Search
  • Follow NativePlanet
Share
» »கூர்கின் டாப் 10 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்!!!

கூர்கின் டாப் 10 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்!!!

By

தென்இந்திய மலைப் பிரதேசங்களில் எவரையும் தன்னழகில் சொக்கவைக்கும் மயக்கும் தோற்றம் கொண்டது கூர்க் நகரம்.

இந்த எழில்மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது 'கர்நாடகாவின் காஷ்மீர்' என்றும் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் எத்தனையோ சுற்றுலாப் பகுதிகள் இருந்தாலும் சில இடங்களை நீங்கள் கூர்க் வரும்போது கண்டிப்பாக தவறவிட்டுவிடக்கூடாது. அப்படிப்பட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கூர்கின் டாப் 10 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அப்பே நீர்வீழ்ச்சி

அப்பே நீர்வீழ்ச்சி

கூர்க் நகரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள அப்பே நீர்வீழ்ச்சி அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக ஒரு தொங்கு பாலம் ஒன்று அருவிக்கு திரில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு பாலத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள காளி மாதா கோயிலும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.

படம் : Vaishak Kallore

பைலாகுப்பே

பைலாகுப்பே

பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது கூர்க் நகரிலிருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது. பைலாகுப்பேயின் சிறப்பம்சம் இங்குள்ள தங்கக்கோயில் அல்லது ‘நம்ட்ரோலிங்' என்று அழைக்கப்படும் திபெத்திய மடாலயமாகும். இந்த திபெத்திய மடாலயத்தின் உள்ளே தங்க நிறத்தில் ஜொலிக்கும் பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் போன்ற சிலைகள் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகளுடன் பார்வையாளர்களை பிரமிப்பில் சொக்க வைக்கின்றன. அதோடு பூஜை முரசு, பூஜை சக்கரம் மற்றும் கதவுகள் யாவுமே நுட்பமான நேர்த்தியான கைவினைக்கலை வேலைப்பாடுகளை கொண்டுள்ளன.

படம் : Vinayaraj

யானைகள் பயிற்சி முகாம், துபாரே

யானைகள் பயிற்சி முகாம், துபாரே

கூர்கிலிருந்து 24 கி.மீ தொலைவில் துபாரே பகுதியில் அமைந்துள்ள யானைகள் பயிற்சி முகாமை நீங்கள் கூர்க் வரும் போது தவற விட்டுவிடக் கூடாது. இங்கு யானைகளை கொண்டு நடத்தப்படும் முகாம்கள் பயணிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, அவர்களுக்கு இந்த விலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதன் மூலம் யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை முகாம்களில் கலந்துகொள்ளும் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதோடு யானைகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்ப்பதுடன், பயணிகளே தங்கள் கைகளாலே யானைகளுக்கு உணவும் கொடுக்கலாம். அத்துடன் வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானைச் சவாரியிலும், பரிசல் பயணத்திலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதை களிக்கலாம்.

படம் : Subhashish Panigrahi

தலைக்காவேரி

தலைக்காவேரி

தலைக்காவேரி இந்துக்களின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் தற்போது ஒரு குளம் (தீர்த்தவாரி) அமைந்துள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. புனிதமான இந்த காவேரி தீர்த்தவாரியில் சுப தினங்களில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது ஐதீகமாகும்.

பாகமண்டலா

பாகமண்டலா

இந்துக்களுக்கான ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாக பாகமண்டலா விளங்குகிறது. காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இவ்விடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர்.

நிசர்கதாமா

நிசர்கதாமா

கூர்க் மாவட்டத்தில் உள்ள குஷால் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், கூர்கிலிருந்து 39 கி.மீ தூரத்திலும் , காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு நிசர்கதாமா. இங்கு காவேரி ஆற்றை கடந்து தீவுக்குள் செல்வதற்காக 90 மீட்டர் நீளத்துக்கு ஒரு மரத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீவில் மூங்கில் தோப்புகள், சந்தன மரங்கள், தேக்கு மரங்கள் மற்றும் ஆற்றின் இருபுறமும் தெரியும் அருவிகள் என்று இயற்கை அழகோடு காட்சியளிக்கிறது. இங்குள்ள வன விலங்கு சரணாலயம் பயணிகளை பெரிதும் கவரும் அம்சமாக விளங்குகிறது. இதில் மான்கள், யானைகள், முயல்கள் மற்றும் மயில்கள் போன்றவற்றை காணலாம். அதுமட்டுமல்லாமல் யானைச்சவாரி மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் இங்கு கிடைக்கின்றன.

படம் : Rameshng

வாலனூர் பிஷிங் காம்ப்

வாலனூர் பிஷிங் காம்ப்

கூர்கிலிருந்து 30 கி.மீட்டருக்குள் துபாரெவுக்கு வெகு அருகில் வாலனூர் பிஷிங் காம்ப் அமைந்துள்ளது. வாலனூர் பிஷிங் காம்ப்பிலிருந்து துவங்கும் இந்த முகாம்கள் அங்கிருந்து காவிரி ஆற்றின் போக்கில் அமைந்துள்ள தொட்டம்கலி, பீமேஸ்வரி போன்ற இடங்களுக்கு சென்று இறுதியாக கலிபோரே பகுதியில் முடிவடைகிறது. இந்த முகாமில் தூண்டிலில் மீன் பிடிக்க வனத்துறை அலுவலகத்தில் அனுமதிச்சான்று பெற்றிருக்க வேண்டும்.

ராஜா சீட்

ராஜா சீட்

கூர்க் மாவட்டத்தின் மாவட்டத்தின் மடிக்கேரி பகுதியில் உள்ள ராஜா சீட் மிக பிரசித்து பெற்ற ஒரு சுற்றுலாஸ்தலம் ஆகும். இந்த இடம் முன்பு மஹாராஜாக்கள் அடிக்கடி வந்து ஓய்வெடுக்கும் இடம் என்பதால் இப்பூங்காவிற்கு ராஜா சீட் என்று பெயர் வந்துள்ளது. அடுக்கடுக்காக அமைந்து பூங்கா தோட்டங்களுடனும், சரிந்து கிடக்கும் பள்ளத் தாக்குகளும், பனிபடர்ந்த மலைக்காட்சிகளும் நிரம்பி வழியும் இந்த இடத்தை இயற்கை அழகை ரசிப்பதற்கென்று அந்த மஹாராஜாக்கள் தேர்ந்தெடுத்ததில் எந்த வியப்பும் இல்லை. மேலும் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்த்தமனத்தையும் இந்த பள்ளத்தாக்கின் பின்னணியில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை உங்களால் மறக்கவே முடியாது.

படம் : Dvellakat

தடியாண்டமோல்

தடியாண்டமோல்

கூர்கிலிருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தடியாண்டமோல், கர்நாடக மாநிலத்தின் 3-வது உயரமான மலைச்சிகரமாகும். தடியாண்டமோல் எனும் இந்தப் பெயர் மலையாள மொழியிலிருந்து பிறந்துள்ள ஒரு சொல்லாகும். இதற்கு பெரிய மலை என்ற அர்த்தத்தை கொள்ளலாம். கடினமான மலையேற்றத்துக்கு தயக்கம் காட்டும் பயணிகள் பாதி தூரம் வரை வாகனத்தில் பயணிக்கலாம். இருப்பினும் மீத தூரத்தை மலையேற்றம் மூலமாக கடக்க வேண்டியிருக்கும். உச்சியில் ஏறிய பின் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்து விடும் என்பது உண்மை.

படம் : Shyamal

நால்கு நாடு அரமணே

நால்கு நாடு அரமணே

கொடகு மன்னரான தொட்ட ராஜ வீரேந்திராவால் 1792 - 1794 ம் ஆண்டுகளில் இந்த நால்கு நாடு அரமணே கட்டப்பட்டுள்ளது. இது தடியண்டமோல் சிகரத்தின் அடிவாரத்தில் யவகபாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச்சின்னம் நான்கு கிராமங்களின் அரண்மனை என்ற பொருளில் ‘நால்கு நாடு அரமணே' என்று அழைக்கப்படுகிறது. இதனுள் அமைந்துள்ள 12 தூண்களில் கலையம்ச வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. மேலும் மலை ஏறிகள் இந்த அரண்மனையில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

படம் : Mirfiyaz2000

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X