Want to share your reaction with friends?
செயின் மரம், வயநாடு
செயின் மரம் என்றழைக்கப்படும் இந்த ஸ்தலமானது சுவாரசியமான கதையை தன் பின்னணியில் கொண்டுள்ளதால் வயநாடு பகுதியிலுள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு பெரிய அத்திமரம் இந்த ஸ்தலத்தின் பிரதான விசேஷமாக பார்வையாளர்களை கவர்கிறது.
இப்பகுதியில் வழங்கி வரும் கதைகளின்படி, காலனிய ஆட்சியில் ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் உள்ளூர் ஆதிவாசி இளைஞனின் துணையுடன் இப்பகுதியை (வயநாடு) சிரமப்பட்டு அடைந்துள்ளார்.
ஆனால் ஒரு அழகிய மலைப்பிரதேசத்தை கண்டுபிடித்த பெருமை யாவும் தனக்கே சேரவேண்டும் என்ற எண்ணத்தில் திரும்பும் வழியில் அந்த வழிக்காட்டி இளைஞனை கொன்று விடுகிறார்.
அப்படி கொல்லப்பட்ட இளைஞனின் ஆவியானது நெடுநாள் இப்பகுதிக்கு வரும் மக்களை அச்சுறுத்தியவாறு இருந்துள்ளது. இறுதியில் ஒரு பூசாரி தன் சக்தியின் மூலம் அந்த ஆவியை இங்குள்ள அத்தி மரத்தில் ஒரு செயினால் கட்டிவைத்து விட்டார்.
எனவே அந்த அத்தி மரத்திற்கு செயின் மரம் என்ற பெயர் நாளடைவில் ஏற்பட்டு விட்டது. இன்றும்கூட ஒரு செயினை (சங்கிலி) இந்த அத்தி மரத்தில் தொங்குவதை பார்க்கலாம்.
இது போன்ற கதைகளை நம்புகிறோமோ இல்லையோ, இந்த இடத்தின் இயற்கை எழிலும் வனப்பும் நம் கண்களை சங்கிலி ஏதும் இல்லாமலே கட்டிப்போடுவதால் வயநாடு வரும்போது மறக்காமல் இந்த ‘செயின் ட்ரீ’ ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.



