Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட காலம் கடந்து நிற்கும் ராஜாஜி மண்டபத்தைப் பற்றித் தெரியுமா?

சென்னையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட காலம் கடந்து நிற்கும் ராஜாஜி மண்டபத்தைப் பற்றித் தெரியுமா?

சென்னை ராஜாஜி மண்டபத்தை பலமுறை நாம் தொலைக்காட்சிகளிலும் செய்திதாள்களிலும் பார்த்திருப்போம். துக்கம், சந்தோஷம், கண்ணீர், சோகம், ஆனந்தம் என பல உணர்வுகளை இந்த மண்டபம் தாங்கி நிற்கிறது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்குள் அமைந்துள்ள ராஜாஜி மண்டபம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தமிழக முக்கிய தலைவர்களாக இருந்த சி.என்.அண்ணாதுரை, பெரியார் ஈ.வி.ராமசாமி, கே.காமராஜ், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, எம்.கருணாநிதி ஆகிய தலைவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததை நீங்களே அறிவீர்கள்! பல சரித்திரங்களை கண்ட இந்த மண்டபம் பல சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கியது!

திப்பு சுல்தானை வீழ்த்தியதன் நினைவாக கட்டப்பட்ட மண்டபம்

திப்பு சுல்தானை வீழ்த்தியதன் நினைவாக கட்டப்பட்ட மண்டபம்

1799 இல் ஆங்கிலேயர்கள் ஸ்ரீரங்கப்பட்டினத்தை கைப்பற்றியதன் நினைவாகவும், திப்பு சுல்தானை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக எட்வர்ட் கிளைவ் பிரபு ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்ப முடிவு செய்தார். அலுவல் சந்திப்புகள், விருந்துகள், விளையாட்டுகள், கச்சேரிகள், பொழுதுபோக்கு, விழாக்கள் என அனைத்து அம்சங்களும் அரங்கேற்றும் படியான ஒரு மண்டபத்தை கட்ட முடிவு செய்து, 1802 ஆம் ஆண்டு இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 74,000 பகோடாக்கள் செலவில் இது கட்டி முடிக்கப்பட்டது, அதாவது ரூ. 2,20,000 ஆகும்.

தனித்துவமான படிக்கட்டுகள் அமைந்த மண்டபம்

தனித்துவமான படிக்கட்டுகள் அமைந்த மண்டபம்

கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் உயரமான படிகள், தூண்கள் என்று பிரமாண்டமாக வீற்றிருக்கிறது. மறுவடிவமைப்பு பணியின் ஒரு பகுதியாக குறுகியதாக இருந்த கம்பீரமான படிக்கட்டுகள் இடித்து அகலப்படுத்தப்பட்டன. கொரிந்தியன் மற்றும் அயனித் தூண்கள் சேர்க்கப்பட்டன, மேலும் திறந்த மொட்டை மாடியில் நெடுவரிசைகள் மற்றும் தாழ்வான சுவர்கள் இணைக்கப்பட்ட வளைவுகளால் சூழப்பட்டது. இந்த மண்டபத்தின் பெரிய தூண்களும் படிக்கட்டுகளும் தான் இதன் முக்கிய ஈர்ப்பாகும்.

கிரேக்க கட்டிடக்கலை

கிரேக்க கட்டிடக்கலை

இந்த நியோகிளாசிக்கல் கட்டிடம் ஒரு கிரேக்க கோவிலின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஏதென்ஸில் உள்ள பார்த்தீனானை ஒத்திருக்கிறது. மண்டபத்தின் வெளிப்புற மேற்பரப்பு 16 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய மேனரிஸ்ட் பாணியில் கட்டப்பட்டது. 120 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 40 அடி உயரத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் தலைவர்களின் உருவப்படங்கள் நிறைந்த கேலரி

பிரிட்டிஷ் தலைவர்களின் உருவப்படங்கள் நிறைந்த கேலரி

எட்வர்ட் கிளைவ், ரிச்சர்ட் வெல்லஸ்லி, சர் ஐர் கூட், சர் தாமஸ் மன்ரோ, லார்ட் ஹோபார்ட் மற்றும் லார்ட் ஹாரிஸ் மற்றும் ராணி சார்லட் உள்ளிட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் உருவப்படங்கள் கொண்ட கேலரியால் இந்த மண்டபம் சூழப்பட்டிருந்தது. இப்பொழுது இந்திய தலைவர்களின் படங்களும் கேலரியை அலங்கரிக்கிறது.

பக்கிங்ஹாம் அரண்மனை போல கம்பீரமாக இருந்த அரங்கம்

பக்கிங்ஹாம் அரண்மனை போல கம்பீரமாக இருந்த அரங்கம்

வெள்ளி வர்ணம் பூசப்பட்ட இரும்புக் கதவுகள் கொண்ட இந்த மண்டபம் ஒரு காலத்தில் ஆளுநரின் மெய்க்காவலருக்கு அடைக்கலம் அளித்தன. இது அக்காலத்தில் வண்ணமயமாக இருந்தது. பிரிட்டிஷ் காலத்தின் சகாப்தத்தில் "காவலரை மாற்றுவது" இது லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்வாகும். ஆனால் புதிய சட்டசபை வளாகம் தோன்றியவுடன் இது மறைந்து விட்டது.

ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றப்பட்ட விருந்து மண்டபம்

ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றப்பட்ட விருந்து மண்டபம்

விருந்து மண்டபம் என்றழைக்கப்பட்ட இந்த மண்டபத்தின் பெயர் சுதந்திரத்திற்கு பிறகு ராஜாஜி மண்டபம் என்று மாற்றப்பட்டது. 1948 ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் அரசின் அரசாணையின் மூலம் இந்த கட்டிடம் ராஜாஜி ஹால் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போதிருந்து, இந்த இடம் ஆடம்பரமான நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

ராணி எலிசபெத் வந்து சென்ற இடம்

ராணி எலிசபெத் வந்து சென்ற இடம்

பிப்ரவரி 1961 இல், அப்போதைய முதல்வர் கே.காமராஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் ராணி எலிசபெத் தனது பிறந்தநாள் கேக்கை அங்கே வெட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த மண்டபம் பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் தனிச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகும்.

பல முக்கிய தலைவர்கள் உடல் வைக்கப்பட்டிருந்த அரங்கு

பல முக்கிய தலைவர்கள் உடல் வைக்கப்பட்டிருந்த அரங்கு

முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை (பிப்ரவரி 4, 1969) மற்றும் கே.காமராஜ் (அக்டோபர் 4,1975) ஆகியோரின் உடல்கள் மாநிலத்தில் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் ஈ.வி.ராமசாமி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, எம்.கருணாநிதி ஆகியோரின் உடல்களும் இங்கு வைகபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் பிரபலமான அடையாளங்களில் இதுவும் ஒன்று

சென்னையின் பிரபலமான அடையாளங்களில் இதுவும் ஒன்று

பல திரைப்பட படப்பிடிப்புகள் முதல் கூட்டங்கள், பொது விழாக்கள், கண்காட்சிகள் வரை இந்த இடத்தில் அரங்கேறியது. இந்த இடத்தை பல திரைப்படங்களிலும் பாடல்களிலும் நீங்கள் கண்டிருக்கலாம். தமிழ்நாட்டின் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான இந்த மண்டபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பதிவேடுகள் சேமிக்கப்படுகின்றன.

மேற்கூறிய அனைத்தும் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சித்ரா என்பவர் மேற்கொண்ட ஆய்வில் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும்! இத்தனை சிறப்புகளும் வரலாறும் நிறைந்த இந்த மண்டபத்தை நீங்கள் அடுத்த முறை பார்க்கும் போது இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு நியாபகம் வரும் தானே!

Read more about: chennai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X