Search
  • Follow NativePlanet
Share
» »உயிர் போவதற்குள் இந்த இடங்களை பார்த்துவிடுங்கள்!!!

உயிர் போவதற்குள் இந்த இடங்களை பார்த்துவிடுங்கள்!!!

By

இமயம் முதல் குமரி வரை நிறைந்து கிடக்கும் இயற்கை பொக்கிஷங்களை பார்ப்பதற்கு நமக்கு ஒரு ஆயுள் போதாது.

பனிமூடிய சிகரங்கள் ஆகட்டும், அட்டகாச அழகுடன் வீற்றிகுக்கும் அற்புத தீவுகளாகட்டும், ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவிகளாகட்டும், பூக்கள் நிரம்ப சிரிக்கும் பள்ளத்தாக்குகளாக இருக்கட்டும் எண்ணிலடங்கா அதிசயங்கள் இந்தியாவில் கொட்டிக்கிடக்கின்றன.

இயற்கையின் தன்னிகரில்லா படைப்புகளாக திகழும் இந்த அற்புதங்களை நாம் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும்.

ஹல்தியாவின் கங்கா கழிமுகப் பகுதி

ஹல்தியாவின் கங்கா கழிமுகப் பகுதி

சுந்தர்வன கழிமுகப் பகுதி அல்லது கங்கா-பிரம்மபுத்திரா கழிமுகப் பகுதி என்று அழைக்கப்படும் இந்த கழிமுகப் பகுதி (டெல்டா பகுதி) உலகின் மிகப்பெரிய கழிமுகப் பகுதியாக அறியப்படுகிறது. இந்த கழிமுகப் பகுதி கங்கா, பிரம்மபுத்திரா, பத்மா, ஹூக்ளி, யமுனா ஆகிய ஐந்து மிகப்பெரிய நதிகளால் உருவானது ஆகும்.

படம்

முன்ஷியாரியின் பனிமூடிய சிகரங்கள்

முன்ஷியாரியின் பனிமூடிய சிகரங்கள்

முன்ஷ்யாரி எனும் இந்த பனிமலை பிரதேசம் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன. கோரி கங்கா எனும் ஆறும் இப்பகுதியில் உற்பத்தியாகிறது. இங்கு அமையப்பெற்றுள்ள முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

படம்

கிரேம் லியாத் ப்ராஹ்

கிரேம் லியாத் ப்ராஹ்

மேகாலயா மாநிலத்தின் ஜெயின்டியா மலைப்பகுதியில் கிரேம் லியாத் ப்ராஹ் குகை அமைந்துள்ளது. 31 கி.மீ நீளம் கொண்ட இந்தக் குகை இந்தியாவின் நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேபோல அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் எண்ணற்ற குகைகள் மேகாலயா மாநிலத்தில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

படம் : Biospeleologist

அந்தமானின் பவழப்பாறைகள்

அந்தமானின் பவழப்பாறைகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பவழப்பாறைகளை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவதுகூட தெரியாது. அதிலும் குறிப்பாக ஜாலி பாய் தீவில் சிறிய படகுகளில் பயணம் செய்து இந்தப் பவழப்பாறைகள் கண்டு ரசிக்க முடியும். இந்த சிறு படகுகளின் அடிப்பாகம் ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் தெளிவாக பார்க்கலாம்.

படம் : Ritiks

ஷான்ஸ்கர் பள்ளத்தாக்கு

ஷான்ஸ்கர் பள்ளத்தாக்கு

ஜம்மு & காஷ்மீர் மநிலத்தின் வடக்கு பகுதியில் கார்கில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷான்ஸ்கர் கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டு தோறும் சுமார் 8 மாதங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு உலகின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். 4.401 மீ மற்றும் 4.450 மீ வரையிலான உயரத்தில் அமைந்துள்ள இரண்டு சிறிய ஏரிகள் இப்பகுதியில் உள்ளன. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவிள் கவரும் டிராங் - டரங் பனியாறு ஷான்ஸ்கர் செல்லும் வழியில் காணப்படுகின்றது. சுரு பள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள இந்த இடம், கார்கில் மற்றும் கம்பீரமான இமயமலையின் அழகான காட்சியை நமக்கு அளிக்கின்றது.

படம் : Corto Maltese 1999

மாஜூலி தீவு

மாஜூலி தீவு

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த தீவுப்பகுதி உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவு எனும் பெருமையை பெற்றிருக்கிறது. இந்தத் தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது. ஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம்.

படம் : Kalai Sukanta

தனுஷ்கோடி கடற்கரை

தனுஷ்கோடி கடற்கரை

இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே அமையப்பெற்றுள்ள தனுஷ்கோடி கடற்கரைதான் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நில எல்லையாக இருக்கிறது. இந்தக் கடற்கரை பகுதியில் நீங்கள் ஆக்ரோஷம் மிகுந்த இந்தியப்பெருங்கடல், ஆழமற்ற அமைதியான வங்காள விரிகுடாவுடன் கலக்கும் அற்புதக் காட்சியை பார்த்து ரசிக்கலாம்.

படம்

ஜெய்சல்மேரின் சாம் மணற்குன்றுகள்

ஜெய்சல்மேரின் சாம் மணற்குன்றுகள்

சாம் மணற்குன்றுகள் ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த குன்றுகளின் நிழல் தோற்றத்தை பார்த்து ரசிப்பதற்கு சூரியன் மறையும் மாலை நேரம் மிகப்பொருத்தமானதாகும். மணற்குன்றுகளின் மத்தியில் ஜீப் மற்றும் ஒட்டக சவாரி, சொக்கப்பனை நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு பயணிகளுக்காய் காத்திருக்கும் புதுமையான அனுபவங்கள். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இப்பகுதியில் பாலைவனத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அச்சமயம் இந்தப் பகுதியே ஒரு பாரம்பரிய பண்பாட்டு மையமாய் உருமாற்றம் பெறுகிறது. பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள், ஒட்டகப்பந்தயங்கள் மற்றும் திறந்தவெளி நிகழ்த்துகலை வடிவங்கள் யாவும் பாலைவனத் திருவிழாவின் முக்கியமான சிறப்பம்சங்களாகும்.

படம் : sushmita balasubramani

தூத்சாகர் அருவி

தூத்சாகர் அருவி

உலகின் மிக அழகிய அருவிகளில் ஒன்றாகவும், 310 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் இந்தியாவின் 5-வது உயரமான அருவியாகவும் தூத்சாகர் அருவி கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து ஹூப்ளி, தர்வாத், அல்நாவர், லோண்டா, தீனைகாட், கேஸ்டில் ராக், தூத்சாகர் ரயில் பாதையில் தூத்சாகர் அருவியை அடைய முடியும். தூத்சாகர் செல்லும் சாலை காட்டு வழியாக இருப்பதாலும், பல இடங்களில் சாலையை நதி கடந்து செல்வதாலும் கார் போன்ற வாகனங்களில் தூத்சாகர் அருவிக்கு பயணிப்பது ஆபத்தில் முடியலாம்.

படம் : Purshi

மாத்தேரான்

மாத்தேரான்

தலை சுற்ற வைக்கும் 2,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலாத்தலம் மும்பையிலிருந்து 87 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மும்பை, புனே போன்ற பரபரப்பான சந்தடி நிறைந்த பெரு நகரங்களுக்கு வெகு அருகில் அமைந்துள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களுக்கான சிற்றுலாத்தலமாக இது புகழ்பெற்றுள்ளது. வெயிலிலிருந்து தப்பிக்கவோ, இயற்கையை ரசிக்கவோ, சந்தடியிலிருந்து விலகி அமைதியை நாடவோ இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலம் மிக பொருத்தமாக உள்ளது. ஒரு முறை வந்தபின் திரும்ப எப்போது வரலாம் என்று யோசித்தபடியே திரும்புவீர்கள். அதுதான் இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலத்தின் மகிமை.

படம் : Omkar A Kamale

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X