பிர்லா மந்திர், டெல்லி

டெல்லியிலுள்ள பிர்லா மந்திர் கோயில் லட்சுமி நாராயண் மந்திர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மிகப்பிரசித்தமான இந்த கோயில் 1939ம் ஆண்டில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஜி.டி. பிர்லாவால் கட்டப்பட்டு மஹாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.

டெல்லி மாநகரிலுள்ள அழகிய கோயில்களில் ஒன்றாக புகழ் பெற்றிருக்கும் பிர்லா மந்திர்  செல்வத்தின் கடவுளான லட்சுமிக்கும் அவரது துணைவர் நாராயணனுக்குமான ஆலயமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதானக்கோயிலை சுற்றி கிருஷ்ணபஹவான், விநாயகர், ஹனுமான் மற்றும் புத்தர் போன்றோருக்கான சிறு சன்னதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சக்தியின் வடிவமான துர்க்கையம்மனுக்கும் தனியாக ஒரு சிறு கோயில் இந்த வளாகத்தில் உள்ளது.

ஹிந்து கோயிற்கலை மரபுப்படி நகர பாணியில், பண்டிட் விஷ்வநாத் சாஸ்திரி என்பவரது ஆலோசனையின்படி இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. எல்லா மதத்தாரும் இனத்தாரும் இந்த கோயிலில் வழிபட அனுமதிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையோடு இந்த கோயிலை திறந்து வைக்க மஹாத்மா காந்தி சம்மத்தித்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். 

7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட கோயில் வளாகம் பசுமையான பூச்செடிகள் மற்றும் நீரூற்றுகள்  நிரம்பிய நந்தவனப்பகுதியையும் கொண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். குறிப்பாக தீபாவளி மற்றும் ஜன்மாஷ்டமி பண்டிகை தினங்களில் இங்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குழுமுகின்றனர்.  

கன்னாட் பிளேஸ்’க்கு அருகிலுள்ள மந்திர் மார்க் எனும் பகுதியில் அமைந்துள்ள பிர்லா மந்திர் ஆலயத்திற்கு செல்ல சுலபமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. இக்கோயில் வாரம் முழுவதும் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை திறந்துள்ளது.

Please Wait while comments are loading...