சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள குளிர்காலப்பருவம் மிகவும் ஏற்றதாக உள்ளது. குளுமையான உலர்ந்த சூழல் இக்காலத்தில் காணப்படுகிறது. பல்வேறு புதிய எழிற்பிரதேசங்களை சுற்றிப்பார்த்து மகிழ்வதற்கு இந்த பருவம் உகந்தது. இருப்பினும் பயணிகள் மெல்லிய உல்லன் உடைகளுடன் செல்வது சிறந்தது.
சௌத் கரோ ஹில்ஸ் பகுதியில் ஏப்ரல் முதல் ஜூன் இறுதி வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இந்த மூன்று மாதங்களில் கடும் உஷ்ணம் இப்பகுதியில் நிலவுகிறது. இக்காலத்தில் 37°C வரை வெப்பநிலை உயர்கிறது. இருப்பினும் சராசரியாக 25° வெப்பநிலை நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது. கோடைக்காலத்தில் விஜயம் செய்யும் பயணிகள் அதிக உஷ்ணத்துக்கு தயாரான மனநிலையில் இங்கு வருவது அவசியம்.
ஜுலை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. இருப்பினும் மேலும் பல மாதங்களுக்கும் மழை நீடிக்கக்கூடும். மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இந்த பகுதியின் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். எனவே மழைக்காலத்தில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு சாதனங்கள் போன்றவை பாதிக்கப்படுவதும் உண்டு. எனவே மழைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.
அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் குளிர்காலம் நிலவுகிறது. குளிர்காலத்தின்போது 7°C துவங்கி அதிகபட்சம் 25°C வரை வெப்பநிலை நிலவுகிறது. மெலிதான உல்லன் உடைகளுடன் பயணிப்பது இந்த குளிரை சமாளிக்க உதவியாக இருக்கும். மழைக்காலத்திற்கு பின்பு வரும் பருவம் என்பதால் சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டம் தூய்மையான பசுமையுடன் இக்காலத்தில் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுற்றுலா மேற்கொள்ள இந்த குளிர்காலமே மிகவும் ஏற்றதாகும்.