Search
  • Follow NativePlanet
Share
» »தலைநகரிலிருந்து தில்லைநகர் நோக்கி ஓர் யாத்திரை

தலைநகரிலிருந்து தில்லைநகர் நோக்கி ஓர் யாத்திரை

கடலூர் மாவட்டத்தை அணி செய்கிறது சிதம்பரம்.சிதம்பரத்திற்குத் தில்லை என்ற பழமையான பெயரும் உண்டு.தில்லைமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப்பெயர் வந்திருக்கக்கூடும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.இ

By Kumaravel Rajan

கடலூர் மாவட்டத்தை அணி செய்கிறது சிதம்பரம்.சிதம்பரத்திற்குத் தில்லை என்ற பழமையான பெயரும் உண்டு.தில்லைமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இப்பெயர் வந்திருக்கக்கூடும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.இது தலைநகரான சிங்காரச் சென்னையிலிருந்து 235கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக்காடுகள் இங்குதான் அமைந்துள்ளன.பவளப்பாறைகளுக்குப் புகழ்பெற்ற பிச்சாவரம் இங்கு அமைந்திருப்பது சிதம்பரத்திற்கே கிடைத்த வரம்.அண்டங்களையெல்லாம் படைத்த ஆலவாய்ப் பெருமான் ஆனந்தக் கூத்தாடும் தில்லை நகர் நோக்கிப் பயணிப்போமா?

சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சாலைமார்க்கமாகச் செல்ல நான்கு முதல் ஆறு மணி நேரம் ஆகும்.பெரும்பாலானோர் சென்னையிலிருந்து சிதம்பரம் செல்ல சாலை வழியையே தேர்வு செய்கின்றனர். பலதரப்பட்ட மக்களையும், வயல்வெளிகளையும் கண்ணுற்றுச் செல்ல சாலைமார்க்கமே சிறந்தது.தனியாகப் பயணிப்போரும்,கூட்டாகப் பயணிப்போரும் புதிய அனுபவங்களைப் புலன்களுக்கு விருந்தக்கிக் கொண்டே வீதி வழி பயணிக்கலாம்.

அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள பருவத்தின் போது சிதம்பரம் செல்வது சாலச்சிறந்தது.ஏனென்றால் அதிக வெப்பமோ அதிக குளிரோ இல்லாமல் மிதமான காலநிலை நிலவும் பருவம்.இக்கால கட்டங்களில்தான் பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் சிதம்பரம் நோக்கிப் படையெடுக்கின்றனர்.ஆகவே காலமறிந்து செல்லுதல் நன்று.

வழி சொல்கிறேன் கேளுங்கள்

வழி சொல்கிறேன் கேளுங்கள்

பாரத நாட்டின் பழம்பெரும் நகராக சிதம்பரம் சிறப்புடன் விளங்குகிறது.சிதம்பரம் என்றதும் சிதம்பர ரகசியம் என்ற சொல் உங்கள் நினைவிற்கு வந்து செல்லும் என்று நினைக்கிறேன்.உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருமுறையாவது காணவேண்டிய நகரம் சிதம்பரம்.பழங்காலத்தில் சிதம்பரம் சோறுடைத்த சோழவள நாட்டிற்குச் சொந்தமாக இருந்தது.இன்றோ பாரதத்தில் ஒளிவீசும் பழந்தமிழ் நாட்டின் ஓர் அங்கமக உள்ளது.

குதிரைகளும், யானைகளும்,சேனைகளும் ஊர்ந்த சிதம்பரத்தில் இன்று வாகனங்களுக்கும் தொடர்வண்டிகளுக்கும் பஞ்சமில்லை.சிதம்பரம் சாலைகளாலும் தொடர்வண்டிப் பாதைகளாலும் இணைக்கப்பட்ட பெருநகரமாகவே இன்று உருவெடுத்துள்ளது.ஆகவே சிதம்பரம் செல்வோர் போக்குவரத்தைப்பற்றி சிந்திக்கவேண்டியதில்லை.இந்நகரில் விமானநிலையம் இல்லை.பிரஞ்சு தேசத்தின் ஆளுமை பெற்ற நகரமாக விளங்கிய பாண்டிச்சேரியில் விமானதளம் அமைந்துள்ளது.பறந்து வர விரும்புவோர் பாண்டிச்சேரியில் இறங்கி அங்கிருந்து 51 கி.மீ சிதம்பரத்திற்கு ஊர்ந்து வர வேண்டும்.

PC: Karthik Easvur

வழித்தடங்கள்

வழித்தடங்கள்

வழித்தடங்களைப் பொறுத்தவரை சிதம்பரம் தொடர்வண்டி சாலைகள் மூலம் பெருநகரங்களுடன் இணைக்கப்படுகின்றன.

சாலைப்போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை-திண்டிவனம்-பாண்டிச்சேரி-சிதம்பரம் ஒரு வழித்தடமாகவும்சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி-சிதம்பரம் மற்றுமொரு வழித்தடமாகவும் இயங்குகிறது.

இரண்டாவது வழித்தடம் பண்டைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இரு பெரும் நகரங்களை இணைக்கிறது.அதாவது பல்லவ நாட்டின் கலைநகரமான மஹாபலிபுரம் சோழநாட்டின் கலைநகரமான சிதம்பரத்தையும் இணைக்கிறது.காணும் சாலைகள் யாவும் இயற்கை தந்த கொடையால் நிரம்பியுள்ளது.

தரைவழியாகப் பயணிப்போருக்கு வயல்வெளிகளின் தவழும் பசுமையின் அழைப்பும் உயர்ந்த மரங்கள் காற்றில் உராய்வதால் எழும் உன்னத ஒலிகளும் மரக்கிளைகளில் மகிழ்ந்தாடும் பறவையினங்கள் மீதும் மனதைப் பறிகொடுக்கத் தோன்றும்.

நாட்டிய நாயகனும் நஞ்சுண்ட பெருமானுமாகிய சிவன் கால்தூக்கி நிற்கும் தில்லை மண்ணைக் கண்டதும் நம்மை சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகியது போல் மனம் அமைதியுற்று விளங்கும்.

பயணத்தைத் தொடங்குவோம் சென்னையிலிருந்து.

பயணத்தைத் தொடங்குவோம் சென்னையிலிருந்து.

சென்னை என்ற பெயரைக்கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருபவை கடற்கரைகளும் அழகிய திரையரங்குகளும் தான்.அதைத்தாண்டி சென்னையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய எண்ணற்ற தகவல்கள் பொதிந்துள்ளன.தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னையில் பலதரப்பட்ட பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றும் மனிதர்கள் வாழ்கின்றனர்.பல மொழிகள் இந்நகரில் உலாவிக்கொண்டிருக்கின்றன.ஒவ்வொரு நாளும் பிழைப்பு தேடி இங்கு வரும் மக்களால் நிரம்பி வழிகிறது சென்னை.

சிறு வியாபாரிகள்,வழிபோக்கர்கள்,வேடிக்கை மனிதர்கள்,முக்கியப்புள்ளிகள் என பலதரப்பட்ட மக்களின் அன்னை நிலமாகவே மாறிவிட்டது சென்னை.மீளாத்துயில் கொள்ளும் தலைவர்களின் சமாதிகளுக்கும் இங்கு குறைவில்லை.கதிரவனின் கருணையை நாம் கோடைகாலத்தில் எதிர்பார்க்க முடியாது. குளிர்காலமே சென்னைக்கு வசந்த காலம் ஆகும்.

PC: Arvindan Ganesan

மனம் மயங்கும் மஹாபலிபுரம்

மனம் மயங்கும் மஹாபலிபுரம்

மஹாபலிபுரம் மனதை மயங்கும் பல்லவர்களின் வரலாற்று நகரம். சிற்பக்கலைகளில் தங்களின் பங்களிப்பைப் பல்லவர்கள் மெய்ப்பித்த நகரம் மஹாபலிபுரம்.வெண்மணற் கடற்கரைகள், கரையொதுங்கிய கிளிஞ்சல்கள்,கனிவூட்டும் தென்றல் காற்று.மனதிற்கு இதம் தரும் மரங்கள் ஆகியவை இங்கு ஏராளம்.
கல்ரதங்கள்,பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் ஆகியவை அந்த மாண்டுபோன சிற்பிகளின் கை உளிகள் செய்திட்ட காந்தருவ வித்தையைக் களிப்புடன் எடுத்துக் கூறுகின்றன.நிலமாதும்,நீர்மகளும் கலைமகளின் மடியில் தவழும் எழில்நகரம் மஹாபலிபுரம் என்பதில் வியப்பேதுமில்லை.

அந்த கலைநகரைக் கண்டபின் பயணிகள் தில்லை நோக்கிப்பயணித்தால் எல்லையில்லா இன்ப அனுபவத்தைப்பெறலாம்.இங்குள்ள கோவளம் கடற்கரை சுற்றுலாப்பயணிகளின் உள்ளத்திற்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தும். தங்கும் விடுதிகளும் இங்கு ஏராளம்.

புதுமை மிளிரும் புதுச்சேரி

புதுமை மிளிரும் புதுச்சேரி

மஹாபலிபுரத்திலிருந்து 99கி.மீ தொலைவில் அமைந்துள்ள நகரம் புதுச்சேரி.இந்திய விடுதலைக்கு முன்புவரை பிரஞ்சு காலனி நகரமாக விளங்கிக்கொண்டிருந்தது.பலவகையான பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் கொண்ட நகரம்தான் புதுச்சேரி.இந்தியாவின் முன்னணி நகரங்களுள் ஒன்றாக விளங்கிவருகிறது.

மாநில அந்தஸ்தினைப் பெறாமல் யூனியன் பிரதேசமாக விளங்கிவருகிறது.தூய்மையான கடற்கரைகளும் புதியதான உணவுப் பொருட்களும் சுற்றுலாப்பயணிகளுக்கு சொர்கத்தை நினைவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை.

அமைதி தவழும் நகரமாகவும் , தூய்மைக்குப் பேர்போன நகரமாகவும் விளங்கும் புதுச்சேரி புதியதாய் வருவோருக்கு புதுமையான அனுபவத்தை அள்ளித்தரும் என்பதில் வியப்பில்லை.இங்குதான் உலகப்புகழ் பெற்ற அரவிந்தர் ஆசிரமம் உள்ளது.இந்த ஆசிரமத்தில்தான் புதிய கல்வித்தத்துவங்கள் துளிர்விட்டன. நூலை வைத்து அளந்ததைப்போல பழைய தெருக்களின் அமைப்பு ஒரு நிமிடம் நம்மை தலைசுற்றச் செய்கிறது.தூய்மையான கடற்கரைகள் நல்ல நிர்வாகத்தைப் பறைசாற்றுகின்றன. போதும் புதுச்சேரி பற்றிய புராணம்.சற்று தில்லைக்குப் பயணிப்போமா?

தில்லை அம்பலவாணனே நடராசா.

தில்லை அம்பலவாணனே நடராசா.

சிதம்பரத்தில் தமிழருடைய கட்டிடக்கலை தலைநிமிர்ந்து நிற்கிறது.பிரமாண்டமான நடராசன் ஆலயம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.பஞ்சபூத ஆலயமாக இக்கோயில் விளங்குகிறது.இங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் "நாம் பாரத தேசத்திலே தோன்றியிருக்கக் கூடாதா? என்று ஏங்கும் அளவிற்குக் கலை மற்றும் பண்பாட்டால் உயர்ந்து நிற்கிறது சிதம்பரம்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அங்கு உள்ளோர் பண்டைய சிதம்பரத்தின் வரலாற்றை உரைக்கும் போது ஒரு நிமிடம் மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. பண்டைய சோழ மன்னன் ஒருவன் சிதம்பரம் கோயிலுக்குப் பொன்னால் கூரை வேய்ந்தான் என்ற வரலாற்றுச் செய்தி நம் காதுகளை எட்டும் போது நானும் தமிழன் என்று கர்வம் கொள்ளாதோர் இருக்க முடியாது.

இக்கோயிலில்தான் நடனத்திற்கு ராசனான நடராசன் வீற்றுள்ளான் என்று அறிந்ததும் மறக்காமல் கன்னத்தில் போட்டுக்கொண்டு மற்ற விசயங்களை நோக்கி சற்று நகர்வோம்.

PC: NM

பிச்சாவரம் போகலாம்.

பிச்சாவரம் போகலாம்.

பிச்சாவரம் மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவும்,பாதுகாக்கப்பட்ட கடல்பகுதியாகவும்,ஆய்வுகள் அவதரிக்கும் இடமாகவும் விளங்குகிறது.ஆண்டுதோறும் பிச்சாவரத்தை நோக்கிப்படையெடுக்கும் மக்கள் கூட்டம் சொல்லி மாளாது.பவளப்பாறைகள் இங்கு அதிகமாகக் காணப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கம் இங்கு அதிக அளவில் உள்ளது.

PC: Balaji

வைத்தீஸ்வரனை வணங்குவோம்.

வைத்தீஸ்வரனை வணங்குவோம்.

பிச்சாவரத்தைப் பார்த்தபிறகு நாம் காணவேண்டியது சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள ஐயன் வைத்தீஸ்வரனை.வைத்தீஸ்வரனைக் கண்டால் மட்டும் போதுமா?அங்கு கருணையின் வடிவாக விளங்கும் தையல் நாயகியைக் காண வேண்டாமா?இருவரையும் வணங்கிவிட்டு நாம் கோயில் பிரகாரத்தைச் சுற்றிவரும் போது நாம் காணும் காட்சிகள் நம் உள்ளத்தில் வியப்பை அள்ளித்தெளிக்கும்.காரணம் அங்கு விநாயகர்,முருகன் போன்ற கடவுளர்களின் செப்புத்திருமேனிகள் காணக்காண கண்களுக்குப் பக்தி விருந்து படைப்பவை.

PC: wikimedia.org

தில்லைக்காளியின் திருத்தாண்டவம்

தில்லைக்காளியின் திருத்தாண்டவம்

கருணையின் வடிவாகவேக் காட்சியளித்த அம்மன் விக்ரகங்களைக் கண்டவர்கள் தில்லைக் காளியின் திருவுருவச் சிலையைக் காணும்போது சற்று திகிலடைந்து விடுவர். நான்முகத்தோடு அகோரமாய்க் காட்சிதரும் காளியின் உருட்டு விளிகளும்,வெட்டும் பார்வையும்,திரிசூலமும் அதற்குள் உலகிற்கு ஊழிக்காலம் வந்துவிட்டதா என எண்ணத்தோன்றும்.

13ஆம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கன் என்ற அரசன் இக்கோயிலைக் கட்டியதாக சரித்திரம் உரைக்கிறது.சிறிய வயதில் பள்ளிக்குப் போக அடம்பிடித்தபோது உருட்டு விழிகளோடு மிரட்டிய பல தாய்மார்களை நினைவுபடுத்தி நிற்கிறது இந்த காளி சிலை.
PC: S Sriram

 அதோ அண்ணாமலை பல்கலைக்கழகம்

அதோ அண்ணாமலை பல்கலைக்கழகம்

1929ல் அண்ணாமலை செட்டியாரால் திறக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் 300ஏக்கர் பரப்பில் சிதம்பரத்தின் தனி அடையாளமாகவே திகழ்கிறது.கோயில்கள் மட்டும் புனிதஸ்தலமல்ல இது போன்ற உயர்பாட சாலைகளும் புனிதஸ்தலங்களே என்பதை நினைவுபடுத்துகிறது இப்பல்கலைக்கழகம்.

இதைப் படித்தால் மட்டும் போதுமா? எப்போது சிதம்பரம் செல்வதாக உத்தேசம்.

PC: Arunshariharan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X