Search
  • Follow NativePlanet
Share
» »காசிரங்கா தேசியப் பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது – சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!

காசிரங்கா தேசியப் பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது – சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!

இந்தியாவின் வனவிலங்கு வரைபடத்தில் பல சிறப்புகளும் பெருமைகளும் கொண்டு ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருக்கும் இந்த காசிரங்கா தேசியப் பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. கவுகாத்தியில் இருந்து சாலை மார்க்கமாக ஐந்து மணி நேர பயண தூரத்தில் இந்த அழகிய தேசியப் பூங்காவை அடைந்திடலாம்.

பருவமழை காரணமாக கடந்த மே மாதம் மூடப்பட்ட காசிரங்கா தேசியப் பூங்கா செப்டம்பர் 24 சனிக்கிழமையன்று சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் ஈஷா அறக்கட்டளையின் சத்குரு ஜக்கி வாசுதேவா ஆகியோர் பூங்காவை முறையாகத் திறந்து வைத்தனர்

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தேசியப் பூங்கா

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தேசியப் பூங்கா

1985 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட இந்த பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு தான் வசிக்கின்றன. ஆனால் அது அவ்வளவு சாமானியத்தில் நடந்திடவில்லை, அதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் பல தரப்பட்ட வனவிலங்குகளும், பல அரிய வகை தாவரங்களும் இந்த பூங்காவை தான் பூர்வீகமாகக் கொண்டுள்ளன! இங்கே ஒரு நாள் டூர் போனால் எப்படி இருக்கும் என்று பயணிப்போம் வாருங்கள்!

பலவகையான வனவிலங்குகளின் தாயகமான காசிரங்கா

பலவகையான வனவிலங்குகளின் தாயகமான காசிரங்கா

430 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் தேசியப் பூங்கா, அதிக அடர்த்தி கொண்ட யானை புல் சமவெளிகளைக் கொண்டுள்ளது. இதில் அதிகம் சுற்றித் திரிவது ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் தான். அதைக் காணவே உலகெங்கிலும் இருந்து மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.

ஆனால் அது மட்டுமே இதன் சிறப்பம்சம் இல்லை. காட்டு நீர் எருமை, கிழக்கு சதுப்பு மான், யானைகள், கவுர், சாம்பார், இந்திய முண்ட்ஜாக், காட்டுப்பன்றி, இந்திய சாம்பல் முங்கூஸ், சிறிய இந்திய முங்கூஸ், பெரிய இந்திய சிவெட், பெங்கால் நரி, தங்க நரி, சோம்பல் கரடி, ராயல் பெங்கால் புலிகள் என இங்கு மொத்தமாக 35 பாலூட்டி இனங்கள் உள்ளன.

பருவமழைக்காக ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் தேசியப் பூங்கா

பருவமழைக்காக ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் தேசியப் பூங்கா

'கிழக்கின் செரெங்கேட்டி' என்று அழைக்கப்படும் இந்த காப்பகம் ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட புவியியல் அம்சங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப்பெருக்கு சமவெளியில் அமைந்துள்ள காசிரங்கா ஆண்டு தோறும் வெள்ளப்பெருக்கை சந்திக்கிறது.

பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே உள்ள உயரத்தில் உள்ள வேறுபாடு காரணமாக, வண்டல் நீரில் மூழ்கிய புல்வெளிகள், வண்டல் சவன்னா வனப்பகுதிகள், வெப்பமண்டல ஈரமான கலப்பு இலையுதிர் காடுகள் மற்றும் வெப்பமண்டல அரை பசுமையான காடுகள் போன்ற நான்கு வகையான தாவரங்களை இங்கு காணலாம். இவை யாவும் ஆண்டு தோறும் வெள்ளத்தை சந்தித்தாலும், சிறிது காலத்திலேயே இயல்பு நிலைக்கு திரும்பி பூத்துக் குலுங்க தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாகவே மே மாதம் மூடப்பட்ட பூங்கா கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு இப்போது சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது!

காசிரங்கா தேசியப் பூங்காவில் கொட்டி கிடக்கின்ற சுவாரஸ்யங்கள்

காசிரங்கா தேசியப் பூங்காவில் கொட்டி கிடக்கின்ற சுவாரஸ்யங்கள்

ஒன்றல்ல இரண்டல்ல, இங்கு ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் ஒரு வனவிலங்கு ஆர்வலர் அல்லது இயற்கை ஆர்வலராக இருந்தால் நீங்கள் சட்டென்று இந்த பூங்காவை விட்டு கிளம்பி விட மாட்டீர்கள்.

ஜீப் சஃபாரி: அசாமின் மூன்று வெவ்வேறு மாவட்டங்களில் 3 நுழைவு-வெளியேறும் புள்ளிகளுடன், காசிரங்கா தேசியப் பூங்காவில் 4 மண்டலங்கள் உள்ளன, அங்கு ஒரு கொம்பு காண்டாமிருகங்கள் மற்ற கவர்ச்சியான விலங்குகளுடன் சேர்ந்து ஜீப் சஃபாரியில் மயக்கும் நிலப்பரப்பைக் கண்டு மகிழலாம்.

பர்ட் வாட்சிங்: இந்த பூங்காவின் கிழக்குத் தொடர், பலதரப்பட்ட பறவைகளை ஈர்க்கக்கூடிய இடமாகும், ஏனெனில் இந்த பகுதியில் நீர் தடாகங்கள் உள்ளன. பெலிகன், விஸ்லிங் டீல், கிரேட்டர் அட்ஜுடண்ட் ஸ்டோர்க் போன்ற தனித்துவமான பறவைகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

யானை சஃபாரி: என்னதான் ஜீப் சஃபாரி செய்து இருந்தாலும், யானை மீது ஏறி குலுங்கி குலுங்கி சென்று இயற்கை அழகையும் வன விலங்குகளையும் கண்டு ரசிப்பது இன்னும் சற்று கூடுதல் அலாதியாக இருக்கும்.

ஆர்க்கிட் பூங்கா: நீங்கள் இயற்கையின் அழகைக் காண விரும்பினால் மத்திய மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள ஆர்க்கிட் பூங்காவிற்கு கட்டாயம் செல்ல வேண்டும். பூங்காவில் சுமார் 500 வகையான ஆர்க்கிட் வகைகள் உள்ளன, இவற்றின் கண்கவர் காட்சிகள் உங்கள் மனதை மயக்கிவிடும்.

பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை காரணமாக மே முதல் அக்டோபர் வரை பூங்கா மூடப்பட்டுள்ளது. ஆகவே நவம்பர் முதல் ஏப்ரல் வரை காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்ல சிறந்த நேரமாகும்.

காசிரங்காவை எப்படி அடைவது?

காசிரங்காவை எப்படி அடைவது?

விமான வழி: பூங்காவில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள கவுஹாத்தி விமான நிலையம் காசிரங்காவிற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். மற்றுமொரு விமான நிலையம் காசிரங்காவிலிருந்து 100 கிமீ தொலைவில் ஜோர்ஹட்டில் அமைந்துள்ளது.

ரயில் வழி: காசிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கவுஹாத்தி ரயில் நிலையம் பூங்காவிற்கு அருகிலுள்ள இரயில் நிலையம் ஆகும். கவுஹாத்தியில் இருந்து காசிரங்காவிற்கு வண்டிகள் எளிதில் கிடைக்கின்றன.

சாலை வழி: NH-37 இல் அமைந்துள்ள கோஹாரா, காசிரங்கா தேசிய பூங்காவை அடைவதற்கான முக்கிய வழி ஆகும். குவஹாத்தி, தேஜ்பூர் மற்றும் அசாமின் பல பகுதிகளிலிருந்து கோஹாராவிற்கு எளிதாக ASTC மற்றும் தனியார் பேருந்துகள் கிடைக்கின்றன.


Read more about: kaziranga national park assam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X