வருடத்தின் எல்லா மாதங்களுமே ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்திற்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளன. இருப்பினும் சாகசப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்ற குளுமையான உலர்ந்த சூழல் குளிர்காலத்தில் காணப்படுகிறது. இப்பருவத்தில் சற்றே குளிர் அதிகமாக இருப்பது போன்றும் தோன்றலாம். கோடைக்காலத்திலும் இப்பகுதி பார்ப்பதற்கு ரம்மியமாகவே காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் தூய்மையாய் ஜொலிக்கும் இயற்கையின் அழகை தரிசித்து மகிழலாம். பொதுவாக ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் சுற்றுலா விஜயம் செய்யலாம்.
ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தின் எல்லாப்பகுதிகளுமே கோடைக்காலத்தில் மிதமான சூழலை கொண்டிருக்கின்றன. உஷ்ணம் தெரியாத அளவுக்கு மிதமான குளுமையை இக்காலத்தில் அனுபவிக்கலாம். மாசுபடாத இந்த நிலப்பகுதிகளில் சூரியனின் கதிர்கள் ரம்மியமாக விழுகின்றன. புரண்டு வழியும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் பசுமலைகள் போன்றவை இக்காலத்தில் அற்புதமான அழகுடன் பயணிகளை வரவேற்கின்றன.
தென் மேற்கு பருவ மழையின் மூலம் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் நீடிக்கிறது. உலகிலேயே அதிக மழை பெறும் இடமான சிரபுஞ்சி இந்த மாவட்டத்தில்தான் முன்பு இடம் பெற்றிருந்தது. மழைக்காலத்தில் பயணிகள் மழையை ரசித்து மகிழலாம் என்றாலும் குளிர் தாங்கும் மெல்லிய உல்லன் உடைகளுடன் பயணிப்பது நல்லது.
குளிர்காலத்தின்போது ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் இனிமையான சூழல் அதே சமயம் அதிக குளிர் நிலவுகிறது. ஜனவரி மாதத்தில் 1°C வரை வெப்பநிலை குறைந்து காணப்படும். பொதுவாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு பனிப்பொழிவு நிலவுகிறது. போதுமான உல்லன் உடைகளுடன் பயணிப்பது இந்த பருவத்தின் குளிரை சமாளிக்க உதவியாக இருக்கும்.