Search
  • Follow NativePlanet
Share

காளஹஸ்தி – ஆந்திர மண்ணில் ஒரு சைவத்திருத்தலம்

21

ஸ்ரீ காளஹஸ்தி என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த மகிமை வாய்ந்த ஆன்மீக திருத்தலம் சாதாரணமாக காளஹஸ்தி என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரசித்தி பெற்ற திருப்பதி மலைக்கோயில் நகரத்துக்கு அருகிலேயே உள்ள ஒரு மாநகராட்சியாகும். ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்தியாவிலுள்ள முக்கிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

ஸ்ரீ காளஹஸ்தி எனும் பெயரில் ஸ்ரீ, காள மற்றும் ஹஸ்தி ஆகிய மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஸ்ரீ என்ற சொல் சிலந்தியையும், காள எனும் சொல் பாம்பையும், இறுதியாக வரும் ஹஸ்தி எனும் சொல் யானையையும் குறிக்கின்றன.

இந்த மூன்று உயிர்களும் சிவனை நோக்கி துதித்து இந்த ஸ்தலத்தில் மோட்சம் பெற்றதாக ஐதீகம். ஸ்ரீ காளஹஸ்தி கோயிலின் பிரதான வாசலிலேயே இந்த மூன்று ஜந்துக்களுக்குமான சிலையை பார்க்கலாம்.

தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான சைவத்திருத்தலங்களுள் ஒன்றாக இந்த ஸ்ரீ காளஹஸ்தி கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றாக, ஐம்பெரும் பூதங்களில் வாயு வடிவத்துக்கான திருத்தலமாக இது வீற்றிருக்கிறது.

ஆதியில் பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்டு பின்னாளில் இந்த காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் விரிவான கட்டுமான அமைப்புகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டது என்பது ஆச்சரியமான ஒரு வரலாற்று உண்மையாகும்.

கீர்த்தி பெற்ற இக்கோயில் ஒரு மலையடிவாரத்துக்கும் ஸ்வர்ணமுகி ஆற்றின் கரைக்குமிடையே எழுப்பப்பட்டிருக்கிறது. இக்காரணத்தால் இந்தக்கோயில் தட்சிண கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. வடநாட்டிலுள்ள காசி நகரத்தோடு ஒப்பிட்டு தட்சிணகாசி என்ற மற்றொரு அடைமொழியையும் இது பெற்றுள்ளது.

தலபுராணக்கதைகள்

புராணக்கதைகளின்படி, வாயு ஸ்தலம் என்று கருதப்படும் இந்த திருத்தலத்தில் சிவபெருமான் வாயு உருவமெடுத்து தன்னை நோக்கி தவம் மேற்கொண்டிருந்த சிலந்தி, நாகப்பாம்பு மற்றும் யானை ஆகியவற்றை கண்டதாக கூறப்படுகிறது. இந்த ஜந்துக்களின் பக்தியினால் கவரப்பட்ட சிவபெருமான் இதே ஸ்தலத்தில் அவற்றின் சாபத்தை போக்கி மோட்சமளித்ததாக இந்த புராணக்கதை முடிகிறது.

முப்பெரும் புராணங்கள் என்று கருதப்படும் ஸ்கந்தபுராணம், சிவ புராணம் மற்றும் லிங்க புராணம் ஆகியவற்றில் இந்த ஸ்ரீ காளஹஸ்தி பற்றிய விவரணங்கள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில், ஸ்கந்தபுராணத்தின்படி அர்ஜுனன் இந்த திருத்தலத்துக்கு விஜயம் செய்து காளஹஸ்தீஸ்வரரை வணங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது இந்த மலையுச்சியில் வசித்திருந்த பரத்வாஜ முனிவரை அர்ஜுணன் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

3ம் நூற்றாண்டைச்சேர்ந்த மதுரை சங்கப்புலவரான நக்கீரரின் பாடல்களில் இந்த காளஹஸ்தி ஸ்தலம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த திருத்தலத்துக்கு ‘தட்சிண கைலாசம்’ எனும் சிறப்புப்பெயரும் நக்கீரர் அவர்களாலேயே வழங்கப்பட்டது என்பது ஆச்சரியமூட்டும் ஒரு வரலாற்று தகவலாகும்.

தூர்ஜதி எனும் தெலுங்கு புலவர் இந்த காளஹஸ்தி ஸ்தலத்திலேயே வசித்து ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலத்தைப்பற்றியும் காளஹஸ்தீஸ்வரரை பற்றியும் நூறு பாக்களை இயற்றியுள்ளார்.

பக்த கண்ணப்ப நாயனார்

சைவ மார்க்கத்தில் ஈடுபாடுள்ள பலருக்கு கண்ணப்ப நாயனார் கதை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. வேட்டுவ குலத்தை சேர்ந்த முரட்டு சிவனடியாரான இவர் ஒரு சமயம் பூஜிக்கும்போது காளஹஸ்தி சிவலிங்கத்தின் கண்களிலிருந்து வழிந்த ரத்தத்தை நிறுத்துவதற்காக தனது ஒரு கண்ணையே தோண்டி அடைத்து நிறுத்தினார்.

மறு கண்ணிலும் ரத்தம் பெருகுவதைக்கண்டு அடையாளத்துக்கு கால் விரலால் லிங்கத்தின் கண்ணை தொட்டபடி தன் மறு கண்ணையும் தோண்டிட முனைந்தபோது “நில்” என்ற ஓங்காரத்துடன் சிவனின் குரல் ஒலித்து அவரை ஆட்கொண்டதாக ஐதீகம்.

ஆதியில் திண்ணன் என்ற பெயர் கொண்டிருந்த இந்த அடியார் பின்னாளில் ‘கண்ணப்பர்’ என்று பெயருடன் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராக பெருமை பெற்றார். கண்ணப்ப நாயனாரின் கதை தெரிந்த ஆன்மீக ஆர்வலர்கள் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய ஸ்தலம்தான் இந்த காளஹஸ்தி திருத்தலம்.

தனித்தன்மையான ‘கோயிற்கட்டுமான கலையம்ச’ங்களுடன் எழும்பி நிற்கும் கோயில்கள்

ஸ்ரீ காளஹஸ்தி நகரின் புராதானமான கோயில்கள் வருடம் முழுதும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்த்து வருகின்றன. சிவபெருமான் மற்றும் மஹவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களுக்கான கோயில்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.

பற்பல ராஜவம்சங்களின் ஆட்சியை சந்தித்துள்ளதால் இந்நகரம் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரசர்களின் கோயில் கட்டுமான பங்களிப்புகளை பெற்று வீற்றிருக்கிறது. எனவே இங்குள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையான கோயிற்கட்டுமானக்கலை அம்சங்களுடன் ஜொலிக்கின்றன.

சோழர்குலம் மற்றும் பல்லவ வமசம் மட்டுமல்லாது விஜயநகர அரசர்களும் இந்த மண்ணில் தங்கள் பெயர் சொல்லும்படியான கற்காவியங்களை கோயில் எனும் ரூபத்தில் உருவாக்கி விட்டு சென்றிருக்கின்றனர்.

குறிப்பாக விஜயநகர மன்னர்கள் தங்கள் மகுடாபிஷேகங்களை அரண்மனையில் நடத்துவதற்கு பதிலாக இந்த காளஹஸ்தி கோயில்களிலேயே நடத்தியுள்ளனர் என்பது ஒரு வியக்க வைக்கும் வரலாற்றுத்தகவலாகும்.

அச்சுதாராயர் எனும் மன்னரின் முடிசூட்டு சடங்கு இங்குள்ள நூறுதூண் மண்டபத்தில் நிகழ்த்தப்பட்ட பின்னரே அவர் தலைநகர் திரும்பியதாக தெரியவருகிறது. ஆடம்பரம் கமழும் அரண்மனையை தவிர்த்து அறச்சாந்தி நிலவும் கோயில் கூடங்களை தேர்ந்தெடுத்த அம்மன்னர்களின் மாண்பு போற்றுதற்குரியது என்பதை நாம் இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

அந்த மஹோன்னத திராவிட பாரம்பரிய மன்னர்கள் மறைந்து ஆண்டாண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும் அவர்களின் அற பயமும், முயற்சியும், ராஜ கீர்த்தியும் இந்த கோயில்களின் மூலம் நம்மால் உணரமுடிகிறது. மாநில எல்லைகள் என்ற நடப்பு பிரிவினைகள் ஏதுமற்ற அந்நாளைய ‘தென்னக திராவிட மரபின் கீர்த்தி’யும் இந்த கோயில்கள் வழி நமக்கு புலனாகிறது.

மறக்கவியலா ஒரு பக்திப்பயண ஸ்தலம்

ஆன்மீகத்தில் எள்ளளவும் நாட்டமில்லா மனங்களையும் கசிந்துருக வைக்கும் மாய அதிர்வுகளுடனும், எழிற்காட்சிகளுடனும் இந்த காளஹஸ்தி நகரம் பக்தர்கள் மற்றும் பயணிகளை வரவேற்கிறது.

ஸ்ரீஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், பரத்வாஜ தீர்த்தம், காளஹஸ்தி கோயில் மற்றும் ஸ்ரீ துர்க்கா கோயில் என்பவை இந்த ஸ்தலத்திலுள்ள குறிப்பிடத்தக்க கோயில்களாகும்.

விஜயம் செய்ய உகந்த பருவம்

காளஹஸ்தி பகுதி வெப்பமான மற்றும் வறட்சியான சீதோஷ்ணநிலையை பெற்றுள்ளது. எனவே கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.

எப்படி செல்வது

நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ள காளஹஸ்தி நகரத்துக்கு ரயில் அல்லது சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையலாம். அமைதி மற்றும் தெய்வீகச்சூழலுடன் தனித்தன்மையான கோயில்கள் நிரம்பி காட்சியளிக்கும் இந்த ஸ்ரீ காளஹஸ்தி நகரம் மனச்சாந்தியை தேடி பயணிக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.

காளஹஸ்தி சிறப்பு

காளஹஸ்தி வானிலை

சிறந்த காலநிலை காளஹஸ்தி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது காளஹஸ்தி

  • சாலை வழியாக
    ஆந்திர மாநில அரசுப்போக்குவரத்துக்கழகம் எல்லா முக்கிய நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் முக்கிய கிராமங்களிலிருந்து காளஹஸ்திக்கு நல்ல முறையில் பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, திருப்பதி, பெங்களூர், ஹைதராபாத், நெல்லூர் மற்றும் விஜயவாடா போன்ற நகரங்களிலிருந்து காளஹஸ்திக்கு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளும் முக்கிய நகரங்களிலிருந்து காளஹஸ்திக்கு அதிக அளவில் இயக்கப்பட்டாலும் அரசுப்பேருந்துகளோடு ஒப்பிடும்போது இவற்றில் கட்டணம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தென்னிந்தியாவின் முக்கியமான அகல ரயில் பாதையில் அமைந்திருப்பதால் காளஹஸ்தி நல்ல ரயில் வசதிகளை கொண்டுள்ளது. இவ்வழியாக செல்லும் எல்லா ரயில்களும் காளஹஸ்தியில் நின்று செல்கின்றன. காளஹஸ்தி வரை செல்லும் நேரடி ரயில்களும் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    காளஹஸ்திக்கு அருகில் 26 கி.மீ தூரத்தில் திருப்பதி விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து தனியார் டாக்சிகள் அல்லது ஆந்திர மாநில அரசுப்பேருந்துகள் மூலமாக காளஹஸ்திக்கு வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat