Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடகத்தின் அசரவைக்கும் ஐந்து மலைப்பிரதேசங்கள் - இப்போதே திட்டமிடுங்கள்

கர்நாடகத்தின் அசரவைக்கும் ஐந்து மலைப்பிரதேசங்கள் - இப்போதே திட்டமிடுங்கள்

கர்நாடக மாநிலம் கேரளத்தைப் போல் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட கேரளத்தின் அத்தனை அம்சங்களையும் பெற்ற இடங்களைக் கொண்டு இயற்கையின் அரவணைப்பில் செழித்துள்ளது. இங்கு பயணம் செய்யவிரும்புபவர்கள் நிறைய இருக்கி

By Udhaya

கர்நாடக மாநிலம் கேரளத்தைப் போல் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட கேரளத்தின் அத்தனை அம்சங்களையும் பெற்ற இடங்களைக் கொண்டு இயற்கையின் அரவணைப்பில் செழித்துள்ளது. இங்கு பயணம் செய்யவிரும்புபவர்கள் நிறைய இருக்கின்றனர். எனினும் தெளிவான திட்டமிடல் இன்றி ஒரு இடத்தை மட்டும் பார்த்துவிட்டு திரும்பி விடுகின்றனர். கர்நாடகா என்றாலே பெங்களூரு, அதைத்தாண்டி மைசூரு இன்னும் கொஞ்சம் போனால் மங்களூரு மட்டுமே நம்மில் பலருக்கு தெரியும். பச்சை பசுமையான மிகவும் குளுமையான இடங்கள் கர்நாடகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகின்றன. முக்கியமாக குடகு மலையிலிருந்து சக்லேஸ்ப்பூர், சிக்மகளூர், கெம்மணகுண்டி, ஆகும்பே ஆகிய இடங்களை ஒரே டிரிப்பில் காண இந்த பயண வழிகாட்டியை தொடருங்கள். அதுக்கு முன்னாடி மறக்காம மேல இருக்குற பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க.. தினமும் நல்ல நல்ல டிராவல் கதைகள பெறுங்க...

திட்டமிடல்

திட்டமிடல்

தமிழகத்திலிருந்து வரும் அனைவருக்கும் பெங்களூர் பக்கம் என்பதால் இங்கிருந்தே நமது பயணத்தை தொடர்வோம்.

குடகு மலை - சக்லேஸ்பூர் - சிக்மகளூர் - கெம்மணகுண்டி - ஆகும்பே என நமது பயணம் சும்மா ஜாலியாக இருக்கப்போகிறது. வாங்க நம்ம பயணத்தோட முழுமையான வரைபடத்த இங்க பாக்கலாம்.

 வழியில் காணவேண்டிய இடங்கள்

வழியில் காணவேண்டிய இடங்கள்

குடகு


மடிக்கேரி கோட்டை
மல்லலி நீர்வீழ்ச்சி
ஓம்காரேஸ்வரா கோயில்

சக்லேஸ்பூர்

மஞ்சராபாத் கோட்டை
பிஸ்லே காட்

சிக்மகளூர்

அய்யனக்கரே ஏரி
மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி
முத்தோடி வனத்துறை முகாம்

கெம்மணகுண்டி

ஹெப்பி நீர்வீழ்ச்சி
கல்ஹட்டி நீர்வீழ்ச்சி
இசட் முனை

ஆகும்பே

ஜோகிகுண்டி அருவி
பர்கானா அருவி
ஓநேக் அபி அருவி

குடகுவிலிருந்து சக்லேஸ்பூர்

குடகுவிலிருந்து சக்லேஸ்பூர்


குடகுவிலிருந்து சக்லேஸ்பூர் 107கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் மூன்று வழிகளில் சென்றடைய முடியும்.

1 குடகு - ஹெப்பாலே - கொட்லிபேட்டை - சக்லேஸ்பூர்

2 குடகு - மடிக்கேரி - சோம்வார்பேட்டை - சக்லேஸ்பூர்

3 குடகு - ராமநாதபுரா - ஹாசன் - சக்லேஸ்பூர்

இதில் முதல் வழித்தடம் சுலபமானது. இரண்டாவது வழித்தடத்தில் நிறைய இடங்களைப் பார்த்துக்கொண்டே பயணிக்கலாம்.

குடகு மலை

கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது.

 குடகு மலை சிறப்புகளும் காணவேண்டிய தலங்களும்

குடகு மலை சிறப்புகளும் காணவேண்டிய தலங்களும்

மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.


மடிக்கேரி கோட்டை

17ம் நூற்றாண்டின் கடைசியில் முத்துராஜா என்பவரால் முதலில் மண்ணால் இந்த கோட்டை கட்டப் பட்டிருந்தது. பின்னர் திப்பு சுல்தானால் இது ரகசிய சுரங்க பாதைகளுடன் கல்லால் புத்துருவாக்க செய்யப்பட்டது. இந்த கோட்டைப்பகுதையை ஒட்டி மாவட்ட சிறை வளாகம், கோட்டே மஹா கணபதி கோயில் மற்றும் மஹாத்மா காந்தி பொது நூலகம் போன்றவை உள்ளன. இந்த கோட்டே மஹா கணபதி கோயில் கூர்க் பகுதியின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மடிகேரி தசரா உற்சவத்தின்போது இதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மல்லலி நீர்வீழ்ச்சி

கூர்க் பகுதியில் உள்ள மற்றும் ஒரு அழகான நீர்வீழ்ச்சி இந்த மல்லலி நீர்வீழ்ச்சி ஆகும். இது குமாரதாரா ஆற்றில் அமைந்துள்ளது. புஷ்பகிரி மலையின் அடிவாரத்தினால் 62 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது. நீர் விழும் இந்த நீர்வீழ்ச்சியில் அச்சமயம் நீராவி போன்ற நீர்ச்சிதறல் அருவியைச் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இந்த காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் பரவச மனோ நிலைக்கு சுற்றுலா பயணியை இழுத்துச்செல்லக்கூடியது.

ஓம்காரேஸ்வரா கோயில்

மடிக்கேரி மலை நகரத்தின் மையத்தில் இந்த ஓம்காரேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக 1820 ம் ஆண்டு ராஜா லிங்கராஜேந்திரா'வால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் மையத்தில் குமிழ் வடிவ கோபுரமும் நான்கு மூலைகளிலும் தூண் கோபுரங்களும் உள்ளன. ஒரு தர்காவை போன்றே காட்சியளிக்கும் இந்த கோயிலின் வாயிலில் சிவலிங்கமானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கருகில் ஒரு குளமும் உள்ளது. குளத்தின் நடுவில் ஒரு மண்டபமும் அங்கிருந்து கோயிலுக்குள் செல்வதற்கான பாதையும் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சிவலிங்கம் மஹாராஜாவால் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இந்த கோயிலுக்கு ஓம்காரேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

Rajeev Rajagopalan

 சக்லேஸ்பூர்

சக்லேஸ்பூர்

சக்லேஷ்பூர் நகரம் மைசூர் ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் இந்த நகரம் ஹொய்சளர்கள் மற்றும் சாளுக்கியர்களின் ஆட்சியில் இருந்துள்ளது. ஹொய்சளர்கள் ஆட்சியின்போது இந்த நகரம் சக்லேஷ்பூர் என்ற பெயரை பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

சக்லேஷ்பூர் இதன் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட சூழலுக்காகவும் இங்குள்ள மலையேற்ற வசதிகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்டுள்ளது. பிஸ்லே வனப்பாதுகாப்பு சரகம் மற்றும் குமார பர்வத மலையேற்றப்பாதை போன்றவை இந்த சக்லேஷ்பூர் ஸ்தலத்தின் இயற்கை அம்சங்களை பிரதிபலிக்கும் இடங்களாகும். மலையேற்றத்தில் அவ்வளவாக விருப்பமில்லாத பயணியாக இருந்தாலும் இந்த எழில் நிறைந்த நகரத்தை சும்மா சுற்றிவருவதே உங்கள் கண்களையும் மனதையும் நிறைய வைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு உண்மையாகும்.

Bikash Das

சக்லேஷ்பூரிலிருந்து சிக்மகளூர்

சக்லேஷ்பூரிலிருந்து சிக்மகளூர்

சக்லேஷ்பூரிலிருந்து சிக்மகளூர் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்ல இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன.

அரேஹல்லி வழியாக செல்லும் பாதை மிகவும் சுலபமானது. மற்றொன்று பெலகோடு நிட்டூர் வழியாக உங்களைக் கூட்டிச்செல்லும்.

மஞ்சராபாத் கோட்டை

சக்லேஷ்பூருக்கு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 48ல் இந்த மஞ்சராபாத் கோட்டை அமைந்துள்ளது. இஸ்லாமிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வண்ணம் இது அலங்கார வளைவுடன் வாயில் அமைப்புகளைக்கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,240 அடி உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது.

பிஸ்லே காட்

சக்லேஷ்பூரின் முக்கியமான சுற்றுலா அம்சமான இது இங்குள்ள பிஸ்லே வனப்பாதுகாப்பு சரகத்திற்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. மழைக்காடுகளை கொண்ட இந்த வனப்பகுதியில் புலிகள், ராஜ நாகம், மான்கள் மற்றும் பல வகை பறவை இனங்கள் வசிக்கின்றன. பிஸ்லே குட்டா அல்லது சூர்யபிரகாச மலை என்று அழைக்கப்படுகிற இந்த சிற்றுலாத்தலத்தின் உச்சியிலிருந்து அருகிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை, குமார பர்வத மலை, புஷ்பகிரி, தொட்டபெட்டா மற்றும் பட்டபெட்டா போன்ற மலைகளை ரசித்து மகிழலாம்

சிக்மகளூர்

சிக்மகளூர்

கர்நாடக மாநிலத்தில் தன் பெயரையே மாவட்டமாக கொண்டு அமைந்துள்ளது இந்த சிக்மகளூர் நகரம். மிக அதிக எண்ணிக்கையில் சுற்றிலும் சுற்றுலாப்பகுதிகளை கொண்டுள்ள நகரமாக இது பிரசித்தி பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மலைசார்ந்த சதுப்பு நில பகுதியை அதிகமாக கொண்டுள்ள மலநாட் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது இந்த சிக்மகளூர் நகரம்.

சிக்மகளூர் மிக பழமையான அழகுடன் விளங்கி இங்கு வருகை தரும் பயணிகளை சாந்தப்படுத்தும் இயல்புடன் விளங்கினாலும், அதைச்சூழ்ந்துள்ள பிரதேசம் பலதரப்பட்ட அம்சங்களுடன் கலந்து காணப்படுகிறது. சமவெளிப்பகுதி மற்றும் மலைகள் நிறைந்த மலநாட் பகுதி இவற்றுடன் எண்ணற்ற காபி தோட்டங்களும் நிறைந்துள்ளதால் இது கர்நாடகாவின் காபி தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

editor CrazyYatra

மற்ற சுற்றுலாத் தளங்கள்

மற்ற சுற்றுலாத் தளங்கள்

சிக்மகளூருக்கு அருகில் பல ஆன்மீக ஸ்தலங்களான சிருங்கேரி, ஹொரநாடு மற்றும் கலாசா போன்றவை உள்ளன. சிக்மகளூரிலிருந்து 38 கி.மீ அருகில் பத்ரா சரணாலயம் காட்டுயிர் சுற்றுலா விரும்பிகளின் அபிமான ஸ்தலம் ஆகும்.

அய்யனக்கரே ஏரி

சிக்மகளூர் செல்லும் பயணிகள் இந்நகரத்திலிருந்து 20 கி.மீ தள்ளியுள்ள அய்யனகேரே ஏரிக்கு பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மலநாடு பகுதியில் அழகான இயற்கைச்சூழலுக்கு மத்தியில் அமைதியுடன் காணப்படும் இந்த ஏரி கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரிக்கு அருகில் காணப்படும் பிரமிடு வடிவத்தில் உள்ள மலை சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவரும் அம்சமாகும். இந்த ஏரிப்பகுதியிலிருந்து பார்த்தால் சூரிய உதயமும் அஸ்தமனமும் மனதைக்கவரும் அனுபவத்தை தருகின்றன.

மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி

நேரம் இருந்தால் பயணிகள் மாணிக்யதாரா நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்ப்பது அவசியம். இது சிக்மகளூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் பாபா புதான்கிரி மலை அருகே கெம்மன குந்தி செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஷோலா காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புனித இடமாகவே விளங்குகிறது. முத்துக்கள் கோர்க்கப்பட்ட மாலை எனும் பொருள் கொண்ட மாணிக்யதாரா என்ற பெயரை உடைய இந்த நீர்வீழ்ச்சி அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் சூழலை விரும்புபவர்களுக்கு பொருத்தமான இடமாகும்.

முத்தோடி வனத்துறை முகாம்

பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக இந்த முகாம் விளங்குகிறது. இந்த ஸ்தலம் சிக்மகளூரிலிருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தவிர தணிகேபைலு, லக்கவள்ளி, ஹெப்பீ போன்ற முகாம்களும் பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன. இந்த முத்தோடி வனத்துறை முகாமில் நுழைந்த உடனேயே நம்மால் பல விலங்குகளை பார்க்க முடியும். குறிப்பாக புலிகள், சாம்பார் மான்கள், யானைகள் , புள்ளி மான்கள் காட்டெருமைகள் போன்றவை இவற்றில் சில. பலவகையான பறவை வகைகளையும் இங்கு பார்க்க முடிகிறது.

editor CrazyYatra

 கெம்மணகுண்டி

கெம்மணகுண்டி

கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த காடுகள், பசுமையான பச்சை புல்வெளிகள் யாவற்றையும் கண்டு சொக்கிப் போவது நிச்சயம். கெம்மனகுண்டி நகரம் ஒரு காலத்தில் கிருஷ்ணராஜ வடியார் மன்னருக்கு கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்தது. அதன் காரணமாகவே இதற்கு கே.ஆர் குன்று என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் கெம்மனகுண்டியில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் உருவாக்கப்பட்டு அந்த நகரமே ஆடம்பரமான உல்லாச நகரமாக காட்சியளித்தது.

ஹெப்பி நீர்வீழ்ச்சி

கெம்மனகுண்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காப்பித் தோட்டத்துக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஹெப்பி அருவியின் அழகை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த அருவி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பெரிய பகுதி தொட்டா ஹெப்பி என்றும், சிறியது சிக்கா ஹெப்பி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் நீராடுபவர்களுக்கு தோல் நோய் சம்பந்தமான நோய்கள் குணமாகுமேன்று சொல்லப்படுகிறது.

கல்ஹட்டி நீர்வீழ்ச்சி

கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் கல்ஹட்டி நீர்வீழ்ச்சிக்கும் செல்லலாம். இது காலஹஸ்தி என்றும் கல்லதிகிரி அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அகஸ்திய முனிவர் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அருவிக்கு அருகில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட வீரபத்திர ஆலயம் என்னும் தொன்மையான கோயில் ஒன்று உள்ளது. இதன் வாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மூன்று யானை சிற்பங்கள் இருக்கின்றன. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.

இசட் முனை

கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் இசட் முனைக்கு செல்லலாம். இந்தப் பகுதியை நடைபயணம் மூலம் அடைவது சிறப்பானது. அப்போது வழியெங்கும் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை பயணிகள் கண்டு ரசிக்கலாம். இசட் முனையை நெடுந்தூர நடைபயனத்துக்கு பின் நீங்கள் அடைந்த பிறகு அற்புதமான சூர்ய அஸ்த்தமனத்தின் எழில் மிகும் காட்சியை காணலாம். அதோடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் கிறங்கடிக்கும் ஷோலா புல்வெளியின் பேரழகை இசட் முனையிலிருந்து பார்க்கும் எவருமே அந்த காட்சியை அவ்வளவு விரைவில் மறந்து விட மாட்டார்கள்.

Vijay Sawant

ஆகும்பே

ஆகும்பே

அரபிக் கடலில் சூரியன் அஸ்த்தமனமாகும் கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமான ஊர் அகும்பே. அகும்பே மால்நாடு பகுதியில் உள்ள மகாகவி குவெம்புவின் சொந்த ஊரான தீர்த்தஹள்ளி தாலுக்காவில் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும்.

அகும்பேவில் உள்ள 'அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்' தான் இந்தியாவிலுள்ள மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையங்கிளிலேயே நிரந்தரமானது ஆகும். இங்கு பலவகைப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. அதோடு இங்கு மருத்துவ மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அகும்பேவின் அமைதிக்காகவும், அங்குள்ள அழகிய அருவிகளை காணவும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்து திரள் திரளாக வருகின்றனர்.

மூன்று கிலோ மீட்டர் சுற்றளவே கொண்ட அகும்பேவில் ஐநூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். அனைவரும் பெரும்பாலும் கொட்டைப் பாக்கு பயிரிடுவதையும், காடுகளை நம்பியுமே பிழைப்பு நடத்தி வருகின்றனர். சாகசப் பயணம் செல்ல விரும்பும் இயற்கை காதலர்களுக்கு அகும்பே ஒரு வரப்பிரசாதம். அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது.

ஜோகிகுண்டி அருவி

வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜோகிகுண்டி அருவி அகும்பேவிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முக்கால்வாசி தூரத்தை வாகனங்கள் மூலமாகவும் மீதி தூரத்தை நடை வழியாகவும் சென்றடைய வேண்டும். சிறு குளத்திலிருந்து தொடங்கும் ஜோகிகுண்டி அருவி பின்பு பள்ளத்தாக்கை கடக்கும் போது துங்க நதியுடன் இணைகிறது. பல ஆண்டுகளாக நீர் ஓடிக் கொண்டிருப்பதால் உண்டான 50 அடி நீள குகைகளில் ஜோகிகுண்டி அருவி பாய்ந்து செல்கிறது.

பர்கானா அருவி

இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக கருதப்படும் பர்கானா அருவியின் உயரம் 850 அடி ஆகும். இந்த அருவி அகும்பேவிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில், ஷிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இது சீதா நதியிலிருந்து உற்பத்தியாகிறது. இதன் பெயரிலுள்ள 'பர்கா' என்ற வார்த்தை, இப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் புலுட்டுமான் எனும் மான் வகையை குறிக்கிறது.

ஓநேக் அபி அருவி

அகும்பே வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஓநேக் அபி அருவி முக்கியமானது. இது அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம். அதோடு உச்சத்திலிருந்து கொட்டிக்கொண்டிருக்கும் அருவியின் அற்புதக் காட்சியையும் மக்கள் கண்டு ரசிக்கலாம்.

Harsha K R

இந்த சுற்றலாவின் சிறப்பம்சங்கள்

இந்த சுற்றலாவின் சிறப்பம்சங்கள்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் நேரமேலாண்மைக்கு ஏற்றவாறு குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நேரம் இருந்தால், இன்னும் நிறைய இடங்களை ரசிக்கமுடியும்.

இந்த வழியில் வரும் மேலும் சில இடங்கள் இவை.

தலைக்காவிரி, புஷ்பகிரி சரணாலயம், இருப்பு நீர்வீழ்ச்சி, அப்பே நீர்வீழ்ச்சி, புருடே நீர்வீழ்ச்சி, பைலாகுப்பே, ராஜாசீட், ஹொன்னம்மன கேரே, நிசர்கதாமா, கட்டிகே, ஹாரங்கி அணை, சுண்டிக்கொப்பா, வாலனூர் பிஷிங் காம்ப், சாந்தி அருவி, பாறைப்பூங்கா என நிறைய இடங்கள் இருக்கின்றன.

Jeff Peterson

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X