Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரைப் பற்றி 6 சுவையான தகவல்கள்

பெங்களூரைப் பற்றி 6 சுவையான தகவல்கள்

By staff

பெங்களூர் என்றவுடன் எவருக்கும் சட்டெனத் தோன்றுவது : ஐடி நகரம், இதமான வானிலை. ஆனால், இதைத்தாண்டி பெங்களூரில் பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஆறு தகவல்களைப் பற்றி பேசலாம் :

Bengaluru

Photo Courtesy : indianhilbilly

1. மின்சாரம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவில் மின்சாரம் அறிமுகமான முக்கிய நகரங்களில் பெங்களூரும் ஒன்று. 1906'ஆம் ஆண்டில், ஷிவனசமுத்திரம் நீர்மின் திட்டத்தின் உதவியுடன் பெங்களுருக்கு மின்சாரம் வந்தது.

2. மக்கள் தொகை

பல பேருக்குத் தெரியாத விஷயம், பெங்களூர் - தென்னிந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் என்று. இந்தியாவில், மும்பை, டெல்லிக்கு அடுத்து பெங்களூரில்தான் அதிக மக்கள் வாழ்கிறார்கள். 2011'ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 84 லட்சத்தைத் தாண்டியது மக்கள் தொகை. நம் சென்னைக்கு ஐந்தாம் இடம். நான்காம் இடம் ? தெரிந்தால் விட்டு விடுங்கள் தெரியாவிட்டால் ? கூகுளை நாடுங்கள்.

3. பன்முகத்தன்மை.

பெங்களூரின் மிகப்பெரிய பலம் என்று தயக்கமில்லாமல் சொல்லலாம் என்றால் அது அதன் பன்முகத்தன்மையைத்தான். இங்கு உள்ளூர் மக்கள் 41% தான்; மீதமுள்ள 59 சதவிகத்தில் கல்லூரியில் படிக்கும் ஆஃப்ரிக்கர்கள், ஷாப்பிங் மால்கள், ஸ்பாக்கள், அழகு நிலையங்களில் வேலை பார்க்கும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், ஜூஸ் கடைகள், மளிகை கடைகள் வைத்திருக்கும் மலையாளிகள், பழைய பேப்பர் கடை வைத்திருக்கும் தமிழர்கள், கட்டட வேலைக்காக வந்திருக்கும் பீஹார், ஒரிசா மாநிலத்தவர்கள். இவைபோக மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் எண்ணற்ற தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கு பேசுபவர்கள், மலையாளிகள், ஹிந்தி மாநிலத்தவர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதியாக பெங்களூர் திகழ்கிறது.இது தென்னிந்தியாவில் எந்தவொரு நகரத்திற்கும் கிடைக்காத சிறப்பு.

எந்தவொரு பேருந்திற்குள் சென்று குத்துமதிப்பாக நான்கு பேரைப் பிடித்து விசாரித்தால் நால்வரும் வெவ்வேறு மொழி பேசும் பெருமை பெங்களூருக்குத்தான் உண்டு.

4. பொதுத் துறை நிறுவனங்கள்

இந்த தலைமுறையினர், பெங்களூர், ஐடி துறை வந்த பிறகுதான் அபார வளர்ச்சி அடைந்திருப்பதாக நினைக்கலாம். இதில் ஓரளவு உண்மையிருந்தாலும், பெங்களூர் ஐடி நகரம் மட்டுமல்ல. 50கள், 60களிலேயே, பல பொதுத்துறை நிறுவனங்கள் - HAL, BEL, BEML, NAL, HMT, ISRO - பெங்களூரில் அமைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் உயிரியல் தொழில்நுட்பம் எனப்படும் Biotechnology தொடர்பான துறைகளின் மையமாக பெங்களூர் திகழ்கிறது. இந்தியாவின் மொத்த உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 47% இங்கு இருக்கின்றன; மேலும், நாட்டின் மிகப்பெரிய உயிரிதொழில்நுட்ப பூங்கா, பயோகான் நிறுவனம், பெங்களூரில்தான் இருக்கிறது.

5. அறிவுஜீவிகள் நகரம்.

தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, புத்தகப் பிரியர்களுக்கு, அறிவுசார் விவாதங்களுக்கு, நாடகப் பிரியர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, பெங்களூர் சரியான நகரம். காரணம் : நாட்டிலேயே மிகச்சிறந்த புத்தக கடைகள் - Bookworm, Blossoms Book Shop, Select Book Store, Gangarams Book Store, Sapna Book Store, Goobes Book Republic, வாரந்தோறும் அரங்கேறும் நாடக‌ங்கள், இலக்கிய கருத்தரங்கள், புத்தக அறிமுகங்கள், எழுத்தாளர் சந்திப்புகள் என இலக்கிய உலகின் தலைமையகமாகத் திகழ்கிறது பெங்களூர்.

Ulsoor_Lake

Photo Courtesy: Saad Faruque

6. கலாச்சார நகரம்.

நீங்கள் சைவமாக இருக்கலாம், அசைவமாக இருக்கலாம். வட இந்தியா உணவு பிடிக்கலாம், செட்டிநாடு முதல் மதுரை ஜிகிர்தண்டா வரை, சைனீஸ் முதல் கடல் சார் உணவு வரை எதுவாக இருந்தாலும் உணவிற்கென்று எண்ணற்ற கடைகள் இருக்கிறது பெங்களூரில். பல்வேறு மாநிலத்தவர்கள் வசிப்பதன் காரணத்தால் உணவில் பல வகையும் நீங்கள் பார்க்கலாம்; உண்ணலாம்.

இப்பேர்பட்ட பெங்களூரில் நீங்கள் வசிப்பவராய் இருந்தால் கொண்டாடுங்கள் இல்லை வரத்துடிப்பவராக இருந்தால், மகிழ்ச்சியுடன் வாருங்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல் வேலை தேடி வருபவர் எவரையும் வெறுங்கையுடன் அனுப்பாது இந்த அடுத்த நூற்றாண்டின் நகரம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X