India
Search
  • Follow NativePlanet
Share
» »ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!

ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!

மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்லின்னாங் கிராமம், வடகிழக்கு இந்தியாவில் நீங்கள் பார்வையிடும் மிகவும் சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக அறிவிக்கப்பட்ட இந்த கிராமம், வெறும் 7௦௦ குடிமக்களைக் கொண்டு, மிக உயர்ந்த கல்வியறிவு விகிதத்தையும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சமூகத்தையும் கொண்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

சீராக அமைக்கப்பட்ட ஓலைகளால் ஆன காசி குடிசைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே பூத்துக் குலுங்கும் பூக்கள், காய்கறி மற்றும் பழத் தோட்டங்கள், ஒவ்வொரு சில மீட்டருக்கும் இடையே இருக்கும் குப்பைத் தொட்டிகள், அழகான மூங்கில் கூடைகள் என அங்கே இருக்கும் காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைவது உறுதி. இந்தோ-வங்காள எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமம் அன்றாட வாழ்க்கையின் சலசலப்பிலிருந்து ஓய்வு அளிக்கும் இடமாக பார்க்கப்படுகிறது, இதனைப் பற்றிய மற்ற சிறப்பம்சங்கள் என்னவென்று இங்கேக் காண்போம்!

மவ்லின்னாங்கின் சிறப்பம்சங்கள்

மவ்லின்னாங்கின் சிறப்பம்சங்கள்

ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக, மிகவும் தூய்மையான கிராமமாக திகழும் மவ்லின்னாங்கில் இருக்கின்ற ஒவ்வொரு வீடுகளிலும் கழிவறைகளும், மூங்கில் குப்பைத் தொட்டிகளும் உள்ளன. இங்கு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், சாலைகளைத் துடைப்பதும், மரங்களை நடுவதும் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக பின்பற்றி வருகின்றனர்.
மவ்லின்னாங் முற்றிலும் வேறுபட்ட உலகமாகும், அதன் சொந்த பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கின்றன. ஆணாதிக்க ஆட்சியை விட்டுச் சென்ற புகழ்பெற்ற பழங்குடியின மரபான காசிகளின் தாயகமும் இந்த இடம் தான். தங்கள் விருந்தினர்களுக்கு அன்பான விருந்தோம்பலை வழங்குவது மவ்லின்னாங்கின் பூர்வீகவாசிகளின் மிகவும் நன்கு அறியப்பட்ட பண்புகளில் ஒன்றாகும்.
மவ்லின்னாங்கில் நீங்கள் உண்ணும் உணவின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவை அனைத்தும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இறைச்சி கூட வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் மற்றும் விலங்குகளில் இருந்து வருவதால் சுவையும் அசத்தலாக இருக்கிறது.

மவ்லின்னாங் கிராமம்

மவ்லின்னாங் கிராமம்

மவ்லின்னாங்கில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முதன்மையானது மவ்லின்னாங் கிராமமே தான். சீரான ஒரே பாணியில் கட்டப்பட்ட வீடுகள், அழகான தோட்டங்கள், பசுமையான முற்றங்கள், தூய்மையான மற்றும் அழகிய நகரத்தின் ஒட்டுமொத்த சூழல் பார்வையாளர்களை முற்றிலும் மாறுபட்ட உலகத்திற்கு கொண்டு செல்கிறது. மவ்லின்னாங்கில் உள்ள உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, அவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கை முறை பற்றிய விவரங்கள் மற்றும் தங்கள் கிராமத்தை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதை உங்களிடம் அன்போடு பகிர்ந்து கொள்வார்கள். மவ்லின்னாங்கில் உள்ள தங்கும் விடுதிகள் கிராமத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஹோம்ஸ்டேகளை உள்ளடக்கியது, இது உள்ளூர் மக்களைப் போலவே வாழவும், அவர்களின் வீட்டில் சமைத்த சுவையான உணவுகளை சுவைக்கவும் வழி வகுக்கிறது.

டாவ்கி நதி

டாவ்கி நதி

ஷில்லாங்கில் இருந்து மவ்லின்னாங் கிராமத்திற்குச் செல்லும்போது, இந்தியாவின் தூய்மையான நதி என்று அழைக்கப்படும் டாவ்கி நதியை நீங்கள் காணலாம். நீர் மிகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதால், படகுகள் ஆற்றங்கரையில் மிதப்பது போல் தெரிகிறது, இந்நதியை மட்டும் காணவாவது வாழ்நாளில் ஒருமுறையாவது மேகாலயாவிற்கு சென்று வர வேண்டும். நதியில் 40 நிமிட பயணம் செய்ய 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

போபில் நீர்வீழ்ச்சி

போபில் நீர்வீழ்ச்சி

டாவ்கியில் இருந்து மவ்லின்னாங்கிற்கு பயணிக்கும்போது, போபில் நீர்வீழ்ச்சி இயற்கை அழகைக் கண்டு மகிழ்வீர்கள். இந்த நீர்வீழ்ச்சி மனிதர்கள் குறுக்கீடு எதுவும் இல்லாமல் சுற்றிலும் ரசிக்கத் தகுந்த அழகான காட்சிகளின் பொக்கிஷத்தைக் கொண்டுள்ளது. அடர்ந்த பசுமையான காட்டுக்குள்ளே பறவைகள் எழுப்பும் ஒலியும், வீசும் குளிர் காற்றும் நம் மனதை மயக்கும். அருவியில் இருந்து வரும் தண்ணீர், இந்தியாவையும் வங்கதேசத்தையும் பிரிக்கும் ஆற்றில் பால் போன்று பாய்கிறது.

ஜிங்மஹாம் லிவிங் ரூட் பிரிட்ஜ்

ஜிங்மஹாம் லிவிங் ரூட் பிரிட்ஜ்

ஜிங்மஹாம் லிவிங் ரூட் பிரிட்ஜ் இயற்கையும் மனித ஆற்றலும் ஒரு சேரும் போது உருவாகும் அற்புதத்தை அழகாக எடுத்துரைக்கிறது. இது மரங்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய பாலம் மற்றும் ஆற்றைக் கடக்கும் நோக்கத்திற்காக ரப்பர் அத்தி மரங்களின் வான்வழி வேர்களால் உருவாக்கப்பட்டது. அமைதியான முறையில் கீழே ஓடிக் கொண்டிருக்கும் நீரை, ரசித்தவாரே பாலத்தைக் கடந்து செல்லலாம். இந்த அழகிய பாலம் மவ்லின்னாங்கில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

ப்ரூன் கோங்மென் வியூபாயின்ட்

ப்ரூன் கோங்மென் வியூபாயின்ட்

ப்ரூன் கோங்மென் வியூபாயின்ட் ரிவாய் கிராமத்தில் மரத்தின் மேல் 85 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். கரும்பு மற்றும் மூங்கில்களால் ஆன இந்த வியூபாயின்ட் இந்திய பங்களாதேஷ் எல்லையின் முழுமையான மற்றும் அழகான காட்சிகளை வழங்குகிறது.

எப்போது மவ்லின்னாங்கிற்கு செல்ல வேண்டும்?

எப்போது மவ்லின்னாங்கிற்கு செல்ல வேண்டும்?

மவ்லின்னாங் ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையை வழங்குவதால் சுற்றுலாப் பயணிகள் ஆசியாவின் தூய்மையான கிராமத்தை ஆண்டின் எந்த நேரத்திலும் பார்வையிடலாம். இருப்பினும், மழைக்காலத்தில் கிராமம் பசுமையாகவும் அழகாகவும் மாறுவதால் அந்நேரமே இந்த இடத்தைப் பார்வையிட சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது.
ஜூலையில் பெஹ்டியன்க்லாம், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வங்காலா, அக்டோபர் அல்லது நவம்பரில் நோங்கிரெம் நடன விழா ஆகியவை மாவ்லின்னாங் கிராமத்திலும் அதற்கு அருகாமையிலும் கொண்டாடப்படும் சில முக்கிய திருவிழாக்களாகும், இந்நேரத்திலும் இங்கு வருகை தரலாம்.

எப்போது மவ்லின்னாங்கிற்கு செல்ல வேண்டும்?

மவ்லின்னாங் ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையை வழங்குவதால் சுற்றுலாப் பயணிகள் ஆசியாவின் தூய்மையான கிராமத்தை ஆண்டின் எந்த நேரத்திலும் பார்வையிடலாம். இருப்பினும், மழைக்காலத்தில் கிராமம் பசுமையாகவும் அழகாகவும் மாறுவதால் அந்நேரமே இந்த இடத்தைப் பார்வையிட சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது.

ஜூலையில் பெஹ்டியன்க்லாம், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வங்காலா, அக்டோபர் அல்லது நவம்பரில் நோங்கிரெம் நடன விழா ஆகியவை மாவ்லின்னாங் கிராமத்திலும் அதற்கு அருகாமையிலும் கொண்டாடப்படும் சில முக்கிய திருவிழாக்களாகும், இந்நேரத்திலும் இங்கு வருகை தரலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X