Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு அருகில் ட்ரெக்கிங் செய்ய, நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்படி ஒரு இடமா?

சென்னைக்கு அருகில் ட்ரெக்கிங் செய்ய, நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்படி ஒரு இடமா?

எப்பொழுதும் சென்னை நகரத்திற்கு உள்ளேயே பரபரப்பான சாலைகளுக்குள் சுற்றி திரிந்து அலுப்பாகி விட்டதா? இயற்கை சார்ந்த சூழல், மரம், செடி, கொடிகள், காடுகள், நீர்வீழ்ச்சி என பார்த்து ரசித்து ட்ரெக்கிங் செய்தால் நன்றாக இருக்கும் தானே! சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் செல்ல இது மிகவும் சரியான ஸ்பாட் ஆகும். எங்கே இருக்கிறது? எப்படி செல்வது? எப்போது செல்வது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? போன்ற முக்கிய தகவல்கள் கீழே!

சென்னைக்கு அருகில் ஒரு மனதை மயக்கும் சுற்றுலாத் தலம்

சென்னைக்கு அருகில் ஒரு மனதை மயக்கும் சுற்றுலாத் தலம்

பரபரப்பான நகர வாழ்வில் இருந்து சற்று ஓய்வெடுத்து இயற்கையின் மடியில் லேசாக தலை சாய்த்தால் எப்படிப்பட்ட மன குழப்பமும், டென்ஷனும், வருத்தமும் நீங்கிவிடும். ஆனால் வேலைப்பளு, குடும்ப அலுவல்களால் சென்னையில் இருந்து நகர முடியவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் அச்சமின்றி இந்த இடத்தை தேர்வு செய்யலாம். நாகலாபுரம் சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளதால் அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் அடைந்திடலாம். அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் ஆட்டம் போட்டுவிட்டு மாலை கிளம்பினால் இரவு சென்னைக்கு வந்து விடலாம். ஒரு நாளில் என்ன பெரிய அனுபவம் கிட்டி விட போகிறது என்று யோசிக்கிறீர்களா? அது தான் தவறு, ஒரு முறை சென்று பாருங்களேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயம் செல்வீர்கள்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சி

நீண்ட இடைவெளிக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சி

நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் சென்னைக்கு அருகில் இருக்கும் மிக அழகிய நீர்வீழ்ச்சிகள் ஆகும். சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும் ஊத்துக்கோட்டையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் சில காரணங்களுக்காக இந்த நீர்வீழ்ச்சி நிரந்தரமாக மூடப்பட்டது. இப்போது ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை விட இப்போது கட்டுப்பாடுகள் கூடியிருக்கிறது. வனத்துறையே இதை எடுத்து நடத்துவதால் இங்கு பாதுகாப்பு குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

சொந்த வாகனங்களில் வருவதே நல்லது

சொந்த வாகனங்களில் வருவதே நல்லது

நீங்கள் அங்கு சென்ற உடனே செக் போஸ்ட் உங்களை வரவேற்கிறது. பேருந்து, ரயில் போன்ற வசதிகள் எல்லாமும் மிக தூரத்தில் இருப்பதால் நீங்கள் உங்கள் சொந்த வாகனங்களில் வருவது மிக நல்லது. செக் போஸ்டை ஒட்டியிருக்கும் பார்க்கிங்கில் உங்களது கார் அல்லது பைக்கை பார்க் செய்துவிட்டு. அங்கிருந்து நடக்க ஆரம்பிக்கலாம். 5 அருவிகள் கொண்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் ஒவ்வொன்றை அடைவதற்கும் குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது. நீங்கள் நடக்கும் வேகத்தை பொறுத்து நீர்வீழ்ச்சியை அடையும் நேரமும் குறையும் அல்லது அதிகரிக்கும் பயணிகளே!

புத்துணர்ச்சி அளிக்கும் அனுபவம்

புத்துணர்ச்சி அளிக்கும் அனுபவம்

செக் போஸ்டில் இருந்து ஒன்றரை கிமீ தூரத்தில் முதல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. செக் போஸ்டில் ரூ. 20 செலுத்தி என்ட்ரி டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். அங்கிருந்து மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். உங்களை போலவே அங்கு நிறைய பயணிகள் வருகை தருவதால் எப்படி செல்வது என்று பயம் வேண்டாம். வேடிக்கை பார்த்துக்கொண்டே ஆனந்தமாக நடக்கலாம். இருபது நிமிடங்களிலேயே முதல் நீர்வீழ்ச்சியை அடைந்து விடுவீர்கள். எப்பொழுதும் நகரத்திற்கு உள்ளேயே இருக்கும் நமக்கு நீர்வீழ்ச்சியின் சத்தத்தை கேக்கும் பொழுது நம்முள் எழும் ஆரவாரத்திற்கு அளவே இருக்காது.

மனதை மயக்கும் காட்சிகள்

மனதை மயக்கும் காட்சிகள்

முதல் நீர்வீழ்ச்சியில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலே அடுத்தடுத்த நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. சுற்றிலும் பசுமை, தூய்மையான நீர், சிறு சிறு குளங்கள் என பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இந்த சிறு குளங்களிலும் நீர்வீழ்ச்சியிலும் நீங்கள் இறங்கி குளிக்கலாம். நீர் மிகவும் இதமாக இருப்பதால் உங்களுக்கு அதைவிட்டு வெளி வரவே மனது இருக்காது. நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம். ஏனெனில் அங்கு எதுவும் கிடைக்காது. அதே நேரத்தில் இவ்வளவு மெனக்கெட்டு வந்த இடத்தில் அமர்ந்து ரசித்தால் தானே நன்றாக இருக்கும்.

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

காலையில் நீங்கள் 7 மணிக்கெல்லாம் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். சென்னையில் இருந்து NH 16 வழியாக புழல், ரெட்ஹில்ஸ் வழியாக, திருப்பதி சாலையில் இடது புறமாக சென்றால் ஊத்துக்கோட்டையை அடைவீர்கள். அங்கிருந்து பிச்சாத்தூர் வழியாக சென்றால் அரை மணி நேர்த்தில் செக் போஸ்டிற்கு வந்திடலாம். அனைத்து நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து விட்டு மாலை 5 மணிக்கு கிளம்பினாலும் கூட சீக்கிரம் சென்னை வந்தடையலாம்.

உங்களுக்குள் தேங்கி இருக்கும் அழுத்தம் யாவையும் போக்க, நண்பர்களுடன் ஒரு ஜாலி பிக்னிக் செல்ல, காதலருடன் லாங் ரைடு செய்ய இது ஒரு சரியான சாய்ஸ் ஆகும். சென்னைவாசிகளே, இந்த வார இறுதியே நீங்கள் திட்டமிடுங்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X