இந்தியா சுற்றுலாவுக்கென பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடு. நம் நாட்டில் பலருக்கு சுற்றுலா என்றால் தனி பிரியம் கூட. கோடை விடுமுறையில் அத்தை, மாமா வீடுகளுக்கு செல்வது குறைந்து எக்ஸ்ட்ரா கரிகுலர் வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தபோதே சுற்றுலா என்பதுடன் சேர்ந்து மகிழ்ச்சியும் முடங்கிவிட்டது.
கோப்புப்படம் : Tamil Native Planet
மலைகளைக் கண்டு மலைத்தவர்களின் பிள்ளைகள் மால்களில் மயங்கி நிற்கின்றன. கானகம் புகுந்து விளையாடியவர்கள் வேற்றுலகில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிற தன் வாரிசுகளை கண்டு வெம்முகின்றனர்.
நானெல்லாம் அந்த காலத்துல காலைல வீட்ட விட்டு வெளிய போனா பொழுதடஞ்சிதான் வீட்டுக்கு வருவேன்னு வீட்டின் மூதாதையர்களின் கதைகளைக் கேட்க கூட பேரப்பசங்களுக்கு நேரமில்லாம அறிவியல் வளர்ச்சி அவர்களை கட்டிப்போட்டு விட்டது. சரி.. ஒரு லாங்க் டிரைவ் யாரும் எந்த கேள்வியும் கேட்காதமாதிரி ஒரு இடத்துக்கு போகலாம்னா நீங்க எங்க போவீங்க.. ஆமா.. அதுக்கு முன்னாடி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள பத்தி தெரிஞ்சிக்கலாம்.. அப்றம் லாங்க் டிரைவ தொடங்கலாம்.

இந்தியாவின் மிக நீளமான ஒற்றை சாலை
தேசிய நெடுஞ்சாலை எண் 44. ஆமா இதுதான் இந்தியாவிலேயே மிகவும் நீளமான அதிக தூரம் போடப்பட்ட சாலை ஆகும்.

33 லட்சம் கிமீ நீளத்தில் சாலைகள்
இந்தியா முழுவதும் ஏற்கனவே போடப்பட்டு விட்ட சாலைகளின் அடிப்படையில், மொத்த நீளம் 33 லட்சம் கிமீ வரை இருக்கலாம் என்கிறது புள்ளிவிவரம்.
இதில் மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், உள்ளூர், மாவட்ட, மாநில சாலைகளும் அடங்கும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நீளம் தெரியுமா
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கணக்குப் படி ஒரு நாளைக்கு 23 கிமீ நீளம் வரை சாலைகள் சராசரியாக போடப்பட்டு வருகின்றன.

ஆக மொத்தம் 200
இந்தியாவின் மொத்த தேசிய நெடுஞ்சாலைகள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு யூகிக்க முடிகிறதா? மொத்தம் 200 தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவில் இருக்கின்றன.
இவைகளின் நீளம் 1 லட்சத்து ஆயிரத்து பதினொறு கிமீ தூரம் ஆகும். இதுவே மாநில சாலைகளின் நீளம் 1,31,899கிமீ ஆகும்.

போக்குவரத்து நெரிசல்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவின் மொத்த சாலைகளில் 1.8 சதவிகிதம்தான் இருக்கின்றன. என்றாலும், ஒட்டு மொத்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்களை 40 சதவிகிதம் குறைக்கின்றன. அதாவது 40 சதவிகிதம் சாலைகள், இந்திய குடிமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, உதவுகின்றன.

நான்கு, ஆறு, எட்டு வழிச்சாலைகள்
இந்தியாவில் மிக பெரிய நகரங்களில் மட்டுமே எட்டு வழிச்சாலைகள் இருக்கின்றன. ஆனால் நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகள் 22900 கிமீ தூரத்தை ஆக்கிரமித்துள்ளன. ஒற்றையடி சாலைகள் மிக மிக குறைக்கப்பட்டு, இதன்மூலம் ஏற்பட்டு வந்த வாகன விபத்துகள் தடுக்கப்பட்டு விட்டன.

சாலைகளுக்கு எப்படி பெயரிடுகிறார்கள்.
பொதுவாக நம்மூர் சாலைகளுக்கு பெயர் இருக்கும்தான். என்றாலும் அவைகள் எண்ணால் குறிக்கப்படும்,. உதாரணமாக தேசிய நெடுஞ்சாலை எண் 44.
தேசியநெடுஞ்சாலை எண் 44 சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது பிரிந்து செல்லும் சாலைகள் இவ்வாறு எண்ணால் குறிக்கப்படும்.
144, 244, 344. இப்படி 944 வரைதான் இருக்கும். அந்த சாலை பெரிய அளவில் பிரிக்கப்பட வாய்ப்பு இல்லை. அது வேறு ஒரு பெயரில் அழைக்கப்படும். அதேபோல 144 சாலையானது மேலும் சிறு சிறு ஊர்களுக்கு செல்லும். அவை 144A, 244A, 244B எனுமாறு குறிக்கப்படும். இப்படியே சாலைகளுக்கு பெயரிடுகிறார்கள்.

இவ்ளோ கஷ்டமா
இவ்ளோ சாலைகள் இருந்தா பேரு வச்சா மட்டும் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
அதற்காகத்தான் இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து, வடக்கு தெற்காக செல்லும் சாலைகள் இரட்டைப்படை எண்ணாலும், மேற்கு கிழக்காக செல்லும் சாலைகள் ஒற்றைப் படை எண்ணாலும் குறிக்கப்படும் என்று கூறியுள்ளது.

நிறக்குறியீடு
வழக்கமாக நாம் சாலையில் செல்லும்போது இடது புறங்களில் வரும் மைல்கற்கள் நமக்கு இது தேசிய நெடுஞ்சாலையா, மாநில நெடுஞ்சாலையா, இல்லை நகரச் சாலையா என்பதை நிறங்களால் உணர்த்தும்.
மஞ்சள் - வெள்ளை கலவையில் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை
பச்சை - வெள்ளை கலவையில் இருந்தால் அது மாநில நெடுஞ்சாலை
கருப்பு வெள்ளை உள்ளூர் அல்லது நகரச் சாலை ஆகும்.

சிறப்பம்சங்கள்
நீளமான சாலை - தேநெஎ 44
ஜம்மு - கன்னியாகுமரி சாலை
நீளம் குறைவான சாலை - தேநெஎ 118 மற்றும் தேநெஎ 548
ஆசியாவின் மிக பெரிய கிளவர்இலை மேம்பாலம் சென்னை கத்திப்பாரா