Search
  • Follow NativePlanet
Share
» »திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் கதை

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் கதை

By Staff

தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் பல உணவு வகைகள் பிரபலம். எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு இருந்தாலும் நம் நினைவுக்கு வருவதென்னவோ இருட்டுக்கடை அல்வா தான். அதன் கதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

எப்போது துவங்கியது?:

1940களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டு இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது.

அல்வாவின் தனித்துவம்:

இருட்டுக்கடை அல்வாவிற்கென்று பிரத்யேக சுவை வரக் காரணம் அல்வா செய்ய பயன்படுத்தும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளால் தான் அரைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் இந்த அல்வாவிற்கான பிரத்தேக சுவையை தருவதாக சொல்லப்படுகிறது. கைகளால் தான் அல்வா கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு அல்வா மட்டுமே தயார் செய்கிறார்கள்.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் கதை

கடை எப்போது திறக்கப்படுகிறது?:

மாலை ஐந்தரை மணி அளவில் இருட்டுக்கடை திறக்கப்படுகிறது. திறப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பிருந்தே கூட்டம் கூட ஆரம்பித்துவிடுகிறது. ஏழரை மணியளவில் அன்றைக்கென தயார்செய்யப்பட்ட மொத்த அல்வாவும் விற்றுவிடுகிறது.

கடை பெயர் காரணம்:

கடை ஆரம்பிக்கப்பட்ட புதிதில் ஒரே ஒரு காண்டா விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அந்தி சாயும் நேரத்தில் தான் இது திறக்கப்படுவது வழக்கம் என்பதால் இருட்டாய் இருக்கும் கடை என்பதே காலப்போக்கில் மாறி 'இருட்டுக்கடை' என்றாகிவிட்டது. இன்றுவரை இதற்கென தனி பெயர்பலகை கூட கிடையாது. இப்போது கண்டா விளக்குக்கு பதில் 200 வாட்ஸ் மின்விளக்கு ஒன்றுள்ளது மட்டுமே இருட்டுக்கடை எதிர்கொண்ட ஒரே மாற்றமாகும்.

எங்கே உள்ளது?:

நெல்லை நகரின் மையமான திரு நெல்லையப்பர் கோயிலை ஒட்டியே இருட்டுக்கடை உள்ளது. இந்த கடையில் அல்வா கால் கிலோ, அரைக்கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகள் எப்போதும் தயாராக இருக்கின்றன என்பதால் சீக்கிரம் வாங்கி வந்துவிடலாம். அல்வாவின் விலை ஒரு கிலோ ரூ.180 ஆகும்.

இதுவரை திருநெல்வேலி சென்றதில்லை என்றால் நிச்சயம் இந்த அல்வாவிற்க்காகவே ஒருமுறை சென்று வரலாம். எத்தனையோ இடங்களில் இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் அல்வா விற்கப்பட்டாலும் இதன் தனித்துவமான சுவைக்கு நிகரே கிடையாது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X