Search
  • Follow NativePlanet
Share
» »எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த உணவுகள் பிரபலம்?

எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த உணவுகள் பிரபலம்?

By

இந்திய உணவு வகைகள் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை கொண்டவை. அதேபோல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ஆயிரம் உணவு வகைகள் தினுசு தினுசாக பல ஆயிரம் முறைகளில் தயார் செய்யப்படுகின்றன.

இன்றைய தேதியில் பயணத்தின் மீது எல்லோருக்கும் ஆர்வமும், இதனால் இந்தியாவில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அப்படி ஊர் சுற்ற விரும்புவர்கள் அந்தந்த ஊர்களுக்கு பயணிக்கும்போது அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்க்காமல் திரும்புவது அந்த பயணத்தையே வீணாக்குவதற்கு சமம்.

நீங்கள் செல்லும் ஊர்களில் என்னென்ன உணவு வகைகள் பிரபலம், அவை எந்தெந்த இடங்களில் கிடைக்கும் போன்ற தகவல்களை தெரிந்துகொண்டு பயணிப்பது எவ்வளவு பயன் தரக்கூடியதாக இருக்கும்?

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திரானாலே கார சாரம்தான். அதனாலதான் தமிழ்நாட்டுல கூட எல்லா ஆந்திரா மீல்ஸ்லயும் கூட்டம் அம்முது. அதுவும் நம்மாளுங்க இஸ்ஸு இஸ்ஸுன்னு இஸ்ஸு கொட்டிக்கிட்டே சாப்பாட்ட வளைச்சு அடிக்கிற அழகே அழகுதான். அப்ப ஆந்திராவுக்கே போயி அவங்க கைமணக்க சாப்பிட்டா எப்படி இருக்கும்?! குண்டூர் சிக்கனுக்கு ஈடு இணையா எதையாவது சொல்ல முடியுமா?...அடா அடா அடா!!...நல்லா காரசாரமா அத பாத்தவுடனேயே நம்ம நாக்குல எச்சு ஊற ஆரம்பிச்சிரும்!..அப்படியே ஹைதராபாத் போனா ஹைதராபாத் பிரியாணி, பொட்டிவங்காயா (சின்னக் கத்திரிக்காய் வறுவல்), கோங்குரா ஊறுகாய் என்று ஒரு புடி புடிக்கலாம். பொதுவா ஆந்திராவுல சைவமோ, அசைவமோ ரெண்டுமே ஜோருதான்!!!

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

இந்திய உணவு வகைகளில் 1000 ஆண்டுகளாக பாரம்பரியத்தை இழக்காமல் அதே சுவையோடு இன்றும் தயார் செய்யப்படும் உணவு வகை மேற்கு வங்க உணவுகள்தான். எத்தனை எத்தனை வகைகள், அதில் எத்தனை மாறுபட்ட சுவைகள். பேட்கி பட்டூரி (வாழை இலையால் சுற்றப்பட்ட மீன்), டாப் சிங்க்ரி (இளநீர் உள்ளே வைத்து பரிமாறப்படும் இறால்கள்), கோஷா மாங்க்ஸோ (கார சாரமான சிக்கன்), இலிஷ் பாப்பா (வெகு பிரபலமான மீன் வகை) என்று வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் புதுப்புது உணவு வகைகளை சாப்பிடலாம். அதோடு உலகப்புகழ்பெற்ற ரசகுல்லா மேற்கு வங்கத்தின் தவிர்க்க முடியாத இனிப்பு வகை. எல்லாவற்றையும் விட ஆம்போரார் ஷோர்போத் எனும் மாங்காயால் செய்யப்படும் பானத்தின் ருசியில் நீங்கள் கரைந்து போவது உறுதி!

பீகார்

பீகார்

பீகார் உணவு எப்பவுமே சிம்பிளாவும், சூப்பராவும் இருக்கும். சுட்ட கொண்டக்கடலை நிறைஞ்சிருக்கும் லிட்டி சோக்கா எனும் உப்பு கோதுமை கேக் பீகார்ல ரொம்ப பிரபலம். அப்படியே அசைவத்துக்கு தாவுனா உருளைக்கிழங்கும், கர மசாலாவும் சேர்த்து செய்யப்படும் சாலான் அப்படிங்கற ஆட்டுக்கறி உணவு அட்டகாசம். அதோட மால்புவா, பாலுஷாஹி, சாத் திருவிழாவின் போது தயார் செய்யப்படும் தெக்குவா போன்ற இனிப்பு வகைகளை நீங்கள் பீகார் செல்லும்போது சுவைக்க மறந்துவிடாதீர்கள்.

அஸ்ஸாம்

அஸ்ஸாம்

அஸ்ஸாம் உணவுகள் பல உள்நாட்டு உணவு பாணிகளின் கலவையில், ஒவ்வொரு ஊரிலும் சிற்சில வேறுபாடுகளுடன், கொஞ்சம் வெளிநாட்டு பாதிப்போடும் செய்யப்படும் உணவு வகை. பொதுவாக காரம் குறைவாக இருந்தாலும் மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் சேர்த்து மணக்க மணக்க செய்யப்படுகின்றன அஸ்ஸாம் உணவுகள். இங்கு பரவலாக உட்கொள்ளப்படும் மீன் உணவுகளில் ரோஹு மீனின் தலையை கொண்டு செய்யப்படும் கார் என்ற மீன் உணவை சொல்லலாம். இது தவிர தேங்கா எனும் மீன் உணவு, பித்தா எனும் அரிசி கேக் போன்ற உணவுகளும் அஸ்ஸாமை நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.

கோவா

கோவா

கோவா அதன் கடல் உணவுகளுக்காகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளிடம் பிரபலம். இங்கு கிங் ஃபிஷ் என்றழைக்கப்படும் விஸ்வான் மீன் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதோடு இங்கு வவ்வால் மீன், டுனா மீன், கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் தேங்காய் பாலுடன் வித்தியாசமான முறையில் பரிமாறப்படுகிறது. இவைதவிர நண்டு, இறால் உள்ளிட்டவை இங்கு உண்ணப்படும் வழக்கமான கடல் உணவுகளாகும்.

கேரளா

கேரளா

'கேரளம் எந்து பறையும் போள்...' ...அதாவது கேரளாவென்று சொல்லும்போதே குழாய்ப்புட்டு, கொண்டக்கடலை, நேந்திரம் சிப்ஸ்தான் ஞாபகத்துக்கு வரும். கேரளாவில் தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதாலும், நீண்ட கடலோரப்பகுதியை இம்மாநிலம் கொண்டிருப்பதாலும் தேங்காய் கொண்டு செய்யப்படும் உணவுகளும், மீன்களும் இம்மக்களால் அதிகமாக உண்ணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வாஸ்கோடகாமாவை கேரளா மீதும், இந்தியா மீதும் மோகம்கொள்ள வைத்த கருமிளகு உள்ளிட்ட மசாலா வகைகள் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மீன்களை தவிர அசைவ உணவுகளில் மாட்டுக்கறியையும் இப்பகுதி மக்கள் ருசித்து உண்ணக்ககூடியவர்கள்.

குஜராத்

குஜராத்

குஜராத் மக்கள் பெரும்பாலும் சைவ உணவுகளையே அதிகமாக உண்ணக்கூடியவர்கள். இங்கு மிகவும் பிரபலமான குஜராத்தி தாலி ரொட்டி, பருப்பு, அரிசிச்சோறு, அப்பளம், சப்ஜி எனப்படும் குருமா போன்றவற்றுடன் சுவையாக சமைக்கப்படுகிறது. பொதுவாக வடக்கு குஜராத், கத்தியாவாட், கட்ச், தெற்கு குஜராத் ஆகிய நான்கு பகுதிகளில் மட்டுமே நீங்கள் குஜாராத்தி உணவு வகைகளை ருசிக்க முடியும். இந்த பகுதிகளுக்கு நீங்கள் மாம்பழ சீசனில் சென்றால் கெரி நோ ரஸ் என்ற மாம்பழ உணவு வகையை ஒரு கை பார்க்கலாம்.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்

உத்தரகண்ட் பனிமலைகள் சூழ்ந்த குளிர்ச்சியான பகுதி என்பதால் இங்கு சமைக்கப்படும் உணவில் பயிறு வகைகள், சோயாபீன்ஸ், காய்கறிகள் ஆகியவை சத்துக்காக அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவற்றோடு ஜாம்பு, டிம்மர், காந்த்ரைனி, பங்கீரா உள்ளிட்ட சுவையூட்டும் பொருட்களும் சேர்த்து சமைக்கப்படுகின்றன. இந்த உணவு வகைகளை நீங்கள் ருசி பார்க்க வேண்டுமென்றால் கட்வால் மற்றும் குமாவோன் பகுதிகளுக்கு செல்வதே சரியானதாக இருக்கும். இவற்றில் குறிப்பாக பல்வேறு காய்கறிகள், பசலை கீரை, வெந்தயம் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் 'சாக்' என்ற குமாவோனி உணவை நீங்கள் உத்தரகண்ட் செல்லும்போது மறந்து விடாதீர்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X