India
Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவின் பிரபலமான சூரிய அஸ்தமன ஸ்பாட்டுகளின் பட்டியல் இதோ!

கோவாவின் பிரபலமான சூரிய அஸ்தமன ஸ்பாட்டுகளின் பட்டியல் இதோ!

By Yogalakshmy Ponnan

கோவா விருந்துகள், பார்ட்டிகள் மற்றும் கேளிக்கைகளுக்கு மட்டுமே பெயர் போனது அல்ல. பிரமிக்க வைக்கும் கோட்டைகளும், அழகான தேவலாயங்களும் இங்கு உண்டு. அனைத்துக்கும் மகுடம் வைப்பது போன்று கோவாவில் பல கண்கவர் சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய ஸ்பாட்டுகள் உள்ளன. சூரியன் அடிவானத்தில் இருந்து ஆரஞ்சு நிற பந்து போன்று மறைவதையும் எழுவதையும் பார்க்கும் போது நம்மில் மகிழ்ச்சி பெருகி அமைதி நிலவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் நல்ல துணையுடன் சேர்ந்து ரசித்தால் கூடுதல் சிறப்பு தான். நீங்கள் கோவாவிற்கு செல்ல திட்டமிட்டால் நிச்சயம் இந்த இடங்களை உங்களின் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்!

Sapphora Fort

1.சப்போரா கோட்டை

தில் சஹ்தா ஹை திரைப்படத்தின் மூலம் பிரபலமான சப்போரா கோட்டை வாகடர் கடற்கரையில் அமைந்துள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை கோவாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். அதிலும் பனை மரங்கள், கண்கவர் கடற்கரை, தொடுவானம் ஆகியவற்றின் அழகில் நனைந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது மிகவும் விசேஷமாகும். சூரிய அஸ்தமனத்திற்கான அனைத்து சாயல்களையும் உள்ளடக்கிய இந்த கோட்டை மாலை வேளையில் நிச்சயம் பார்வையிடுங்கள்.

Anjuna Beach

2.அஞ்சுனா பீச்

ஹிப்பிகளுக்கான கடற்கரை என்று பிரபலமாக அறியப்படும் அஞ்சுனா பீச் அழகான சூரிய அஸ்தமன காட்சிகளை ரசிப்பதற்கு ஏற்ற இடமாகும். சூரிய அஸ்தமனத்திற்கு முன் இந்தக் கடற்கரைக்குச் சென்று, அங்கே வரிசையாக இருக்கும் கடற்கரைக் குடில் ஒன்றில் அமர்ந்து, உங்களுக்குப் பிடித்த பானத்தை பருகிக் கொண்டோ அல்லது பிடித்த பாடலை கேட்டுக் கொண்டோ, பாறையும் கடல் நீரும் ஒரு சேரும் அழகைக் கண்டு ரசித்திடுங்கள். வானம் நீல நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும் பின்னர் ஆரஞ்சு நிறமாகவும் மாறுவதைக் கண்டு மகிழ்ந்திடுங்கள். மேலும் இங்கு நீங்கள் பீச் ஜெட் ஸ்கீயிங், பனானா படகு சவாரி, பாராசைலிங், பங்கி ஜம்பிங் போன்றவற்றில் சாகச நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

Cincinnati Beach

3. சின்குவேரிம் பீச்

காண்டோலிம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள சின்குவேரிம் கடற்கரை கோவாவில் உள்ள மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட கடற்கரைகளில் ஒன்றாகும். மிகக் குறைவான கூட்ட நெரிசல் இருப்பதால் இந்தக் கடற்கரை மிகவும் சுத்தமானதாக இருக்கிறது. அகுவாடா கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள இந்தக் கடற்கரை அமைதியான ஒரு நீண்ட நடைபயணத்திற்கும் வழி வகுக்கிறது. குளிர்ந்த காற்றில் நடந்து, அலைகளுக்குள் நனைந்து அழகான சூரிய அஸ்தமனத்தை நீங்கள் இங்கே கண்டு களிக்கலாம்.

Palolem Beach

4.பலோலெம் பீச்

கோவாவின் கனகோனாவில் அமைந்துள்ள பலோலெம் பீச் பனை மரங்கள் நிறைந்த பிறை வடிவ அழகிய கடற்கரையாகும். தெற்கு கோவாவில் உள்ள மிக அழகான கடற்கரையான பலோலெம், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகும். சுத்தமான கடற்கரை, மாசற்ற மணல், குளிர்ந்த காற்று, அசையும் பனை மரங்கள் மற்றும் அற்புதமான சூரிய அஸ்தமன காட்சிகள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து நம் மனதை ஆசுவாசப்படுத்துகிறது. மேலும் டால்பின்களைப் பார்ப்பது, நீர்விளையாட்டுகளில் பங்கேற்பது, யோகா, தியானம் போன்ற வகையான ஓய்வு செயலகளிலும் நீங்கள் ஈடுபடலாம்.

Arampol Peach

5.அரம்போல் பீச்

"கோவாவின் வெள்ளை மணல் கடற்கரை" என்று அழைக்கப்படும், அரம்போல் கடற்கரை அமைதியான மற்றும் அற்புதமான இயற்கை சூழலால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது எனலாம். பிரதான கோவாவில் இருந்து சற்று உள்ளே அமைந்துள்ளதால் இங்கு மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. ஆனாலும், அதுதானே அமைதியை தேடுகின்ற நமக்கும் தேவைப்படுகிறது. அமைதியான சூழலில், அங்கே பாறை அல்லது குடிலில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்திடலாம். அப்படியே வித விதமான கடல் உணவுகளையும் அங்கே சுவைத்து மகிழ்ந்திடலாம்.

Wagger Beach

6.வாகடர் பீச்

சப்போரா கோட்டையில் அதிக கூட்டம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், சூரிய அஸ்தமனத்தை அமைதியாக அனுபவிக்க விரும்பினால் உடனே அதனருகில் இருக்கும் வாகடர் கடற்கரைக்கு சென்று விடுங்கள். சூரிய அஸ்தமனம், ஆர்ப்பரிக்கும் அலைகள், குளிர்ந்த காற்று, உதட்டைப் பிசையும் உணவு மற்றும் பல வித பானங்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து உச்சக்கட்ட கலவையை உங்களுக்கு வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Fortress of Aguada

7. அகுவாடா கோட்டை

கோவாவின் சிறந்த சூரிய அஸ்தமனத்தை காண, ஒரு பனோரமிக் வியூவில் சூரியன் மறைவதைக் கண்டு களித்திட நீங்கள் நிச்சயம் அகுவாடா கோட்டைக்கு செல்ல வேண்டும். கோவாவில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் இயற்கை காட்சிகளை வழங்கும் இந்தக் கோட்டை சூரிய அஸ்தமன நேரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. உங்களுக்குப் பிடித்தமான சிற்றுண்டிகளை கையில் எடுத்துக்கொண்டு அகுவாடா கோட்டைச் சுவர்களில் அமர்ந்து அசத்தலான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

Read more about: sunset points beaches goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X