மார்கோ நகரில் அமைந்திருக்கும் ஹோலி ஸ்பிரிட் தேவாலயம் 1564-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. எனினும் இஸ்லாமிய படைகளுடன் நடந்த கடும் போரின் விளைவாக 1571-ஆம் ஆண்டு தேவாலயம் முழுவதும் இடிந்து போயிற்று. அதன் பிறகு நிலைமை சீரான பிறகு, மறுபடியும் இந்த தேவாலயம் 1645-ஆம் ஆண்டு புதிக்கப்பட்டது.
ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் நடக்கும் திருவிழாவும், கூட்டுப்பிரார்த்தனையும் மார்கோ நகரம் முழுக்க பிரபலம். அதுமட்டுமில்லாமல் கோவா நகரம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் தவறாமல் இந்தத் திருவிழாவில் வந்து கலந்து கொள்வார்கள். இந்தத் திருவிழா பொதுவாக 5 அல்லது 6 நாட்கள் வரை நடைபெறும்.
ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தின் உயரமான கோபுரங்களும், தூய வெண்ணிற முகப்புத் தோற்றமும், உட்புறத்தில் காணப்படும் ஸ்படிக அலங்காரங்களும் பரோக் கட்டிடக் கலையின் பாதிப்பில் உருவானவைகள். அதோடு நன்றாக அலங்கரிக்கப்பட்ட பூஜை மாடங்களும், மிகப்பெரிய ஆலய விதானமும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள்.
இந்த ஆலயத்தின் சுற்றுப்பகுதிகளில் 3000 கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மேலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு புனித யாத்ரிகர்களும், பயணிகளும் வந்து கொண்டே இருப்பார்கள். எனவே எப்போது பார்த்தாலும் இந்த தேவாலயத்தில் கூட்டம் ஜேஜேவென்று இருக்கும்.
பனாஜி மற்றும் வாஸ்கோவிலிருந்து பேருந்துகளும், வாடகை கார்களும் அதிக எண்ணிகையில் மார்கோவுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கேண்டலிம், பாகா, கலங்கூட் போன்ற வடக்கு கோவா பகுதிகளிலிருந்து ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்துக்கு வருபவர்கள் சற்று நீண்ட பயணத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் அந்த பயணம் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் நேரம் இருந்தால் நீங்கள் மார்கோவின் மற்ற பகுதிகளுக்கும் சென்று சுற்றிப் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications