந்தியாவின் ரகசிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த தீவுப்பகுதி குறிப்பிடப்படுவது ஏன் என்பதை இங்கு விஜயம் செய்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் இதுவரை சென்றதில்லை எனில் உங்களின் அடுத்த சுற்றுலாப்பயணத்துக்கான ஸ்தலமாக இந்த தீவுப்பகுதியை யோசிக்காமல் தேர்ந்தெடுத்துவிடலாம். இங்குள்ள ‘ஹேவ்லாக்’ தீவின் ‘ராதாநகர்’  கடற்கரையை ஆசியாவிலேயே மிக அழகான கடற்கரையாக ‘டைம்’ பத்திரிகை வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்படிகம் போன்று ஜொலிக்கும் நீலநிற கடல்நீருடன் பலவிதமான கடல் உயிரினங்கள் நீருக்கடியில் கூட்டம் கூட்டமாக காட்சி தரும் இந்த ‘ஹேவ்லாக்’ கடற்கரையின் அழகு இந்திய நிலப்பகுதிகளில் வேறு எங்குமே காணக்கிடைக்காத ஒன்று.

அந்தமான் தீவு பயணத்தின்போது பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு அம்சம் ‘ஜாலிபாய் தீவு’ ஆகும். மேலும், ஹேவ்லோக் தீவு, சின்கூ தீவு மற்றும் ஜாலிபாய் தீவு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்கள் ‘மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்’ (தேசிய கடற்பூங்கா) அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்’ என்று அழைக்கப்படுகிறது.

சுற்றுப்புற மாசுப்படுத்தல், ஆக்கிரமிப்பு போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டு, சூழலியல் சுற்றுலாத்தலமாக பரமாரிக்கப்படும் இந்த தீவுப்பகுதிகளில் அப்பழுக்கற்ற தீவுக்கடற்கரையின் சொர்க்கம் போன்ற சூழலை பயணிகள் தரிசிக்கலாம். 

உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் நீந்தித்திரியும் கடலுயிர்கள், படிகம் போன்ற நீலப்பச்சை நீருக்கடியில் தரிசனம் அளிக்கும் பவழப்பாறை திட்டுகள்/வளர்ச்சிகள், விதவிதமான மலர்த்தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள் என்று ‘இயற்கையின் அதிசயங்களை’ எல்லாம் சுமந்து வீற்றிருக்கும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்தியர் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பயணம் மேற்கொள்வது அவசியம்.

தீவுச்சொர்க்கத்திற்கு கூட்டிச்செல்லும் போக்குவரத்து மார்க்கங்கள்

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிமையான ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் கல்கத்தா, சென்னை, புவனேஸ்வர் போன்ற நகரங்களிலிருந்து எல்லா விமானச்சேவை நிறுவனங்களும் ‘போர்ட் பிளேர்’க்கு விமான சேவைகளை இயக்குகின்றன.

இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான எம். வி. நான்கௌரி எனும் கப்பலுக்கு அந்தமான் தீவுகளில் ஒன்றான ‘நான்கௌரி’ எனும் தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து மாதம் இருமுறையும், விசாப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் போர்ட் பிளேர் துறைமுகத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த கப்பல் பயணம் சிக்கனமானது என்றாலும் பயண நேரம் கூடுதலாக இருக்கும்.

அந்தமான் நிகோபார் தீவுகள் சேரும் இடங்கள்

  • கிரேட் நிக்கோபார் 7
  • ஹேவ்லாக் தீவு 12
  • போர்ட் பிளேர் 27
  • கிரேட் நிக்கோபார் 7
  • கிரேட் நிக்கோபார் 7
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri