Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் நீளமான பாலங்கள்!

இந்தியாவின் நீளமான பாலங்கள்!

By Staff

தொல்பழங்கால பாலங்கள் மரங்களை கொண்டு உருவாக்கப்பட்டன. இன்றும் கூட இதுபோன்ற பாலங்களை ஒரு சில கிராமங்களில் காணமுடியும். இதற்காக ஒரே நீளமான, தென்னை, பனை போன்ற மரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

அதன்பிறகு கல்லாலான தூண்களின் மீது கல்லாலான அல்லது மர உத்தரங்களை வைத்துப் பாலங்கள் அமைக்கப்பட்டன. எனினும் இத்தகைய பாலங்களை அதிக தொலைவுக்கு உருவாக்குவது என்பது என்பது மிகவும் கடினம்.

ஆனால் இன்று தொழிற்நுட்பத்தின் உதவியுடன் நெடுந்தூர பாலங்களை நவீன வசதிகளுடன் அமைக்க முடிகிறது. அது நதி மீது கட்டப்பட்டாலும் சரி, கடல் மீது கட்டப்பட்டாலும் சரி புயல், மழை, சுனாமி யாவற்றையும் தாங்கும் விதமாக வலிமைமிக்கதாக இன்றைய நவீன தொழிற்நுட்பத்தில் அவற்றை உருவாக்க முடிகிறது.

பாந்த்ரா-வோர்லி சீ லிங்க்

பாந்த்ரா-வோர்லி சீ லிங்க்

இந்தியாவின் மிக நீண்ட பாலமான பாந்த்ரா-வோர்லி சீ லிங்க் ரூபாய் 1600 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சீ லிங்க் என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலம் பாந்த்ரா மற்றும் வோர்லி பகுதிகளுக்கு இடையே கடல் நீருக்கு மேலே 5600 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பு 1 மணிநேரமாக இருந்த பாந்த்ரா-வோர்லி இடையேயான பயண நேரம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. 2009-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தப் பாலத்தை தினமும் 37,500 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்தப் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன. இதுபோல இடைவழிகள் கொண்ட பாலங்கள் கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்தியாவில் அதிகமாக இதுபோன்ற பாலங்கள் கட்டப்படுவதில்லை. அப்படியிருந்தும் 8 இடைவழிகளுடன் உருவாக்க்கப்பட்டிருக்கும் மும்பை ஸீ லிங்க் ஒரு கட்டிடக் கலை அதிசயம்!

மகாத்மா காந்தி சேது

மகாத்மா காந்தி சேது

1982-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியில் திறந்துவைக்கப்பட்ட இந்த பாலம் அது கட்டப்பட்ட சமயத்தில் இந்தியாவின் நீண்ட பாலமாக கருதப்பட்டது. 5,575 மீட்டர் நீளத்தில் கங்கை நதி மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் பீகார் தலைநகர் பாட்னாவை ஹாஜிபூர் நகரத்துடன் இணைக்கிறது. கங்கா சேது என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த பாலம் இந்தியாவின் மிக நீண்ட ஆற்றுப்பாலமாக அறியப்படுகிறது.

விக்ரம்ஷீலா சேது

விக்ரம்ஷீலா சேது

மகாத்மா காந்தி சேது பாலத்தை போலவே விக்ரம்ஷீலா சேது பாலமும் கங்கை நதியின் குறுக்கேதான் கட்டப்பட்டுள்ளது. இது நாளந்தா பல்கலைகழகம் போலவே புகழ்பெற்ற பல்கலைகழகமாக விளங்கிய விக்ரம்ஷீலா பல்கலைகழகத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. பீகாரின் பாகல்பூர் நகருக்கு அருகில் அமையப்பெற்றுள்ள இந்த பாலம் 4.7 கி.மீ நீளம் கொண்டது.

வேம்பநாடு ரயில் பாலம்

வேம்பநாடு ரயில் பாலம்

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலமாக அறியப்படும் வேம்பநாடு ரயில் பாலம் கொச்சியின் எடப்பள்ளி ரயில் நிலையத்துக்கும், வல்லார்பாடம் தீவுக்கும் இடையே கட்டப்பட்டுள்ளது. 80 சதவிகித பாலம் நீருக்கு மேல் கட்டப்பட்டுள்ளதோடு இந்தப் பாலம் 3 அழகிய குட்டி தீவுகளை கடந்து செல்கிறது.

கோலியா பொமோரா சேது

கோலியா பொமோரா சேது

அஸ்ஸாமின் தேஜ்பூர் நகருக்கு அருகில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது கோலியா பொமோரா சேது பாலம். 3015 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தை கட்டிமுடிக்க 6 வருடங்கள் ஆனது.

கோதாவரி பாலம்

கோதாவரி பாலம்

ஆசியாவிலேயே ஜப்பானின் ஓஸாக்காவுக்கு அடுத்ததாக மிக நீண்ட சாலை மற்றும் ரயில் பாலமாக கோதாவரி பாலம் அறியப்படுகிறது. இது கோவூர் மற்றும் ராஜமுந்திரி நகரங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ளதால் கோவூர்-ராஜமுந்திரி பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 2.7 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலம் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தாங்கமைவுப்பாலமாகும்.

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

பாந்த்ரா-வோர்லி கடற்பாலத்துக்கு பிறகு இந்தியாவின் 2-வது பெரிய கடற்பாலமாகவும், இந்தியாவின் முதல் கடல் பாலமாகவும் பாம்பன் பாலம் அறியப்படுகிறது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். இந்தப் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (மியாமிக்கு அடுத்ததாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு இடையேயே இந்தப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.

புது யமுனா பாலம்

புது யமுனா பாலம்

அலஹாபாத்தில் அமைந்துள்ள புது யமுனா பாலம் 2004-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. யமுனா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் அலஹாபாத்தை, நைனி நகருடன் இணைக்கிறது.

சரைகாட் பாலம்

சரைகாட் பாலம்

அஸ்ஸாமின் குவஹாத்தி நகருக்கு அருகே கட்டப்பட்டுள்ளது சரைகாட் பாலம். அதோடு பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்கே கட்டப்பட்ட முத்த சாலை மற்றும் ரயில் பாலமாக சரைகாட் பாலம் அறியப்படுகிறது. 1,492 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் 1962-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

மால்வியா பாலம்

மால்வியா பாலம்

வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டே கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷராவதி பாலம்

ஷராவதி பாலம்

ஷராவதி ஆற்றின் குறுக்கே 1994-ஆம் கட்டப்பட்ட ஷராவதி பாலம் ஒரு ரயில்வே பாலமாகும். 2060 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் கொங்கன் ரயில்வே வழித்தடத்தில் அமைந்திருக்கிறது. இந்தப் பாலம் 1995-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகச் சிறந்த பாலங்களில் 2-வதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஐரோலி பாலம்

ஐரோலி பாலம்

மும்பை மற்றும் நவி மும்பை இடையே போக்குவரத்தை சுலபப்படுத்தவும், வசதியாக்கவும் ஐரோலி பாலம் கட்டப்பட்டுள்ளது. இது கட்டப்படுவதற்கு முன்பே வஷி என்னும் பெயருடைய பாலம் மும்பையையும், நவி மும்பையையும் இணைத்திருந்தது. எனினும் ஐரோலி பாலம் கட்டப்பட்ட பின்பு வாகன நெரிசல் பெருமளவு கட்டுக்குள் வந்தது.

பழைய நைனி பாலம்

பழைய நைனி பாலம்

அலஹாபாத்தில் அமைந்துள்ள பழைய நைனி பாலம் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிக நீளமான பாலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. யமுனா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஒரு டபுள் டெக்கர் பாலமாகும். இதில் மேல்தளம் ரயில் போக்குவரத்துக்கு பயன்பட, கீழ்தளமானது 1927-ஆம் ஆண்டிலிருந்து சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சம்ரவட்டம் மதகு பாலம்

சம்ரவட்டம் மதகு பாலம்

கேரளாவில் உள்ள சம்ரவட்டம் மதகு பாலம் பாரதப்புழா நதிக்கு குறுக்காக கட்டப்பட்டுள்ளது. 978 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் பொன்னணி மற்றும் திரூர் நகரங்களை இணைக்கிறது. இதன் மூலம் கொச்சி மற்றும் கோழிக்கோடு நகரங்களுக்கு இடையேயான தூரம் 38 கிலோ மீட்டர்கள் குறைக்கப்பட்டுவிட்டது. இந்தப் பாலம் தற்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களால் மே 2012-ல் திறந்துவைக்கப்பட்டது.

ஹௌரா பாலம்

ஹௌரா பாலம்

மேற்கு வங்கம் மற்றும் அதன் தலைநகர் கொல்கத்தா ஆகியவற்றின் அடையாளமாகவே இன்று ஹௌரா பாலம் பார்க்கப்படுகிறது. ஹூக்ளி நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஹௌரா மற்றும் கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. இந்தப் பாலம் ஜூன் 1965-ஆம் ஆண்டு ரபீந்திரநாத் தாகூரின் நினைவாக ரபீந்திர சேது என்று பெயர் மாற்றப்பட்டது. எனினும் இன்றும் இந்தப் பாலம் ஹௌரா பாலம் என்றே பிரபலமாக அறியப்படுகிறது. அதோடு இந்தப் பாலத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேலான வாகனங்கள் கடந்து செல்வதோடு, 1 லட்சத்து ஐம்பதாயிரம் பாதசாரிகள் இப்பாலத்தை கடந்து செல்கிறார்கள். இதன் காரணமாக உலகிலேயே இவ்வகை பாலங்களில் அதிகம் போக்குவரத்து நெரிசல் உள்ள பாலமாக ஹௌரா பாலம் கருதப்படுகிறது.

வித்யாசாகர் சேது

வித்யாசாகர் சேது

2-ஆம் ஹௌரா பாலம் என்று அழைக்கப்படும் வித்யாசாகர் பாலம் இரும்புக்கம்பிகளால் இழுத்து நிறுத்தப்பட்ட பாலமாகும். இதுபோன்று அமைக்கப்பட்ட பாலங்களில் வித்யாசாகர் சேது ஆசியாவின் நீளமான பாலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

விவேகானந்தா சேது

விவேகானந்தா சேது

ஹூக்ளி நதியின் குறுக்காக கட்டப்பட்ட பாலங்களில் ஹௌரா மற்றும் வித்யாசாகர் சேதுவை விட விவேகானந்தா சேது பாலம் மிகவும் பழமையானது. இந்தப் பாலம் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இரண்டுக்கும் பயன்பட்டு வருகிறது. எனினும் இந்தப் பாலம் பழமையின் காரணமாக வலுவிழக்க தொடங்கியதால் நிவேதிதா சேது என்ற புதிய பாலம் அதற்கருகிலேயே கட்டப்பட்டது.

காளி பாலம்

காளி பாலம்

காளி ஆற்றின் குறுக்கே 1986-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் கார்வார் நகரை விட்டு சற்று வெளியே உள்ளது. கர்நாடகாவை கோவாவுடன் இணைக்கும் இந்த பாலத்திலிருந்து கார்வார் கடற்கரை, சதாஷிவ்காட் கோட்டை, மலைகள், சூரிய அஸ்த்தமனம், சூரிய உதயம் , ஆறு, கடல், அருகிலுள்ள தீவுகள் என்று அனைத்து சுற்றுப்புற காட்சிகளையும் பரிபூரணமாக ரசிக்கலாம். அதோடு இங்கிருந்து பார்க்கும்போது காளி ஆறு கடலில் கலக்கும் அற்புத காட்சியை கண்களால் அள்ளிப்பருகலாம்.

நேத்ராவதி ரயில் பாலம்

நேத்ராவதி ரயில் பாலம்

கர்நாடகாவில் உள்ள நேத்ராவதி ரயில் பாலம் நேத்ராவதி ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள நீளமான ரயில் பாலங்களில் ஒன்றாக நேத்ராவதி ரயில் பாலம் கருதப்படுகிறது. அதோடு மங்களூரின் நுழைவாயில் என்ற பெருமையையும் நேத்ராவதி ரயில் பாலம் பெறுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X