உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்

Written by:
Updated: Tuesday, November 12, 2013, 14:05 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

நவராத்திரி நாடு முழுவதும் தசரா, துர்கா பூஜை என்று பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. எனினும் மைசூர் நகரத்துக்கும், இங்கு கொண்டாடப்படும் தசரா திருவிழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

புராணம் சொல்வது என்ன?

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் 8 நாட்கள் போர் செய்து 9-ஆம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்று புராணம் கூறுகிறது.

அப்படி அசுரனை துர்காதேவி வதம் செய்தது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி (வெற்றி தசமி) என்றும் வழங்கப்படலாயிற்று.

துர்கா தேவி வதம் செய்த எருமைத்தலை அசுரன் மகிஷாசுரனின் பெயராலேயே மைசூர் நகரம் 'மஹிஷுர்' என்று பெயர்பெற்று பின்பு மைசூர் என்றாகிவிட்டது. எனவே இங்கு நவராத்திரியின் 9 நாட்களும், 10-ஆம் நாளான விஜயதசமியும் 'தசரா' என்ற பெயரில் வெகு விமரிசையாகவும்,. உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

திருவிழா கொண்டாட்டம்!

தசரா திருவிழாவின் முதல் நாள் மைசூர் ஒடேயர் (உடையார்) அரச பரம்பரையின் தற்போதைய அரசரும், அரசியும் சாமுண்டி மலைகளில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலுக்கு சென்று துர்கா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார்கள்.

அதன் பின்னர் அரசரும், அரசியும் பாரம்பரிய அரச உடையில் மைசூர் அரண்மனைக்கு செல்வார்கள். அப்போது பழங்கால வழக்கப்படி 'பராக், பராக்' சொல்லி ஒடேயர் வம்சத்தின் தற்போதைய பிரதிநிதிகளை வரவேற்று பல ஆண்டுகளாக தசராவின் போது நடந்து வரும் ராஜ்ய சபா (அரச தர்பார்) நடந்தேறும்.

மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்

மேலும் 9-ஆம் நாளான மஹாநவமி அன்று அரசர் காலத்து வீர வாள் பூஜைகள் செய்யப்பட்டு யானைகள், ஒட்டகங்கள், குதிரைகளுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.

அதுமட்டுமல்லாமல் தசரா கொண்டாடப்படும் 10 நாட்களும் மைசூர் அரண்மனை 1 லட்சம் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு வானிலிருந்து இறங்கி வந்த நட்சத்திர கூட்டம் போல காட்சியளிக்கும்.

தசரா ஊர்வலம் அல்லது ஜம்பூ சவாரி

தசரா திருவிழாவின் முக்கிய அம்சமாக 10-ஆம் நாளான விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி என்று பிரபலமாக அழைக்கப்படும் தசரா ஊர்வலம் நடத்தப்படுகிறது.

அப்போது நன்றாக அலங்கரிக்கப்பட்ட யானையின் தங்க அம்பாரியில் சாமுண்டேஸ்வரி அம்மனின் சிலை வைக்கப்பட்டு மைசூர் நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.

இந்த ஊர்வலம் ஒடேயர் அரசரும், அரசியும், மற்ற விருந்தினர்களும் அம்மன் சிலையை வழிபட்ட பிறகு மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கி பண்ணிமண்டபத்தில் சென்று முடியும்.

மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்

இதைத்தொடர்ந்து மாலையில் பண்ணிமண்டபத்தில் 'பஞ்சின கவாயத்து' என்று கன்னடத்தில் அழைக்கப்படும் தீப ஒளி அணிவகுப்பு நடத்தப்படும்.

இவ்வணிவகுப்பு மக்கள் வெள்ளத்தின் நடுவே வானவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஆரவாரத்துடனும், வெகு உற்சாகத்துடனும் நடைபெறும்.

அதுமட்டுமல்லாமல் பண்ணிமண்டபத்தில் அமைந்துள்ள புனித வன்னி மரத்துக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இதுபோன்ற வன்னி மரத்தில்தான் மகாபாரத காலத்தில் தங்களின் ஒருவருட அஞ்ஞான வாசத்தின் போது பாண்டவர்கள் ஆயுதத்தை மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

தசரா பொருட்காட்சி

தசரா திருவிழாவின் போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் கவர்வது தசரா பொருட்காட்சிதான். இந்த பொருட்காட்சி மைசூர் அரண்மனைக்கு எதிரே உள்ள தொட்டக்கெரே மைதானத்தில் நடத்தப்படுகிறது.

இது தசரா திருவிழாவில் தொடங்கி டிசம்பர் வரை தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெறுகிறது. இதில் பல விதமான வீட்டு உபயோக பொருட்கள், உடைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை பார்க்க முடியும்.

அதோடு சாதாரணமாக எல்லா பொருட்காட்சிகளிலும் காணக்கூடிய இராட்டினம் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளை நீங்கள் இங்கு விளையாடி மகிழலாம்.

இதர அம்சங்கள்

தசரா திருவிழா மைசூரின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக மைசூர் அரண்மனையை தவிர ஜகன்மோகன் அரண்மனை, கலாமந்திர், கானபாரதி, சிக்க கடியாரா, குப்பண்ணா பார்க், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மைசூரின் தசரா கொண்டாட்டங்கள்

இவைதவிர உணவுத்திருவிழா, தசரா திரைப்பட விழா, மல்யுத்தப்போட்டி, மலர் கண்காட்சி, தசரா பட்டம் விடும் திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்களை மைசூரின் பல்வேறு பகுதிகளில் பார்த்து ரசிக்க முடியும்.

இந்த கலை விழாக்களையெல்லாம் பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்காக சிறப்பு பேருந்துகளை விழா சமயத்தில் கர்நாடக அரசு இயக்குகிறது.

கலை நிகழ்ச்சிகளுக்கான கட்டணம்

தசரா திருவிழாவின் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு நுழைவுக்கட்டணமாக எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அதே வேளையில் தங்க அட்டையும் விழா சமயத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தங்க அட்டையை வைத்துகொண்டு 2 பெரியவர்கள் மற்றும் 6 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை உள்ளிட்ட 3 நபர்கள் 11 சுற்றுலாப் பகுதிகளுக்கு சென்று வரலாம் என்பதோடு, ஜம்பூ சவாரி மற்றும் தீப ஒளி அணிவகுப்பில் சிறப்பு இருக்கைகளையும் பெற முடியும்.

இதை mysoredasara.gov.in என்ற இணையதளத்தில் 7500 ரூபாய் செலுத்தி நீங்கள் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

எங்கு தங்கலாம்?

தசரா திருவிழாவுக்காக பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் மைசூர் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் எண்ணற்ற ஹோட்டல்கள் மைசூரில் அமையப்பெற்றுள்ளன. அதிலும் ஐஸ்வர்யா ரெசிடன்சி, ஜிஞ்சர் மைசூர் ஹோட்டல், பாய் விஸ்டா, ஹோட்டல் ரீகாலிஸ், ஹோட்டல் ஆதி மேனர் போன்ற ஹோட்டல்கள் மைசூர் அரண்மனைக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கின்றன.

Please Wait while comments are loading...