Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத 12 கோயில்கள்!

சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத 12 கோயில்கள்!

By Super Admin

நவீன காலத்திலும் குள்ளமனிதர்கள் அதுவும் தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?நவீன காலத்திலும் குள்ளமனிதர்கள் அதுவும் தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்ற கோயில்கள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம்.

அதேவேளையில் காளிகாம்பாள் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், அஷ்டலக்ஷ்மி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில் ஆகியவை சென்னை மக்கள் மத்தியில் பிரபலம். இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியவத்துவம் வாய்ந்தவை.

இவை யாவும் சென்னையின் இயந்திரகதியான வாழ்விலிருந்து மிகச் சிறந்த ஆன்மிக அனுபத்தை தருபவை. அந்த வகையில் சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் பக்தர்கள் தவறவிடக்கூடாத 12 கோயில்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

கபாலீசுவரர் கோயில்

கபாலீசுவரர் கோயில்

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வேண்டுவதை அருளும் ‘கற்பகாம்பாள்' ஆக இங்கு பார்வதி தேவியார் வணங்கப்படுகிறார்.

கபால - ஈஸ்வரன் என்ற பெயரே கபாலீஸ்வரர் என்று திரிந்து வழங்கி வருகிறது. ஐதீக புராணக்கதைகளின்படி கைலாச மலையில் பிரம்மா கடவுள் ஈசனின் வலிமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் இதில் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை (கபாலத்தை) திருகி கொய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தன் தவறை உணர்ந்த பிரம்மா இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டதாக இந்த புராணக்கதை முடிகிறது.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொன்மையான கோயிலின் ஆதி அமைப்பானது 7ம் நூற்றாண்டில் கடற்கரையை ஒட்டி பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் திருஞானசம்பந்தரின் பாடல்களில் கிடைக்கின்றன. தற்போதைய சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயிலின் கட்டுமானம் திராவிட பாணி கோயிற்கலை அம்சங்களையே தாங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.

படம் : Mohan Krishnan

காளிகாம்பாள் கோயில்

காளிகாம்பாள் கோயில்

காளிகாம்பாள் கோயில் சென்னை நகரத்தின் பாரீஸ் கார்னர் பகுதியில் பரபரப்பான தம்புசெட்டி தெருவில் அமைந்துள்ளது. காளி என்றும் காமாக்ஷி என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வத்துக்காக இந்தக்கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.

1640ம் ஆண்டில் கடற்கரையை ஒட்டி இருந்த இதன் ஆதி அமைப்பு அழிக்கப்பட்டபின்னர் தற்போது நாம் காணும் இக்கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்த்துகீசியர்களால் இதன் ஆதி அமைப்பு சிதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. உள்ளூர் புராணக்கதைகளின்படி முற்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இக்கோயிலின் தெய்வம் தற்போது சாந்த சொரூப காமாட்சி அவதாரமாக காட்சியளிப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

ஜகன்னாத் கோயில்

ஜகன்னாத் கோயில்

ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காகவே அதன் நகல் வடிவமாக இந்த சென்னை ஜகந்நாத் கோயில் கட்டப்பட்டிருக்கிறது எனலாம். கிழக்குக்கடற்கரை சாலையிலிருந்து சற்றே விலகி ரெட்டிகுப்பம் சாலையில் கானாத்தூர் கிராமப்பகுதியில் இந்த புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஜகந்நாதர், சுபத்ரா தேவி மற்றும் பலராமர் ஆகியோரின் சிலைகளை தரிசிக்கலாம். யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.

பூரி ஜகந்நாதர் கோயிலை எல்லாவிதத்திலும் ஒத்திருக்கும் இக்கோயில் வெண் சலவைக்கற்களாலும், கருப்புப்பளிங்குகற்களாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து கருங்கல்லும் ராஜஸ்தானிலிருந்து வெண் சலவைக்கற்களும் இக்கோயிலுக்காக வரவழைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் விக்கிரகங்களும் பூரி கோயிலில் உள்ளவற்றைப்போன்றே வேப்ப மரத்தின் மரத்துண்டுகளை கடைந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மாண்டமான பரப்பளவில் அழகாக பராமரிக்கப்படும் பசுமையான செடிகளையும் பலவண்ண மலர்களையும் கொண்டுள்ள நந்தவனத்தின் நடுவே இக்கோயில் வளாகம் வீற்றிருக்கிறது. நகர சந்தடியிலிருந்து விலகி அமைதியையும் ஆன்மீக சூழலையும் வழங்கும் அற்புத ஸ்தலமாக இந்த ஜகன்னாத் கோயில் வீற்றுள்ளது.

தேவி கருமாரியம்மன் கோயில் - திருவேற்காடு

தேவி கருமாரியம்மன் கோயில் - திருவேற்காடு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னையின் மேற்குப்பகுதியில் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கிறது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்(வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். புராதன காலத்தில் இப்பகுதியிலிருந்த வனப்பகுதி மருத்துவ குணம் மிகுந்த மூலிகைத்தாவரங்களை கொண்டிருந்ததாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. இருப்பினும் தற்போது திருவேற்காடு பகுதி தேவி கருமாரியம்மன் கோயிலுக்காக புகழுடன் அறியப்படுகிறது.

தலபுராணக்கதைகளின்படி தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாக திரிந்ததாகவும் அந்த பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்கு குறி சொல்வதற்காக சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7வது நாளை தேவிகருமாரி தினமாக அனுஷ்டிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் ஐதீகக்கதை முடிகிறது. எனவே இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டுவருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

படம்

மாங்காடு காமாட்சியம்மன் கோயில்

மாங்காடு காமாட்சியம்மன் கோயில்

மாங்காடு காமாட்சியம்மன் கோயில் சென்னையின் புறநகர்ப்பகுதியில் மாங்காடு எனும் இடத்தில் உள்ளது. இந்த கோயிலில் சக்தியின் ரூபமான காமாக்ஷி அம்மன் குடி கொண்டுள்ளார்.

புராணிகக்கதைகளின்படி, கைலாச மலையில் சிவனும் பார்வதியும் விளையாடிக்கொண்டிருக்கையில் தேவியின் கை சிவனின் கண்களை மூடிவிட்டது. உடனே உலகம் முழுதும் இருண்டு போனதாம். தன் தவறை உணர்ந்து சிவனிடன் மன்னிப்பை வேண்டினாராம். பூலோகத்தில் பிறந்து தவம் செய்யுமாறும் சிவன் கூறவே பார்வதி தேவியும் இந்த மாங்காடு ஸ்தலத்தில் அவதரித்து பஞ்சாக்னி மூட்டி தவம் இருந்துள்ளார். பின்னர் சிவபெருமான் பார்வதிதேவிக்கு அருள்பாலித்து அவரை காஞ்சிபுரத்தில் மணம் புரிந்துள்ளார். இந்த மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் பார்வதி தேவி இடது காலில் நின்று, இடது கையை தலைக்கு மேல் உயர்த்தியவாறு, மறுகையில் ஜெபமாலையுடன் தவக்கோலத்தில் ரௌத்திர பாவத்தோடு காட்சி அளிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம்

பார்த்தசாரதி கோயில்

பார்த்தசாரதி கோயில்

விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பஹவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த பிரசித்தமான பார்த்தசாரதி கோயில் சென்னையில் பழமை வாய்ந்த திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளது. 8ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் ஆழ்வார் பாசுரங்களில் பாடப்பட்டிருக்கும் பெருமையையும் கொண்டுள்ளது. வைணவ மரபின் 108 திவ்ய ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்த்தசாரதி எனும் பெயருக்கு - பார்த்தனின்(அர்ஜுனன்) சாரதி (தேரோட்டி) என்பது பொருளாம். அதாவது மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாகவும் உபதேசியாகவும் இருந்து தர்மத்தை வென்றிட வைத்திட்ட பார்த்தசாரதி எனும் கிருஷ்ணபஹவானுக்காகவே இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னரால் இக்கோயில் கட்டத்துவங்கப்பட்டு சோழ மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கிருஷ்ணர், நரசிம்மர், ராமர் மற்றும் வராஹமூர்த்தி போன்ற மஹாவிஷ்ணு அவதாரங்களின் சிலைகளை இக்கோயிலில் பக்தர்கள் தரிசிக்கலாம். ராமர் மற்றும் நரசிம்மர் கோயில்களுக்குக்கு தனித்தனி வாசல்கள் உள்ளன.

சென்னை நகரின் மிகப்பழமையான வரலாற்றுச்சின்னமாகவும் ஆன்மீகத்தலமாகவும் இந்த பார்த்தசாரதி கோயில் வீற்றிருக்கிறது. பல நுணுக்கமான அலங்காரக்குடைவு வேலைப்பாடுகளை இக்கோயிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் தூண்களில் காணலாம். தென்னிந்திய கோயிற்கலை மரபின் எல்லா கலையம்சங்களையும் இந்த கோயிலிலுள்ள மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுர அமைப்பு, தீர்த்தக்குளம் போன்றவற்றில் காணலாம்.

தமிழ் மொழியின் நவீன கவிஞரும் சிந்தனையாளருமான மஹாகவி பாரதி தனது 39 வது வயதில் இந்த கோயில் யானைக்கு உணவு வழங்கும்போது எதிர்ப்பாராவிதமாக யானையால் தாக்கப்பட்டு உடல்நலம் குன்றி இறந்தார் என்பது - ஒரு முக்கியமான வரலாற்று தகவலும்கூட.

படம் : Mohan Krishnan

மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்

மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்

சென்னை மாநகரம் எனும் கருத்துருவம் உருவாவதற்கு முன்பே விளங்கி வந்த திருவான்மியூர் என்ற பகுதியில் இந்த மருந்தீஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிணிதீர்க்கும் கடவுளான மருந்தீஸ்வரராக சிவபெருமான் குடிகொண்டுள்ளார். அகஸ்திய முனிவருக்கு தெய்வீக மருந்து முறைகளை உபதேசித்ததால் சிவனுக்கு இப்பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பாடப்பெற்ற 275 சிவத்தலங்களில் ஒன்றாக இந்த மருந்தீஸ்வரர் கோயில் விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. இந்த சாலை அகலப்படுத்தப்படுவதற்கு முன்பு அதாவது ஒரு 25 வருடங்களுக்கு முன்னால் இதில் பயணித்தவர்களுக்கு நிச்சயம் இந்த சாலையின் வரலாற்று பழமை புரிந்திருக்கும்.

பரபரப்பான சென்னையின் நடுவே அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.

படம் : Mohan Krishnan

வடபழனி முருகன் கோயில்

வடபழனி முருகன் கோயில்

சென்னையிலுள்ள பழமையான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் முருகபக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி நாயக்கர் எனும் தீவிர முருகபக்தரால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. வறியவரான அவர் ஒரு ஓலைக்குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார்.

தலபுராணக்கதைகளின்படி நாயக்கர் ஒரு நாள் பூஜை செய்துகொண்டிருக்கும்போது அவருள் தெய்வீக சக்தி பரவுவதை உணர்ந்துள்ளார். சொல்வதெல்லாம் சித்திக்கும் சக்தியையும் அக்கணத்திலிருந்து பெற்றதை அவர் அறிந்துகொண்டார். இதன்பின்னர் அவர் திருத்தணி சென்று தனது நாக்கினை அறுத்து பலிகாணிக்கையாக செலுத்தி விட்டார். இப்படியாக இவரது கீர்த்தி பரவ ஆரம்பித்து குடிசைக்கோயில் நாளடைவில் சிறிய கோயிலாக மாறி தற்போது நாம் காணும் மிகப்பெரிய கோயிலாக வளர்ச்சியடைந்துள்ளது.

கோயிலுக்கென்று பிரத்யேக தீர்த்தக்குளத்துடனும் பெரிய வளாகத்தை கொண்டதாகவும் வடபழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த குளத்து நீருக்கு பிணிதீர்க்கும் குணம் உள்ளதாக ஐதீக நம்பிக்கை உள்ளது. முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன.

படம் : L.vivian.richard

அஷ்டலக்ஷ்மி கோயில்

அஷ்டலக்ஷ்மி கோயில்

அஷ்ட லட்சுமி கோயில் எனப்படும் இந்த பிரசித்தமான கோயில் பெசண்ட் நகர் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளது. செல்வத்துக்கும் செழிப்புக்கும் ஆன கடவுளாக பூஜிக்கப்படும் லட்சுமி தேவியின் எட்டு அவதார கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் இந்த லட்சுமி அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமான ஐதீகமாக பக்தர்களால கருதப்படுகிறது.

கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்த கோயில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தொகுதியில் உள்ள மஹாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவை வணங்கியபின்னர் மற்ற தெய்வ வடிவங்களை வணங்கவேண்டும் என்ற ஐதீக விதி இங்கு பின்பற்றப்படுகிறது. மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமி தெய்வங்கள் வீற்றுள்ளன. நான்காவது தளத்தில் தனலட்சுமி மட்டுமே வீற்றுள்ளார். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி தெய்வங்கள் வீற்றுள்ளன.

படம் : Sudharsun.j

திருநீர்மலை மலைக்கோயில்

திருநீர்மலை மலைக்கோயில்

தென் சென்னைப்பகுதியின் குரோம்பேட்டையிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் இந்த திருநீர்மலை எனும் மலைக்கோயில் உள்ளது. திவ்விய தேசங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த பெருமாள் கோயில் ஒரு சிறிய குன்றின் உச்சியில் வீற்றுள்ளது. மலை மீது உள்ள கோயிலில் ரங்கநாதப்பெருமாளும் அடிவாரத்தில் உள்ள கோயிலில் நீர்வண்ணப்பெருமாளும் வீற்றுள்ளனர். நீர்வண்ணப்பெருமாள் எனும் பெயர் ஷீராமரைக்குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியான சூழலில் இந்த மலைக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரிலேயே ஒரு தீர்த்தக்குளமும் காணப்படுகிறது. நீண்ட படிக்கட்டுகளின் மூலம் இந்த கோயிலுக்கு ஏறிச்செல்வது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

படம் : Chithiraiyan

குன்றத்தூர் முருகன் கோயில்

குன்றத்தூர் முருகன் கோயில்

சென்னையை ஒட்டியுள்ள குன்றத்தூர் எனும் பழமை வாய்ந்த ஊரில் இந்த குன்றத்தூர் முருகன் கோயில் உள்ளது. பல்லாவரத்திலிருந்து மேற்கே 8 கி.மீ தூரத்தில் குன்றத்தூர் அமைந்துள்ளது. இந்த முருகன் கோயிலில் சுப்ரமணியர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது தனித்தன்மையான அம்சமாக சொல்லப்படுகிறது. ஒரு பாறைக்குன்றின் மீது இந்த கோயில் அமைதியான பிரதேசத்தின் மத்தியில் வீற்றிருக்கிறது. சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கனால் இந்த கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சிறிய புராதனக்கோயிலில் பழமையும் வரலாறும் கலந்த வாசனை வீசுவதை பார்வையாளர்கள் உணர முடியும். முருகன் கோயில் மட்டுமல்லாமல் இதர சில பழமையான கோயில்களும் குன்றத்தூரில் அமைந்துள்ளன. பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமே இந்த குன்றத்தூர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழமையான இந்த திருத்தலம் இன்னும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டால் நன்று என்பது வரலாற்று ஆர்வலர்களின் ஆதங்கமாக இருந்துவருகிறது.

படம் : Kamal Photography

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

நங்கநல்லூர் பகுதியில் அமையப்பெற்றுள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் சென்னையின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றாகும். இங்கு உள்ள ஆஞ்சநேயர் சிலை 32 அடி உயரமும், 10 அடி சுற்றளவும், 10 அடி அகலமும், 150 டன் எடையுமாக மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

படம் : Ganeshk

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X