Search
  • Follow NativePlanet
Share
» » திகைப்பூட்டும் நரசிம்மர் குகைக் கோயில்- பிதார் கோயிலுக்குள் ஒரு சாகசப் பயணம்!

திகைப்பூட்டும் நரசிம்மர் குகைக் கோயில்- பிதார் கோயிலுக்குள் ஒரு சாகசப் பயணம்!

ஜரணி நரசிம்ம குகைக் கோயில் மற்றும் ஜர்னா குகைக் கோயில் என்று பிரபலமாக அறியப்படும் இக்கோயில் சக்திவாய்ந்த நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக இந்த கோவிலுக்கு திரளாக வருகிறார்கள். இந்த புனித ஆலயம் பிதாரில் உள்ள ஒரு குகையில் அமைந்துள்ளது. நீருக்குள் நடந்து சென்று ஸ்வாமியை தரிக்க வேண்டும். அதனுடைய மற்ற சிறப்பம்சங்கள் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

ஸ்தல புராணம்

ஹிரண்யகசிபுவைக் கொன்ற பிறகு நரசிம்மர் ஜலாசுரனைக் கொல்ல ஜலாசுரனின் இருப்பிடமான இந்தக் குகைக்கு வந்தார். சிவபக்தனான ஜலாசுரன் நரசிம்ம ஸ்வாமியை கண்டு மனம் திருந்தி நரசிம்ம ஸ்வாமியை கோவிலிலேயே தங்கும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு இணங்க, ஸ்வாமி சாளக்கிராம ரூபத்தில் அதாவது சுயம்பு வடிவில் இங்கு காட்சி தருகிறார். இது இரண்டாவது திருமலை திருப்பதி எனவும் கூறப்படுகிறது. இங்கு வந்து மனமுருகி என்ன வேண்டினாலும் நடக்கிறது என்றும், பகவானின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கிறது என்றும் மக்கள் நம்புகின்றனர். அதனால் தான் பெரும் சிரத்தை எடுத்து இக்கோவிலுக்கு வருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

Bidar Narashimha Temple

கோயில் எங்கே இருக்கிறது?

ஜல நரசிம்ம ஸ்வாமி ஹைதராபாத்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடகாவின் பிதார் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. பிதார் நகரத்திலிருந்து சுமார் 4.8 கிமீ தொலைவில் அமைந்துள்ள மணிச்சூலா மலைத்தொடரின் கீழ் 300 மீ சுரங்கப்பாதையில் இந்த பழமையான கோயில் அமைந்துள்ளது. குகைக்குள் 4 முதல் 5 அடி ஆழத்தில் நீர் நிரம்பியிருக்கும், வெளவால்கள் கூரையில் வட்டமிடுகின்றன. சற்று பயமுறுத்துவதாக இருந்தாலும் கூட, இந்த இடம் நிச்சயமாக ஆன்மீக ஒளியால் உங்களை மயக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நீர் வழியே நடந்துச் சென்று குகையின் முடிவில் சுவற்றில் வீற்றிருக்கும் கடவுளின் உருவத்தை தரிசனம் செய்ய வேண்டும். குகைக் கோயிலின் முடிவில் ஜலாசுரன் வழிப்பட்ட சிவலிங்கமும் உள்ளது. இரு தெய்வங்களையும் நாம் ஒரு சேர இங்கே தரிசிக்கலாம். கருவறையில் ஒரே நேரத்தில் 8 பேர் மட்டுமே நின்று தரிசிக்க முடியும். இக்கோயில் ஹைதராபாத்தில் இருந்து 120 கிமீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான பெங்களூரிலிருந்து சுமார் 700 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

Bidar Narashimha Temple

கோயிலில் உள்ள வசதிகள்

பக்தர்களுக்கு வசதியூட்டும் வகையில் குகைக்கோயில் குளிரூட்டப்பட்டு, வெளிச்சத்திற்காக மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளது. கோவில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். வாகனம் நிறுத்தும் இடம், பல்நோக்கு மண்டபம், உடை மாற்றும் அறைகள், பக்தர்களுக்கு போதிய நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான மேல்நிலைத் தொட்டி மற்றும் குகையிலிருந்து வெளியேறும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான பெர்கோலேஷன் தொட்டி ஆகியவை இக்கோயிலில் காணக்கூடிய சில வசதிகள் ஆகும்.

எப்படி இங்கே செல்வது?

இக்கோயில் அமைந்துள்ள இடம் வேண்டுமானால் கர்நாடகாவாக இருக்கலாம். ஆனால் கோயிலை தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் இருந்து சற்றே எளிதாக அடையலாம். ஹைதராபாத்தில் இருந்து பிதாருக்கு பல பேருந்துகள் NH9, NH7 வழியாக இயக்கப்படுகின்றன. ஆனால் பிதார் ரயில் நிலையம் நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களுடன் நன்கு இணைப்பட்டுள்ளதால் பெங்களூருவில் இருந்தும் எளிதாக பிதாரை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X