Search
  • Follow NativePlanet
Share
» »பருவமழையின் போது ஆர்ப்பரிக்கும் அழகிய நீர்வீழ்ச்சிகள் – இம்முறை கட்டாயம் தவறவிடாதீர்கள்!

பருவமழையின் போது ஆர்ப்பரிக்கும் அழகிய நீர்வீழ்ச்சிகள் – இம்முறை கட்டாயம் தவறவிடாதீர்கள்!

நாம் யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு நம் நாடு இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது! மலைகள், பனி மூடிய சிகரங்கள், பாலைவனம், ஆறுகள், நதிகள், பசுமையான சமவெளிகள், சதுப்புநிலக் காடுகள், உப்பங்கழிகள் என அனைத்தும் நம் நாட்டில் கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக நம் நாட்டில் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

பருவமழையின் போது, மலைகளின் உச்சியில் இருந்து வேகமாக பள்ளத்தாக்குகளின் விளிம்புகளில் கொட்டுவதை பார்த்து நாம் யாரும் நிச்சயம் உற்சாகம் அடையாமல் இருக்க முடியாது! நாடெங்கும் பல நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை மற்றும் தனித்தன்மை வாய்ந்தவை. பருவமழையின் போது நிச்சயம் நீங்கள் சில நீர்வீழ்ச்சிகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த பருவகால இயற்கை அதிசயங்கள் ஒரு கண்கவர் காட்சியை உருவாக்குவதோடு நம் மனதிற்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத நீர்வீழ்ச்சிகளின் பட்டியல் இதோ!

ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடகா

ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடகா

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகும். பசுமையான காடுகளின் பின்னணியில் ராஜா, ராணி, ராக்கெட் மற்றும் ரோவர் என அழைக்கப்படும் நான்கு அருவிகளின் நீர் ஒன்றிணைந்து அருவியின் கம்பீரமான அழகை உருவாக்குகிறது.
இந்தியாவில் உள்ள இந்த மகத்தான நீர்வீழ்ச்சியின் அழகின் உச்சத்தைக் காண பருவமழையின் போது இங்கே விஜயம் செய்யுங்கள். அடர்ந்த பசுமையான போர்வை, இப்பகுதியின் இயற்கை வாழ்விடம் மற்றும் வெள்ளை அடர்ந்த புகை போன்ற அருவியின் அழகை மேம்படுத்துகிறது. இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகள் வழியே ட்ரெக்கிங் செய்வது உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கித் தரும்.
விமானம் மூலம் செல்ல வேண்டுமென்றால் மங்களூர் விமான நிலையத்தை அணுகலாம். மேலும் ஷிமோகா மாவட்டத்திலேயே சொந்த ரயில் நிலையம் உள்ளது. ஜோக் நீர்வீழ்ச்சி இருக்குமிடம் சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் சாலை மார்க்கமாக செல்வது, இன்னும் கூடுதல் சிறப்புக்குரியது.

அதிரப்பில்லி நீர்வீழ்ச்சி, கேரளா

அதிரப்பில்லி நீர்வீழ்ச்சி, கேரளா

நாம் பல படங்களில் பார்த்து ரசித்த இந்த பிரமாண்டமான அருவி இயற்கை அழகின் சொர்க்கமான கேரளாவின் திருச்சூரில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமுடி மலையில் உருவாகும் சாலக்குடி ஆறு, வாழச்சல் வனப்பகுதியை கடந்து, அதிரப்பிலி அருவியாக பிரமாண்டமாக கொட்டுகிறது.
மழைக்காலத்தில் நம்மை மிரட்டும் விதமாக காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றி கிரேட் இந்தியன் ஹார்ன்பில், ஆசிய யானை, காட்டெருமை, சாம்பார் மற்றும் பல விலங்கினங்களை நாம் காணலாம்.
நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள விமான நிலையம் கொச்சி சர்வதேச விமான நிலையம் ஆகும். சாலக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இந்த நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா

துத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவா

கோவாவின் மொல்லெம் தேசிய பூங்காவில் அமைந்துள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சி, சுமார் 1017 அடி உயரத்தில் இருந்து விழுந்து வெள்ளை நீர்வீழ்ச்சியின் பிரமிக்க வைக்கும் காட்சியை உருவாக்குகிறது. குறிப்பாக மழைக்காலங்களில், நீர்வீழ்ச்சி நிரம்பி வழியும் போது, இதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
துத்சாகர் என்றால் பால் கடல் என்று அர்த்தம், நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் மாத்திரத்திலேயே ஒரு கோப்பையிலிருந்து பால் விழுவது போன்ற ஒரு மாயை உங்களுக்குள் தோன்றும் என்பதில் சந்தேகமே இல்லை.
துத்சாகர் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியை நீங்கள் இரயில் வழியாகவோ, ஜீப் மூலமாகவோ அல்லது நீங்கள் ஒரு சாகச விரும்பியாக இருந்தால் ட்ரெக்கிங் செய்தோ அடையலாம். நீர்வீழ்ச்சி பனாஜியில் இருந்து சாலை வழியாக 60 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
கோவா நாட்டின் முக்கிய நகரங்களுடன் விமானம், சாலை, ரயில் மூலமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் எளிதில் இங்கு வந்து விடலாம்.

 சித்ரகோட் நீர்வீழ்ச்சி, சத்தீஸ்கர்

சித்ரகோட் நீர்வீழ்ச்சி, சத்தீஸ்கர்

'இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி' என்று அன்புடன் அழைக்கப்படும் சித்ரகோட் நீர்வீழ்ச்சி, சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூரில் அமைந்துள்ளது.
பொதுவாக 100 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் வேகம் அதிகரித்து 150 மீட்டர் உயரத்தில் இருந்து பிரமாண்டமாக கொட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த நீர்வீழ்ச்சிக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். நீர்வீழ்ச்சி ஜக்தல்பூரிலிருந்து 38 கிமீ அமைந்துள்ளது, இவ்விடத்தை பொதுப் பேருந்துகள் மூலம் எளிதில் அடையலாம்.

நோகலிகை நீர்வீழ்ச்சி, மேகாலயா

நோகலிகை நீர்வீழ்ச்சி, மேகாலயா

உலகின் நான்காவது உயரமான மற்றும் நாட்டின் மிக உயரமான இந்த நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி பூமியின் ஈரமான இடமான சிரபுஞ்சியில் அமைந்துள்ளது. சீற்றத்துடன் ஓடும் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் மூடுனியின் அழகில் இருந்து நீங்கள் மீண்டு வர நேரம் பிடிக்கும்.
பச்சை சரிவுகளுக்கு மத்தியில் விழும் வெள்ளை நீரின் அற்புதமான அழகு இயற்கை ஆர்வலர்களின் மனதைக் கொள்ளையடிப்பதோடு, இங்கு ட்ரெக்கிங் செய்து உயிருக்கு புத்துணர்ச்சி அளித்திடுங்கள்.
இந்த நீர்வீழ்ச்சி கவுஹாத்தி விமான நிலையத்திலிருந்து 128 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து குவஹாத்தியை ஷில்லாங்குடன் இணைக்கும் NH 40 இன் மூலம் நீர்வீழ்ச்சியை அடையலாம்.

ஒகேனக்கல், தமிழ்நாடு

ஒகேனக்கல், தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தர்மபுரியில் காவேரி ஆற்றினால் உருவாகும் ஒகேனக்கல் 20 மீட்டர் உயரத்தில் இருந்து மேற்பரப்பில் உள்ள பாறைப் படுக்கையில் விழுந்து புகையின் மாயையை உருவாக்குகிறது. இந்த நீர்வீழ்ச்சிகளின் வித்தியாசமான அமைப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக பருவமழையின் சமயத்தில் நீரின் வேகம் காட்டாறு போன்று விழும் நீர்வீழ்ச்சியைப் பார்த்து நாம் யாரும் வியப்படையாமல் இருக்க முடியாது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீராடுவது மட்டுமின்றி, பாரம்பரிய படகுகளில் படகு சவாரி செய்தும் சாகசத்தை அனுபவிக்கலாம். இருப்பினும், மழைக்காலத்திற்குப் பிறகு, தண்ணீர் கடுமையாகவும் சக்தியுடனும் இல்லாதபோது மட்டுமே படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.
நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரயில்வே நிலையம் தர்மபுரி மாவட்ட ரயில் நிலையமாகும். மேலும் சாலை மார்க்கமாகவும் நீர்வீழ்ச்சியை அடையலாம்.

Read more about: waterfalls india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X