Search
  • Follow NativePlanet
Share
» »நீங்கள் இந்தியராக இருந்தாலும் கூட இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி பெற்றிருக்க வேண்டும்!

நீங்கள் இந்தியராக இருந்தாலும் கூட இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி பெற்றிருக்க வேண்டும்!

வெளிநாடு செல்லும்போது அனுமதி மற்றும் விசா பெறுவது பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், நம் நாட்டிற்குள் சில இடங்களுக்கு செல்வதற்கே நாம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்தியா பல மாநிலங்கள் பல யூனியன் பிரதேசங்கள் கொண்ட பெரிய நாடாக இருந்தாலும் கூட, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அழகையும், சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. நீங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று அவற்றின் அழகைக் கண்டு வியந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் நீங்கள் பல இடங்களுக்கு சென்றது போல, இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களுக்கு நீங்கள் சாதாரணமாக செல்ல முடியாது, முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இன்னர் லைன் பெர்மிட் என்பது இந்தியாவில் நீண்ட காலமாக பழக்கத்தில் இருக்கும் ஒன்று. இந்தியாவின் முக்கியமான சர்வதேச எல்லைப் பகுதிகளுக்குச் செல்பவர்கள் அனைவருக்கும் இன்னர் லைன் பெர்மிட் தேவை. இந்த பெர்மிட் அங்கு செல்லும் மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பழங்குடியின சமூகங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது. கீழ் வரும் இடங்களுக்குள் செல்வதற்கு முன் நீங்கள் இன்னர் லைன் பெர்மிட் பெற்றிருக்க வேண்டும்.

arunachal pradesh

அருணாச்சலப் பிரதேசம்

அழகிய மலைகள், ஆராயப்படாத கணவாய்கள், கண்கவர் நதிகள், பனி மூடிய சிகரங்கள் என அருணாச்சலப் பிரதேச சுற்றுலா உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். "தி லேன்ட் ஆஃப் டான்" என்றழைக்கப்படும் அருணாச்சலப் பிரதேசம் தனது எல்லைகளை பூடான், மியான்மர் மற்றும் சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளூர் அல்லாத ஒவ்வொருவரும் இங்கு வரும் முன் இன்னர் லைன் பெர்மிட் பெற்றிருப்பது அவசியம். கொல்கத்தா, ஷில்லாங், கவுஹாத்தி மற்றும் புது தில்லி நகரங்களில் இருந்து அருணாச்சலப் பிரதேச அரசாங்க குடியுரிமை ஆணையரிடம் அனுமதிகளைப் பெறலாம். இது தவிர, அனுமதிப் படிவங்களை ஆன்லைனிலும் பெறலாம். ஒரு நபருக்கான கட்டணம் ரூ. 1௦௦, இது 3௦ நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Mizoram

லட்சத்தீவுகள்

சமஸ்கிருதத்தில் "நூறாயிரம் தீவுகள்" என்று பொருள்படும் லட்சத்தீவு இந்தியாவின் ஒரு அழகிய யூனியன் பிரதேசமாகும். பல்வேறு வகையான பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் இருப்பிடமாக இருக்கும் லட்சத்தீவுகளின் அழகை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இங்கு பயணம் செய்யும் அனைவரும் அங்கு செல்வதற்கு முன்பே அனுமதி பெற்றிருப்பது அவசியம். 5 மாதத்திற்கு செல்லுபடியாகக் கூடிய இலவச பாஸ் ஆன்லைனில் கிடைக்கிறது. உங்கள் பெயர், முகவரி, வசிக்குமிடம் மற்றும் தேவையான ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து பாஸ்களை பெறலாம்.

lakshwadweep

மிசோரம்

மிசோரம் இந்தியாவின் ஐந்தாவது மிகச்சிறிய மாநிலமாக இருந்தாலும் கூட பல்வேறு வரலாற்று மற்றும் கலாச்சார மரபுகளைக் கொண்டுள்ள மாநிலமாகும். மனதைக் கவரும் நிலப்பரப்பு மற்றும் மகிழ்ச்சியான காலநிலைக்கு பெயர் பெற்ற மிசோரம் பங்களாதேஷ் மற்றும் மியான்மருடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. பல்வேறு பழங்குடியினரின் தாயகமான மிசோரமுக்குள் நுழைய இன்னர் லைன் பெர்மிட் கட்டாயம். கொல்கத்தா, சில்சார், ஷில்லாங், கவுகாத்தி மற்றும் புது டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மிசோரம் அரசாங்க தொடர்பு அதிகாரியிடம் பெர்மிட் பாஸ்களை பெறலாம். விமானம் மூலம் மிசோரமுக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள், ஐஸ்வால், லெங்புய் விமான நிலையத்திற்கு வரும்போது பாதுகாப்பு அதிகாரியிடம் பெர்மிட் பாஸ்களை பெறலாம். தற்காலிக பாஸ் பெற ரூ. 12௦, ரெகுலர் பாஸ் பெற ரூ. 22௦ கட்டணம் வசூலிக்கப்படுகிறது, பெர்மிட் பாஸ் பெற நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களும், ஒரு போட்டோ ஐடி யும் தேவைப்படுகிறது.

Nagaland

நாகாலாந்து

வடகிழக்கு பாரம்பரியமும், கலாச்சாரமும் நிறைந்த நாகாலாந்து சுமார் 16 பழங்குடியினரின் தாயகமாகும். நாகாலாந்தின் ஒவ்வொரு பகுதியும் அதன் தனித்துவமான பழக்கவழக்கங்கள், மொழி, பண்பாடு, நாகரீகம் மற்றும் உடை ஆகியவற்றால் வேறுபடுகிறது. ஆனால் இந்த அழகான இடத்திற்கு செல்ல நீங்கள் திமாபூர், கோஹிமா, மொகோக்சுங், புது தில்லி, கொல்கத்தா மற்றும் ஷில்லாங்கின் துணை ஆணையரிடமிருந்து இன்னர் லைன் பெர்மிட்டை பெறலாம். ஆன்லைனிலும் அனுமதி பெறலாம். அனுமதி பெற இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் மற்றும் ஒரு போட்டோ ஐடி போதுமானது. இன்னர் லைன் பெர்மிட்டிர்க்காக ஒரு நபருக்கு ரூ. 1௦௦ வசூலிக்கப்படுகிறது.

Ladakh

லடாக்

ஜம்மு & காஷ்மீரின் லடாக் பகுதி பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பகுதியாகும். பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு செல்ல அங்கு உள்ள பொதுமக்களுக்கே அனுமதி கிடையாது. இருப்பினும், டா, பாங்கோங் த்சோ, நுப்ரா பள்ளத்தாக்கு, கர்துங் லா பாஸ், தாங்க்யார் போன்ற மிக அழகான பகுதிகள் இன்னர் லைன் பெர்மிட்டின் கீழ் வருகின்றன. குடியுரிமைச் சான்றிதழின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல், போட்டோ ஐடி மற்றும் உங்கள் அனுமதிகளின் ஒப்புதலுக்காக லே-லடாக் மாவட்டத்தின் டிசிக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை விண்ணப்பக் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பித்து நாம் அனுமதி பெறலாம், இதை ஆன்லைனில் விண்ணபிக்கலாம். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 30 ரூபாய் இன்னர் லைன் பெர்மிட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Some parts of Sikkim

சிக்கிமின் சில பகுதிகள்

சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தியாவின் அழகிய மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் அதன் எல்லையை நேபாளம், சீனா மற்றும் பூடானுடன் பகிர்ந்து கொள்கிறது. சிக்கிமின் பல இடங்களை நீங்கள் எந்தவொரு அனுமதியில்லாமல் பார்வையிடலாம். ஆனால், லாச்சுங், சோம்கோ ஏரி, நாதுல்லா, த்சோங்ரி & கோசாலா ட்ரெக்கிங், யும்தாங், யுமேசம்டாங், தாங்கு பள்ளத்தாக்கு, குருடோங்மார் ஏரி போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல நாம் அனுமதி பெற்றிருத்தல் அவசியம். டூர் ஆபரேட்டர்கள் அல்லது பயண முகவர்களிடமிருந்து சிறப்பு அனுமதியை ஏற்பாடு செய்வதற்கான உதவியையும் நீங்கள் பெறலாம். பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதாரை கொண்டு பாஸை பெறலாம். இதற்கான கட்டணம் 2௦௦ ரூபாய் ஆகும்.

Manipur

மணிப்பூர்

வடகிழக்கு மாநிலங்களின் நகை என்று குறிப்பிடப்படும் மணிப்பூர் அதன் இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது. பசுமையான மலைகள், பள்ளத்தாக்குகள், நதிகள் மற்றும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமம் நிறைந்த மணிப்பூருக்கு செல்வதற்கு முன் அனுமதி பெற்றிருத்தல் அவசியம். அதற்கான கட்டணம் ரூ. 5௦௦ ஆகும். போட்டோ ஐடி மற்றும் இதர தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நாம் இன்னர் லைன் பெர்மிட்டை பெறலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X