Search
  • Follow NativePlanet
Share
» »உலகிலேயே சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் – பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மங்களநாத சுவாமி கோவில்!

உலகிலேயே சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் – பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மங்களநாத சுவாமி கோவில்!

இந்தியாவில் கோவில்கள் எனபது மிகவும் ஒரு மதிப்புமிக்க சொத்தாகும். உலகெங்கிலும் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருவதற்கு இந்தியாவின் பிரமாண்டமான கோவில்களும் ஒரு முக்கிய காரணமாகும். இந்தியாவில் பல சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். அதிலும் இப்போது நாம் பார்க்க போகிற கோவில், சிவபெருமானுக்காக உலகில் தோன்றிய முதல் கோவிலாகும்.

உலகத்தில் தோன்றிய முதல் சிவன் கோவில், முதல் நடராஜர் தோன்றிய ஊர், உலகில் உள்ள பல்வேறு ரிஷிகளும் முனிகளும் வாசம் செய்த ஸ்தலம், 'தென்னானுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற மகா வாக்கியம் உருவான இடம் - இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இடம் இந்த மங்களநாத சுவாமி திருக்கோயில். இந்தக் கோவிலைப் பற்றிய மேலும் பல தகவல்களைக் கீழே காண்போம்!

ஸ்தல வரலாறு

ஸ்தல வரலாறு

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் முதல் சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்காக முதல் ஆலயம் இங்கு நிறுவப்பட்டுள்ளதால் இது சிவபெருமானின் ஊர் என்றும் போற்றப்படுகிறது.
ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும். அதாவது, இக்கோவிலின் சரியான வரலாறு எங்கும் கிடைப்பதில்லை. இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது என்றும் கூறுகிறார்கள்.
சிவபெருமான் வலைவீசி விளையாண்ட படலம் இந்த ஊரில் தான் அரங்கேறியது. இந்தக் கோவில் வாசலில் கடல் இருந்தபோது தான் சிவபெருமான் இங்கே வலை வீசியுள்ளார். அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி ஆவார்.
அம்மனுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காட்டி பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்திர கோசமங்கை எனப் பெயர் பெற்றது.

ராவணன் காலத்துக் கோவில்

ராவணன் காலத்துக் கோவில்

உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை அவர்களது தலைநகராக இருந்தது.
பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இங்கு தாழம்பூ வைத்து வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக நம்புகின்றனர்.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இக்கோவில் அமைக்கப்பட்டதால் சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை நாம் அறியலாம்.
மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என்பதையும் அதற்கும் முந்தையது இராமாயணக் காலம் என்பதையும் நாம் அறிவோம். இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. ஆகையால் இக்கோவில் எத்தகைய தொன்மை வாய்ந்தது என்பதை நாம் யூகித்து பார்த்துக் கொள்ளலாம்.
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயமும் இதுதான். இவ்வளவு ஏன், காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

பழம்பெரும் கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக நிற்கிற கோவில்

பழம்பெரும் கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக நிற்கிற கோவில்

உத்திர கோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஏழு நிலை ராஜகோபுரங்கள் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்களைக் கொண்டது இக்கோயில்.
மாபெரும் வரலாறு நிறைந்த இக்கோயில் முழுவதும் தென்னிந்தியா திராவிட கட்டிடக்கலை பாணியில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் "ராஜ கோலத்தில்" நாம் இங்கு தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு இருக்கும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரை நாளன்று மட்டும் காப்பு அகற்றப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. அந்நாளில் கோவில் விழாக்கோலம் பூணுகிறது.
இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் மற்றும் நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலபைரவர் உபசன்னதிகள் உள்ளன.

மற்ற தகவல்கள்

மற்ற தகவல்கள்

ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.
மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடியை தாண்டியதும், வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, 7 கிமீ தூரத்தில் இத்தலத்தை அடையலாம்.
மதுரையில் உள்ள விமான நிலையமும், ராமநாதபுரம் ரயில் நிலையையும் இத்தலத்தை அணுகக்கூடிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி!
காசியில் இறந்தால் முக்தி!
ஆனால் இந்த உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி தான்! வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு சென்று வந்து விடுங்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X