Search
  • Follow NativePlanet
Share
» »ராஜஸ்தானின் மனதை அள்ளும் 15 அரண்மனைகள்!!!

ராஜஸ்தானின் மனதை அள்ளும் 15 அரண்மனைகள்!!!

By

ராஜஸ்தான் என்று சொன்ன மாத்திரத்திலேயே நினைவுக்கு வருவது பாலைவனமும், ஒட்டகமும்தான். ஆனால் அட்டகாச அழகுடன் காட்சியளிக்கும் ஏரிகளும், அவற்றின் நடுவே கம்பீரத் தொற்றத்துடன் மார்பிள் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அரண்மனைகளும் ராஜஸ்தானின் ராஜ வம்சத்தின் வீரம் செறிந்த வரலாற்றை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே எனும் பழமொழிக்கு ஏற்ப ராஜஸ்தானில் உள்ள வீடுகளும் இதைப்போன்ற கற்களைக் கொண்டே பெரும்பாலும் கட்டப்பட்டிருகின்றன.

இவை பரவலாக 15-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய ராஜஸ்தானிய கட்டிடக்கலையின் பின்பற்றியே கட்டப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ராஜஸ்தானின் மனதை அள்ளும் அரண்மனைகள் சிலவற்றை இங்கே காண்போம்.

ஆல்பெர்ட் ஹால், ஜெய்ப்பூர்

ஆல்பெர்ட் ஹால், ஜெய்ப்பூர்

ஆல்பெர்ட் சவாய் ராம் சிங் மஹாராஜாவால் 1886-ஆம் ஆண்டு 4 லட்ச ரூபாய் மதிப்பீடு கொண்ட பஞ்ச நிவாரணத் திட்டங்களின் ஒரு அங்கமாக ஆல்பெர்ட் ஹால் கட்டப்பட்டது. இது ஜெய்ப்பூரிலுள்ள அழகான பூங்காத்தோட்டங்களில் ஒன்றான ராம் நிவாஸ் பாக் எனப்படும் தோட்டத்தினுள் அமைந்துள்ளது. தற்சமயம் இந்த மாளிகையிலுள்ள அருங்காட்சியகத்தில் உலோகச்சிலைகள், ஓவியங்கள், தந்தங்கள், தரைவிரிப்புகள் மற்றும் வண்ணமயமான ஸ்படிகங்கள் போன்ற அற்புதமான சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அருகிலேயே ஒரு விலங்குக்காட்சியகம் மற்றும் ரவீந்த்ர ரங் மஞ்ச் எனப்படும் நாடக சபா மன்றம் ஆகியன அமைந்துள்ளன.

அமர்சிங்க் அரண்மனை, ஜெய்சல்மேர்

அமர்சிங்க் அரண்மனை, ஜெய்சல்மேர்

ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 7கி.மீ தூரத்தில், அமர் சாகர் ஏரியின் கரைப்பகுதியில் ராஜகம்பீரத் தோற்றத்துடன் அமர்சிங்க் அரண்மனை காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஏரியைச்சுற்றிலும் பாறையில் செதுக்கப்பட்ட பல மிருக உருவங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ராஜகுடும்பத்தினரை பாதுகாக்கும் சக்திகளாக நம்பப்பட்டிருக்கிறது. மேலும் ஐந்தடுக்குகளைக் கொண்டுள்ள அமர்சிங்க் அரண்மனையில் அற்புதமான சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளதை பயணிகள் காணலாம். அதோடு இந்த வளாகத்தில் பல தடாகங்கள், சுவர்கள் மற்றும் ஒரு சிவன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.

படம் : Flicka

கஜனேர் அரண்மனை, பிகானேர்

கஜனேர் அரண்மனை, பிகானேர்

பிகானேருக்கு அருகிலுள்ள கஜனேர் எனும் இடத்தில் ஒரு காட்டின் நடுவே உள்ள ஏரிக்கரையில் இந்த கஜனேர் அரண்மனை அமைந்துள்ளது. பிக்கானேர் அரசர்களின் வேட்டை மற்றும் பொழுதுபோக்கு மாளிகையாக இந்த அரண்மனை பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்கள், பலகணிகள், சரிகை வேலைப்பாட்டு மறைப்புகள் ஆகியவை நுணுக்கமான கலையம்சங்களுடன் காட்சியளிக்கின்றன.இந்த அரண்மனைக்கு வெளியே சுற்றுலாப்பயணிகள் இம்பீரியல் மணல் வாத்து எனும் புகலிடப்பறவையை பார்த்து ரசிக்கலாம். மேலும் இப்பகுதியில் கலைமான்கள், கருப்பு மான்கள், நில்கை மான்கள், சிறு மான்கள், நீல எருதுகள் மற்றும் புள்ளிமான்கள் ஆகியவற்றையும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கலாம்.

சிட்டி பேலஸ், ஜெய்ப்பூர்

சிட்டி பேலஸ், ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிட்டி பேலஸ் அரண்மனை ஒரு பிரபலமான பாரம்பரியச் சின்னமாகும். முபாரக் மஹால் என்றழைக்கப்படும் வரவேற்பு மண்டபம் இந்த அரண்மனையின் முகப்பில் அமைந்துள்ளது. தற்சமயம் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு மஹாராஜா 2-ஆம் சவாய் மான் சிங்'கிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ராஜ அணிகலன்கள், பனாரஸ் பட்டு புடவைகள் மற்றும் பஷ்மினா சால்வைகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதோடு மஹாராணி அரண்மனை எனும் மாளிகையில் வரலாற்றுகால ராஜபுதன ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு தந்தப்பிடிகளுடன் கூடிய போர்வாட்கள், சங்கிலி கவச ஆடைகள், போர்த்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், பீரங்கிகள், விஷப்பூச்சு கொண்ட கத்திகள் மற்றும் வெடிமருந்துப்பைகள் போன்ற பிரமிக்க வைக்கும் சேகரிப்புகளை பார்க்கலாம்.

படம் : McKay Savage

லால்கர் அரண்மனை, பிகானேர்

லால்கர் அரண்மனை, பிகானேர்

பிகானேர் நகரத்திலிருந்து 3கி.மீ தூரத்தில் உள்ள லால்கர் அரண்மனை 1902-ஆம் ஆண்டில் கங்கா சிங் எனும் மன்னரால் சிவப்புக்கற்களைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது. சிவப்புக்கல்லால் ஆன சரிகைச்சித்திர பின்னல் வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும் சல்லடைச்சாளரங்கள் இந்த அரண்மனையின் முக்கிய கவர்ச்சி அம்சமாகும். அதேபோல வெளிநோக்கி நீண்டு காட்சியளிக்கும் அலங்கார பலகணிகள் அவற்றின் கலையம்ச வேலைப்பாடுகள் மூலம் பயணிகளை பிரமிக்க வைக்கின்றன.

ஹவா மஹால், ஜெய்ப்பூர்

ஹவா மஹால், ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர் நகரின் பிரபலமான நினைவுச்சின்னமாக திகழும் இந்த ஹவா மஹால் ஒரு கவிஞராகவும் விளங்கிய சவாய் பிரதாப் சிங்மஹாராஜாவால் 1799-ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. லால் சந்த் உஸ்தா எனப்படும் கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்ட இந்த மாளிகை 950 ஜன்னல்களைக்கொண்டுள்ளது. இந்த சல்லடைத்துவார ஜன்னல்கள் வீதிகளில் நடைபெறும் ஊர்வலங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை அரண்மனைப் பெண்டிர் பார்த்து ரசிப்பதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை.

ஜக்மந்திர் பேலஸ், கோட்டா

ஜக்மந்திர் பேலஸ், கோட்டா

ஜக்மந்திர் பேலஸ் எழில் நிறைந்த செயற்கை ஏரியான கிஷோர் சாஹர் ஏரியின் நடுவில் அமைந்துள்ளது. சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை கம்பீரமான தோற்றத்தைக்கொண்டுள்ளது. அதோடு கிஷோர் சாஹர் ஏரியில் படகுச்சவாரி செய்யும்போது ஜக்மந்திர் அரண்மனையின் நிழல் ஏரியில் விழுவது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

ஆம்பேர் அரண்மனை, ஜெய்ப்பூர்

ஆம்பேர் அரண்மனை, ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர் நகரம் உருவாவதற்கு முன்பே ஆம்பேர் எனும் ஸ்தலம் கச்சவாஹா ராஜவம்சத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. இந்த பழம்பெரும் நகரில் மூத்தா எனும் ஏரிக்கரையின் மீது ஆம்பேர் அரண்மனை அமைந்துள்ளது. ஆம்பேர் கோட்டையின் ஒரு அங்கமாக இருக்கும் ஆம்பேர் அரண்மனையைத் தவிர மண்டபங்கள், சபைக்கூடங்கள், கோயில்கள் மற்றும் நந்தவனங்கள் ஆகியவை கோட்டையினுள் அமையப்பெற்றுள்ளன.

படம் : Rod Waddington

ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை, உதய்பூர்

ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை, உதய்பூர்

ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை உதய்பூரின் அழகிய ஏரியான பிச்சோலா ஏரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. தற்சமயம் ஒரு பாரம்பரிய விடுதியாக மாற்றப்பட்டுள்ள ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை, மேவார் அரசரான மஹாராணா ஃபதேஹ் சிங் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

படம் : Arian Zwegers

ஜல் மஹால், ஜெய்ப்பூர்

ஜல் மஹால், ஜெய்ப்பூர்

ஜல் மஹால் எனும் இந்த அழகிய அரண்மனை ஜெய்ப்பூரில் ஒரு சிறிய ஏரியின் நடுவே ஒஆவியம் போல காட்சியளித்துக்கொண்டிருகிறது. இந்த அரண்மனை ஜெய்ப்பூர் மன்னர்கள் வேட்டைக்கு செல்லும்போது தங்கும் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

படம் : vsvinaykumar

ஜக் மந்திர், உதய்பூர்

ஜக் மந்திர், உதய்பூர்

ஏரித்தோட்ட அரண்மனை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜக் மந்திர் அரண்மனை பிச்சோலா ஏரியிலுள்ள நான்கு தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை வளாகத்தில் ஒரு பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தோட்டத்தில் பயணிகள் பலவிதமான போகய்வில்லா பூக்கள், மல்லிகை மலர்கள், ரோஜாப்பூக்கள், காட்டரளி மரங்கள் மற்றும் பனை மரங்கள் போன்றவற்றை காணலாம்.

படம் : Philbrest

ஃபூல் மஹால் அரண்மனை, கிஷன்கர்

ஃபூல் மஹால் அரண்மனை, கிஷன்கர்

கிஷன்கரின் நகர மையத்தில் இருக்கும் ஃபூல் மஹால் அரண்மனை தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக போட்டிக் ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் அறைகள் எழில் ஓவியங்களாலும், பழமையான அரச மற்றும் பிரிட்டிஷ் தளவாடங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதமானது. இந்த ஹோட்டலில் ராஜஸ்தானிய இசை, நடனம் போன்ற ராஜஸ்தானிய கலை வடிவங்களை பயணிகள் அனுபவித்து லயிக்கலாம். அதோடு இளமை பொலிவோடு இருக்க விரும்பும் பயணிகளுக்கென்று இங்கு தினசரி யோகா வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

படம்

லேக் பேலஸ், உதய்பூர்

லேக் பேலஸ், உதய்பூர்

லேக் பேலஸ் பிச்சோலா ஏரியில் உள்ள ஜக் நிவாஸ் தீவில் அமைந்துள்ள கம்பீரமான மாளிகை ஆகும். இந்த அரண்மனையிலுள்ள அறைகள் இளஞ்சிவப்பு ரத்தினக்கற்கள், வண்ணந்தீட்டப்பட்ட கண்ணாடிகள், விதான வளைவு அமைப்புகள் மற்றும் பசுமையான தாமரை இலைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது தற்சமயம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றமடைந்துள்ளது.

உமைத் பவன் அரண்மனை, ஜோத்பூர்

உமைத் பவன் அரண்மனை, ஜோத்பூர்

உமைத் பவன் அரண்மனையானது அதை உருவாக்கிய மஹாராஜா உமைத் சிங் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அழகிய அரண்மனை சித்தார் மலையின்மீது அமைந்திருப்பதால் சித்தார் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. தற்சமயம் இந்த அரண்மனையின் ஒரு பகுதி பாரம்பரிய விடுதியாகவும் மற்றொரு பகுதி அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

படம் : Ajajr101

சிட்டி பேலஸ், உதய்பூர்

சிட்டி பேலஸ், உதய்பூர்

உதய்பூரிலுள்ள சிட்டி பேலஸ் ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய அரண்மனையாக கருதப்படுகிறது. அதோடு இது ஒரு மலைக்குன்றின் உச்சியின் கட்டப்பட்டுள்ளதால் இங்கிருந்து மேலிருந்து கீழாக மொத்த உதய்பூர் நகரத்தையும் பார்க்க முடிகிறது. இந்த சிட்டி பேலஸ் அரண்மனை வளாகம் 11 அரண்மனைகளை தன்னுள் கொண்டுள்ளது.

படம் : Shahbaz Khan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X