ஒரு பக்கம் எச் ராஜா மறுபக்கம் கார்த்தி சிதம்பரம்.. இப்ப வந்த மக்கள் நீதி மய்யம் சார்பா சிநேகனும் களம் இறங்கிருக்காரு.. அட சிவகங்கை எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கோங்க..
சிவகங்கை மாவட்டம் 1984ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது ஆகும். முதலில் சிவகங்கை சீமை என்று அழைக்கப்பட்ட இந்த மாவட்டம் பின் சிவகங்கை மாவட்டம் என பெயர் பெற்றது. இந்த மாவட்டம் கொஞ்சம் வறட்சியான மாவட்டம் என அறியப்பட்டாலும், இங்கும் சில சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. வாருங்கள் சிவகங்கை மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சிவகங்கையில் காணவேண்டிய இடங்கள்
பட்டமங்கலம் குரு கோவில், மாடப்புறம் காளி கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி காள கோவில், நாட்டரசன்கோட்டை கோவில், சொர்ண காளீஸ்வரர் கோவில், காளையார் கோவில், அரிய குடி பெருமாள் கோவில், கற்பகவிநாயகர் கோவில் உட்பட பல ஆன்மீகத் தலங்கள் இங்கு காணப்படுகின்றன.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், செட்டிநாடு வீடுகள் அரண்மனை என காண்பதற்கு பல இடங்கள் இங்கு இருக்கின்றன. வாருங்கள் சிவகங்கை சீமைக்கு செல்வோம்.

எப்படி எப்போது செல்வது
சிவகங்கை பகுதிக்கு கோடைக் காலங்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் எந்தவித சந்தேகமும் இன்றி பயணிக்கலாம்.
பேருந்து வசதிகள்
மதுரை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இங்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன.
மதுரையிலிருந்து 48 கிமீ தூரத்திலும், சென்னையிலிருந்து 449 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த சிவகங்கை. இதுதான் சிவகங்கை மாவட்டத்தின் தலைநகரம். இந்த ஊர் திருச்சியிலிருந்து 130 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
சிவகங்கை ரயில் நிலையம்
சிவகங்கையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ராமேஸ்வரம் விரைவு, சென்னை, கோவை, பாண்டி, சிலம்பு விரைவு உள்ளிட்ட ரயில்கள் வருகை தருகின்றன.
இங்கிருந்து மதுரை, ராமேஸ்வரம், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கானாடு காத்தான்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு மிக அருகில் அமைந்துள்ள சிறு நகரம் கானாடு காத்தான்.
கானாடு காத்தான் ஊரில் அமைந்துள்ள வீடுகளும், இங்கு செய்யப்படும் உணவுகளும் தனித்தன்மை வாய்ந்தவை.
செட்டிநாட்டு பாணியில் பிரதானக் கதவுகள் மற்றும் நுழைவு வாயில்கள், கம்பீரமாகவும், சிறப்பான வேலைப்பாடுகளுடன், இந்துக் கோயில்களின் நுழைவு வாயில்களை ஞாபகப்படுத்தும்படி அமைந்துள்ளன.
சமையல் கலை, நறுமணப் பொருள்கள், மூலிகைகள் எல்லாமே செட்டிநாட்டு பாணிதான்.

செட்டிநாடு அரண்மனை
காரைக்குடி மற்றும் ஆத்தங்குடி பகுதிகளில் காணப்படும் வீடுகள் காண்பதற்கு அரண்மனைகளைப் போல பிரம்மாண்டமாக இருக்கும். அந்த அளவுக்கு மெனக்கட்டு கட்டியிருப்பார்கள்.
செட்டிநாடு அரண்மனை, இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கலை, கட்டிடக் கலை, மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவை என்றே கூறலாம்.
கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து, இந்த அரண்மனை கட்டுமானத்திற்கு மூலப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள் மற்றும் திண்டுகள் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்பட்டதால், இவை இக்கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.
அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. எனினும், இது, வெவ்வேறு வகையான கலைகள் மற்றும் பாணிகளைக் கொண்டுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
நேரம் - எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

ஆத்தங்குடி
ஆத்தங்குடி கிராமம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இக்கிராமம், கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது; ஏனெனில், இவ்வகை ஓடுகள் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றன.
செம்மண் வோடுகள், சிமின்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடுகள் மற்றும் பெல்லி ஜெல்லி ஆகியவற்றை உபயோகித்து செய்யப்படுகின்றன. இந்த ஓடுகள், முதலில் வடிவமைக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டு, பின் கண் கவர் கலை வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
மக்கள், அவர்கள் வீடுகள் மற்றும் புல்தரைகளுக்குத் தக்கவாறு, ஓடுகள் செய்யச் சொல்லியும் வாங்கிப் போகின்றனர். விலங்கினங்கள் மற்றும் செடிகள் வரையப்பட்டுள்ள, புல்தரைகளுக்காகவே பிரத்யேகமாக தயாராகும் ஓடுகள் மிகப் பிரபலமானவையாகும்.
நீங்கள் உங்கள் சுவர்களின் மற்றும் திண்டுகளின் வண்ணங்களுக்குப் பொருத்தமான வண்ணங்களிலும் இவ்வோடுகளைத் தேர்வு செய்யலாம். ஆத்தங்குடி மக்கள் தங்கள் வீடுகளை மேலும் அழகுபடுத்திக் காட்ட, இவ்வோடுகளை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக, பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வரும் வீடுகளில் இவ்வகை ஓடுகளைக் காணலாம்.