
குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகபிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரத்தில் மௌரிய காலத்திற்கும் முற்பட்ட புத்த ஸ்தூபி ஒன்று உள்ளது. இது போன்று மிகப்பெரிய ஸ்தூபி இதுவரை எங்கேயும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமராவதி நகரம் தன்யகட்டகா அல்லது தரணிகொட்டா என்ற பெயர்களில் முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நகரை தலைநகரமாக கொண்டு கி.மு 2-ஆம் மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆந்திராவின் முதல் ஆட்சியாளர்களாக கருதப்படும் சதவன்ஹனாஸ் ஆண்டு வந்தனர். அதோடு அமராவதி நகரில்தான் புத்தர் தன்னுடைய காலச்சக்ரா எனப்படும் போதனைகளை உபதேசம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் வஜ்ராயனா எனும் எழுத்து வடிவில் இங்கு காணப்படுவதோடு, அவை அமராவதி நகரம் கி.மு 500-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும் கூறுகிறது.
அமராவதியின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் பற்றி காண்போம் வாருங்கள்.

சுற்றுலா
அமராவதியின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமராவதி ஸ்தூபம் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவை தவிர கிருஷ்ணா நதிக்கரை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

சுற்றுலா வழிகாட்டி
அமராவதியின் அருகாமை விமான நிலையமாக விஜயவாடா விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற அரசுப் பேருந்துகள் அமராவதி நகருக்கு இயக்கப்படுகின்றன.

அமராவதி ஸ்தூபம்
அமராவதி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக கருதப்படும் அமராவதி ஸ்தூபம் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகும். மனசைத்யா என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த ஸ்தூபம் கி.மு. 200-ஆம் நூற்றாண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஸ்தூபியில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் புத்தரின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் எடுத்துரைப்பதாக உள்ளன.

புத்த சிலைகள்
அமராவதி நகரம் சதவன்ஹனாஸ் மகாராஜாக்களின் ஆளுகைக்குள் வந்த போது அமராவதி ஸ்தூபம் சுண்ணாம்புக் கற்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதுடன், புத்தரின் முழு உருவச் சிலைகள் வடிக்கப்பட்டன. ஆனால் புத்த மதத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அமராவதி ஸ்தூபம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு மண்ணுள் புதையுண்டு போனது.

புத்துயிர் பெற்றது
எனினும் கி.பி 1796-ஆம் ஆண்டு அமராவதி நகருக்கு வந்த பிரிட்டிஷ் இந்தியாவின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸி புதைந்து கிடந்த ஸ்தூபியை கண்டுபிடித்து தோண்டி எடுக்கச் செய்தார். அப்போது ஸ்தூபியுடன் முன்பு இணைந்திருந்த சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கிருஷ்ணா நதிக்கரை
அமராவதி நகரம் கிருஷ்ணா நதிக்கரையோரம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதால் நகர மக்கள் மத்தியில் கிருஷ்ணா நதிக்கரை முக்கியமானதாக கருதப்படுவதுடன் பிரதான சுற்றுலாப் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது. அதோடு பெரும்பாலான மனித நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில்தான் நிறுவப்பட்டன என்பதின் அடிப்படையில் கிருஷ்ணா நதியை அமராவதி நகர மக்கள் வாழ்வின் அமுதமாகவே கருதி வருகின்றனர்.

கிருஷ்ணா நதியின் பங்கு
அமராவதி நகரம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இருந்து வருவதோடு, அது இத்தனை நூற்றாண்டுகள் வளமையுடன் நிலைத்திருப்பதற்கு கிருஷ்ணா நதியின் பங்கு அளப்பரியது. அதுமட்டுமல்லாமல் இன்றளவும் கிருஷ்ணா நதியின் மதிப்பும், முக்கியத்துவமும் எள்ளளவும் குறைந்ததில்லை. மேலும் அமராவதி நகரின் மதிப்பிட முடியா சொத்தாக கருதப்படும் கிருஷ்ணா நதி ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

தொல்பொருள் அருங்காட்சியகம்
அமராவதியின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த ஆதாரமாக திகழ்ந்து வரும் தொல்பொருள் அருங்காட்சியகம் கிருஷ்ணா நதிக் கரையின் வலது புறத்தில் அமைந்திருக்கிறது. இந்திய கலை வரலாற்றினை எடுத்துச் சொல்லும் அதேவேளையில் கலை மற்றும் கைவினைப் பொருட்களின் வழி அமராவதியின் பெரும் செல்வத்தை தொல்பொருள் அருங்காட்சியகம் காட்சிப்படுத்தி வருகிறது.

பாரம்பரியம்
தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகள் 3-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அதோடு தாமரை மற்றும் பூர்ணகும்பா உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் அமராவதியின் பாரம்பரியத்துக்கு மிகச் சிறந்த அடையாளங்களாகும். மேலும் அமராவதியின் நற்பேறு மற்றும் செல்வச் செழிப்பை குறிக்கும் விதமாக சின்னங்கள் சிலவும் இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் நீங்கள் அறிந்துகொள்ளும் செய்திகள் போல வரலாற்று புத்தகங்களில் கூட உங்களால் கற்க முடியாது என்பது திண்ணம்.

விமானம் மூலம்
அமராவதி நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் விஜயவாடா விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதோடு அமராவதியிலிருந்து 271 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விமான நிலையங்களுக்கு பயணிகள் வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக அமராவதி நகரை அடையலாம்.

ரயில் மூலம்
அமராவதி நகரிலேயே ரயில் நிலையம் இருப்பதோடு, இது குண்டூர் ரயில் நிலையத்துடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே குண்டூர் வழி நாட்டின் அனைத்து நகரங்களையும் ரயில் மூலம் சுலபமாக அடையலாம்.

சாலை மூலம்
அமராவதி நகரம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் சாலை வழியே நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து அமராவதி நகருக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எப்போது செல்லலாம்?
கோடை காலம் (மார்ச் முதல் ஜூன் வரை) : அமராவதி நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 45 டிகிரி வெப்பநிலை பதிவாகும். இந்த சுட்டெரிக்கும் கோடை காலத்தில் அமராவதி நகருக்கு சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.
மழைக் காலம் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) : அமராவதி நகரின் மழைக் காலங்களில் குறைந்தபட்சமாக 32 டிகிரி வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் அமராவதி நகரில் மிதமான மழைப்பொழிவு இருக்கும்.
பனிக் காலம் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : அமராவதி நகரின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 25 டிகிரி வெப்பநிலை பதிவாகும்.
அமராவதி நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது.