Search
  • Follow NativePlanet
Share
» »ஒரிஜினல் கட்டிடங்களும் அவற்றின் டூப்ளிகேட் வடிவங்களும்!!!

ஒரிஜினல் கட்டிடங்களும் அவற்றின் டூப்ளிகேட் வடிவங்களும்!!!

By

இந்திய நாடு ஆன்மிகத்துக்காகவும், கோயில்களுக்காகவும் அறியப்படும் அதேவேளையில் அந்தக் கோயில்களின் கட்டிடக்கலைக்காகவும் புகழ்பெற்றது.

அது ஹிந்து கோயிலாகவோ, கிறிஸ்தவ தேவாலயமாகவோ, இஸ்லாமிய மசூதியாகவோ என்று எதுவாக இருப்பினும் தனித்துவமான கட்டிட மரபை பின்பற்றி கட்டப்பட்டவையாகும்.

அப்படி கட்டப்பட்டுள்ள சில ஆலயங்களும், ஏன் சில கல்லறைக் கட்டிடங்களும் கூட நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் ஈர்த்து வருகின்றன.

இப்படியாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழும் சில கட்டிடங்கள் போலவே மாதிரி வடிவங்களும் பிற இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தியாவின் 5 முக்கிய ஆன்மிக, சுற்றுலாச் சிறப்பு வாய்ந்த சில கட்டிடங்கள் பற்றியும், அவற்றின் நகல் வடிவங்கள் குறித்தும் காண்போம்.

தாஜ் மஹால், ஆக்ரா

தாஜ் மஹால், ஆக்ரா

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், முகாலயப்பேரரசர் ஷாஜஹானால் அவரது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறை மாளிகையாகும். 1632-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

படம் : amaldla

பீபீ கா மஃக்பாரா, ஔரங்காபாத்

பீபீ கா மஃக்பாரா, ஔரங்காபாத்

ஔரங்காபாதிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நினைவிடம் ஔரங்கசீப்பின் மகனான இளவரசர் ஆஸாம் ஷா என்பவரால் அவரது தாய் பேஹம் ரபியா துரானிக்காக கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடத்தை அதா உல்லா எனும் கட்டிடக்கலை நிபுணர் தாஜ் மஹாலைப்போன்றே உருவாக்க முயன்றிருப்பது தெளிவாக புரிந்தாலும், அதில் அவர் வெற்றி பெற வில்லை. தாஜ் மஹால் உருவாக்கும் பிரமிப்பையும் மலைப்பையும் இந்த நினைவகம் ஏற்படுத்தவில்லை. ஆகவே இது தாஜ் மஹாலை பின்பற்றிய ஓரு நகல் என்ற பெருமையை மட்டுமே வரலாற்றில் பெற்றுள்ளது.

படம் : Aur Rang Abad

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப், அம்ரித்ஸர்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப், அம்ரித்ஸர்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தக் கோயிலின் மேல்தளப்பகுதியை 400 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளால் போர்த்தினார். அதற்குபிறகு இது தங்கக்கோயில் என்றழைக்கப்பட்டு வருகிறது.

படம் : Ken Wieland

துர்கியானா கோயில், அம்ரித்ஸர்

துர்கியானா கோயில், அம்ரித்ஸர்

துர்கியானா கோயில் அல்லது லட்சுமி நாராயண் கோயில் என்று அழைக்கப்படும் இந்த பிரசித்தமான கோயில் அம்ரித்ஸர் நகரில் 20-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. சீக்கியர்களின் பிரபல தங்கக்கோயிலை ஒத்திருக்கும் வடிவமைப்புடன் இந்தக் கோயில் கட்டப்பட்டிருந்தாலும் இது துர்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்து கோயிலாகும்.

படம் : Guilhem Vellut

ஜகன்னாதர் கோயில், பூரி

ஜகன்னாதர் கோயில், பூரி

ஒடிஷாவின் மிகப் பிரபலமான கோயில்களுள் ஒன்றான ஜகன்னாதர் கோயில் பூரி நகரில் அமைந்துள்ளது. கண கணவென்ற மணியோசை, 65 அடி உயரத்துடன் கூடிய மிகப் பெரிய கூம்பு வடிவ கோபுரம், கிருஷ்ண பகவானின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் தூண்கள் போன்றவை ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்களை ஜகன்னாதர் கோயிலுக்கு வரச்செய்கின்றன. இங்கு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ரத யாத்திரை என்றழைக்கப்படும் தேர்த்திருவிழாவின் போது நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

படம்

ஜகன்னாத் கோயில், சென்னை

ஜகன்னாத் கோயில், சென்னை

ஒடிஷாவிலுள்ள பூரி ஜகன்னாதர் கோயிலுக்கு சென்றுவரவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காகவே அதன் நகல் வடிவமாக சென்னையில் ஜகன்னாத் கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இது கிழக்குக்கடற்கரை சாலையிலிருந்து சற்றே விலகி ரெட்டிகுப்பம் சாலையில் கானாத்தூர் கிராமப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. பூரி ஜகன்னாதர் கோயிலை எல்லாவிதத்திலும் ஒத்திருக்கும் இக்கோயில் வெண் சலவைக்கற்களாலும், கருப்புப்பளிங்குகற்களாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதோடு இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் விக்கிரகங்களும் பூரி கோயிலில் உள்ளவற்றைப்போன்றே வேப்ப மரத்துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஐயப்பன் கோயில், சபரிமலை

ஐயப்பன் கோயில், சபரிமலை

கேரளாவின் பத்தனம்தித்தா பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் ‎புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலமாக சபரிமலை அறியப்படுகிறது.

படம் : AnjanaMenon

மினி சபரிமலை, மும்பை

மினி சபரிமலை, மும்பை

கேரளாவின் சபரிமலை கோயிலுக்கு பிறகு வெளிமாநிலங்களில் அமையப்பெற்ற ஐயப்ப கோயில்களிலேயே தொன்மையான கோயில் மும்பையில் உள்ள 'மினி சபரிமலை ஸ்ரீ ஐயப்பா கோயில்'. இந்த கோயில் மும்பையின் மேற்கு பகுதியில் கஞ்சூர்மார்க் என்ற பகுதியில் குன்றுகளும், பள்ளத்தாக்குகளும் சூழ அமைந்திருக்கிறது. மினி சபரிமலை கோயிலுக்கு மும்பையின் பல பகுதிகளிலிருந்து எண்ணற்ற மாநகராட்சி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மினி சபரிமலை கோயிலை டேக்சி மூலமாகவும் அடையலாம்.

குருவாயூரப்பன் கோயில், குருவாயூர்

குருவாயூரப்பன் கோயில், குருவாயூர்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் 4-வது கோயில் எனும் பெருமையை இந்த செல்வம் மிகுந்த குருவாயூரப்பன் கோயில் பெற்றுள்ளது. மஹாவிஷ்ணுவே பூமியில் வீற்றிருக்கும் ‘பூலோக வைகுண்டம்' என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த ஆலயத்தை தரிசிப்பது மிகப்புண்ணியமான ஒன்றாக நம்பப்படுகிறது.

படம் : Aruna

ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் கோயில், டெல்லி

ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் கோயில், டெல்லி

1963-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் கிழக்கு டெல்லி பகுதியிலுள்ள மயூர் விஹார் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கேரளாவின் குருவாயூரப்பன் கோயிலைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் மூலமாக மருத்துவ சேவை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் போன்றவை வழங்கப்படுகின்றன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X