Search
  • Follow NativePlanet
Share
» »கேரள அருவிகள்: எப்படி, எப்போது, ஏன் செல்லவேண்டும்?

கேரள அருவிகள்: எப்படி, எப்போது, ஏன் செல்லவேண்டும்?

சுற்றுலா என்றாலே மனம் கேரளத்தின் கரையோரம் ஒதுங்கி விடுகிறது. ஏன் என்றே தெரியவில்லை கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படுகிற கேரளாவில் இயற்கையின் ஒட்டுமொத்த வரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடலென்றாலும் சர

By Udhaya

சுற்றுலா என்றாலே மனம் கேரளத்தின் கரையோரம் ஒதுங்கி விடுகிறது. ஏன் என்றே தெரியவில்லை கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படுகிற கேரளாவில் இயற்கையின் ஒட்டுமொத்த வரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடலென்றாலும் சரி, அருவி என்றாலும், சரி, காடுகள் என்றாலும் சரி, மலை என்றாலும் சரி நம் நாட்டில் கேரளத்தை தவிர்த்து வேறெதையும் யோசித்து விட முடியுமா என்ன? கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர். நீங்கள் பார்த்திருக்கலாம், உலகின் முன்னணி தொலைக்காட்சிகள் பல இயற்கை அழகுக்காக இந்தியாவில் கேரளத்தைத் தான் தேர்ந்தெடுத்து காட்டுகின்றன. அப்படிபட்ட கேரளத்தை பற்றி தமிழகத்தில் நமக்கு நிறைய தெரிந்திருக்கும் அல்லவா.. என்ன இல்லையா.. கவலையை விடுங்க. கேரளத்தைப் பற்றி இன்டு இடுக்கு விடாமல் அத்தனை இடங்களையும் நாம் சுற்றிக்காட்டப் போகிறோம்.

கேரளத்தின் அருவிகள்

கேரளத்தின் அருவிகள்

எம் பேரு சுரேஷ்.. நமக்கு தின்னவேலி பக்கம் பாத்துகிடுங்க.. நம்ம ஊர்ல இப்பலாம் கோடக்காலத்துல வெயிலு சுளீர்னு அடிக்குவு,. தாங்க முடியலல்லா.. அதாம் ஊர் ஊரா சுத்த கெளம்பிடுதோம். நம்ம பக்கத்து ஊருங்க கேரளம். அட.. இங்க இருக்குற அருவிகள பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும்.. அத உங்களுக்கு சொல்லத்தான் வந்துருக்கேன். கேரளத்துல எத்தன அருவிகள் இருக்குனு தெரியுமா.. பள்ளிவாசல் அருவி(இடுக்கி) , பாலருவி கொல்லம் , ஆட்டுக்கல் இடுக்கி , தூவானம் அருவி இடுக்கி , பெருந்தேனருவி பத்தனம்திட்டா , தொம்மன்குத்து அருவி இடுக்கி , கந்தன்பாறை அருவி வயநாடு, அதிரப்பள்ளி அருவி திருச்சூர் , பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி இடுக்கி , தோணி அருவி பாலக்காடு, மீன்முட்டி அருவி வயநாடு, கீழார்குத்து அருவி இடுக்கி , அருவிக்குழி நீர்வீழ்ச்சி கோட்டயம், அடயன்பாறா நீர்வீழ்ச்சி மலப்புறம், ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் இடுக்கி, சர்ப்பா நீர்வீழ்ச்சி திருச்சூர், சூச்சிப்பாறா வயநாடு, வாழச்சல் திருச்சூர் , வெல்லம்தோட் மலப்புரம், வாகமன் நீர்வீழ்ச்சி இடுக்கி ஆகியன கேரள மாநிலத்தில் காணப்படும் அருவிகள் ஆகும். இது தவிர மேலும் சில அருவிகள் இருக்கின்றன. அவைகள் பற்றி தெரிந்தவர்கள் இந்த பதிவின் கமண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்.

ஆத்தாடி இத்தன அருவிக கெடக்கானு நெனைக்காதீங்கப்பு.. கோடைக்கு குளுகுளுனு ஒரு டூர் போய்ட்டு வருவோம், வாங்க அன்னாச்சி... இந்த ஊர்ல நிறைய காட்டுவழிப்பாத அன்னாச்சி.. அதுனால சுய வாகனத்துல போனாதான் நினச்ச இடத்துக்கு நினச்ச நேரத்துல போகமுடியும். இப்பல்லாம் வாடகை கார்தான் கெடைக்குதுல.. வாடகைக்கு கார் எடுங்க சொல்லிப்புட்டேன். அப்றம் உங்க இஷ்டம் பாத்துகிடுங்க.

Jan J George

 சூச்சிப்பாறா வயநாடு

சூச்சிப்பாறா வயநாடு


நாம மொத மொத போற எடம் சூச்சிப்பாற அருவி.. இது வயநாட்டு பக்கத்துல இருக்கு..

எப்படி போலாம்?

கல்பெட்டா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெப்பாடி நகருக்கு அருகே சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. 300 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவி காவலாளி பாறை என்று பிரபலமாக அறியப்படுகிறது.

சூச்சிப்பாறை அருவியின் மூன்று நீட்சிகளில் இரண்டு மீன்முட்டி அருவியிலும், மற்றொன்று கந்தன்பாறை அருவியிலும் விழுகின்றன. அதன் பிறகு இவை சாளியார் நதியுடன் இணைகின்றன. அதோடு இந்த மூன்று நீட்சிகளும் சேரும் இடம் ஒரு சிறிய குளத்தை உண்டாக்குகிறது. இந்தக் குளத்தில் பயணிகள் படகுப் பயணம் செல்வதோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளித்து நீரில் நீந்தித் திளைக்கலாம்.

அருகிலுள்ள இடங்கள்

சூச்சிப்பாறை அருவியை 2 கிலோமீட்டர் நெடுந்தூர நடைபயணம் மூலம் பசுமையான தேயிலை தோட்டங்களையும், காடுகளையும் கடந்து அடையும் அனுபவம் உங்கள் நினைவு இடுக்குகளில் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கும். மேலும் இங்கு பயணிகளுக்காக மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்களில் இருந்து அருவியின் அழகையும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டத்தையும் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.


கந்தன்பாறை அருவி வயநாடு

அடுத்ததா இந்த அருவிய பத்தி நா சொல்லியே ஆகணும். ஏன்னா இது முன்னதோட கிளை அருவிதான். இருந்தாலும் செம்ம ஜாலியா இருக்கும். இதுக்கு பேரு கந்தன்பாறை.

எப்படி போலாம்

கல்பெட்டா நகருக்கு தென்கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் கந்தன்பாறை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி பசுமையான தேயிலை தோட்டங்கள் சூழ 30 மீட்டர் உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகை நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

என்ன ஒரு ஆனந்தம்

கந்தன்பாறை அருவியை நோக்கி ஹைக்கிங் செல்லும் போது அமைதியான சுற்றுப்புறமும், காற்றில் மிதந்து வரும் தேயிலை மணமும் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும். அதோடு இந்த அருவி அற்புதமான பிக்னிக் தலமாக விளங்கி வருவதுடன், டிரெக்கிங் மற்றும் முகாமிட்டு தங்குவதற்கு மிகவும் ஏற்ற இடமாகவும் திகழ்ந்து வருகிறது. ஆனால் நீங்கள் டிரெக்கிங் செல்ல விரும்பினால் கண்டிப்பாக உங்களுக்கு பயண வழிகாட்டி ஒருவரின் உதவி அவசியம்.


மீன்முட்டி அருவி வயநாடு

சூச்சிப்பாறையோட கிளை அருவிதான் மீன்முட்டி. இங்க எப்படி போலாம் தெரியுமா?

கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவியாக அறியப்படும் மீன்முட்டி அருவிக்கு கல்பெட்டா நகரிலிருந்து 29 கிலோமீட்டர் பயணம் செய்து சென்றடையலாம். இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக 'மீன்களை தடை செய்யும் பகுதி' என்ற அர்த்தத்தில் இந்த அருவி மீன்முட்டி அருவி என்று அழைக்கப்படுகிறது.

மீன்முட்டி அருவியை ஊட்டி செல்லும் காட்டு வழியாக இரண்டு கிலோமீட்டர் ஹைக்கிங் மூலம் அடையலாம். அவ்வாறு நீங்கள் அருவிக்கு செல்லும் அந்த இரண்டு கிலோமீட்டர் நெடுந்தூர பயணத்தில் மீன்முட்டி அருவியின் மயக்கும் அழகை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம். எனினும் ஹைக்கிங் செல்லும் போது உங்களுக்கு பயண வழிகாட்டி ஒருவரின் உதவி கண்டிப்பாக அவசியம். மேலும் அருவிக்கு செல்லும் வழியில் நீங்கள் கற்கால சிற்பங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

PC: Anil R.V

 தோணி அருவி பாலக்காடு

தோணி அருவி பாலக்காடு

தோணி அருவியில் சுற்றுலாப் பயணிகளின் காலடி அதிக அளவில படவில்லை என்றாலும், பசுமையான அடர் வனங்களின் மத்தியில் காட்சியளிக்கும் அருவியின் கவின் தோற்றம் காண்போரை சொக்கவைத்து விடும். அதோடு இயற்கையின் அற்புதப் படைப்பை அருகில் காணும் அலாதியான அனுபவத்தை அடைய விரும்புவர்கள் தோணி அருவியை கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும்.

போகும் வழி தெரியுமா?

தோணி அருவி பாலக்காடு நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோணி எனும் சிறிய மலைப்பாங்கான குக்கிராமத்தில் அமைந்திருக்கிறது. தோணி அருவியை நோக்கிச் செல்லும் காட்டு வழிப்பாதை நடைபயணம் செல்ல விரும்புபவர்களுக்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும். இந்தக் காடுகளின் உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வந்தாலும், அருவிக்கு செல்லும் பாதை மிகவும் பாதுகாப்பானதே. அப்படி நீங்கள் நடைபயணம் செல்லும் பட்சத்தில் தோணி குன்றின் உச்சியை அடைய எப்படியும் 3 மணி நேரமாவது ஆகும். அதோடு நடைபயணத்தின் போது தேவையான உணவு, தண்ணீர், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம்.

இந்த விசயத்த மறந்துடாதீங்க...

தோணி அருவியை சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் மழைக் காலங்களுக்கு பிறகு பச்சை பட்டுடுத்தியது போல் காட்சியளிப்பதுடன், ஓடைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து காணப்படும். எனவே இந்த காலங்களில் நீங்கள் தோணி அருவியை சுற்றிப் பார்க்கும் அனுபவம் அற்புதமானதாக இருக்கும்


அடயன்பாறா நீர்வீழ்ச்சி மலப்புரம்

பசுமையான இயற்கைச்சூழல் மற்றும் எழிற்காட்சிகளின் பின்னணியில் பிரம்மாண்டமான பாறைகளின் மீதிருந்து வழியும் இந்த நீர்வீழ்ச்சி காண்போரை வசப்படுத்தி விடுகிறது. பாறைகளிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியின் முடிவில் ஒரு குளம்போன்ற நீர்த்தேக்க அமைப்பு பயணிகளை வெகுவாக கவர்கிறது. சுற்றிலும் நிசப்தம் கவிழ்ந்திருக்க சில்லென்ற இந்த அருவித்தடாகத்தில் குளிக்கும் அனுபவமானது நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்க வைக்கும் ஒரு இனிப்பு ஞாபகமாக பதிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

எப்படி போலாம்

நீலம்பூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள குரும்பலங்கோட் எனும் இடத்திலுள்ள இந்த அடயன்பாறா என்ற அழகிய நீர்வீழ்ச்சி ஏராளமான சுற்றுலாப்பயணிகளையும் இயற்கை ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கிறது. நீலம்பூரிலிருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்துக்கு சென்றடையலாம்.


வெல்லம்தோட் மலப்புரம்

வெல்லம்தோட் எனும் இந்த வற்றாத நீர்வீழ்ச்சி தனது தனித்தன்மை வாய்ந்த வசீகரத்துக்காகவே பிரசித்தி பெற்றுள்ளது. ஒரு மலையின் உச்சியிலுள்ள இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி ஸ்தலத்திலிருந்து சுற்றிலுமுள்ள இயற்கை எழிலை நன்கு பார்த்து ரசிக்கலாம். பழங்குடி இனத்தார் வசிக்கும் குடியிருப்புகளின் நடுவே அமைந்துள்ள இந்த எழிற்பிரதேசம் இயற்கை ரசிகர்கள் மற்றும் சாகச விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமான மலைக்காட்சி ஸ்தலமாக உள்ளது.

எப்படி போலாம்

நீலம்பூர் நகரத்திலிருந்து 27 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி உள்ளது. கோழிக்கோட் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து அரீக்கோட் - முக்கம் சாலையின் மூலம் இந்த இடத்தை அடையலாம்.

Sidheeq

 அதிரப்பள்ளி அருவி திருச்சூர்

அதிரப்பள்ளி அருவி திருச்சூர்

பெயரைச் சொல்லும்போதே அதிரவைக்கும் ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சிதான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் இந்த அற்புத நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா' எனும் விசேஷப்பெயரையும் இந்த நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது.

சாலக்குடி ஆற்றுப்பெருக்கானது வழச்சல் வனச்சரகத்தின் வழியே பாய்ந்தோடி வந்து இந்த நீர்வீழ்ச்சியில் வழிந்து கீழே ஆழத்தில் ஓடும் ஆற்றில் விழுகிறது. 24 மீட்டர் (82 அடி) உயரத்திலிருந்து நான்கு பிரிவுகளாக இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. 100 மீட்டர் (330 அடி) அகலத்தை கொன்டுள்ளதால் மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்ட தோற்றத்துடன் இந்த நீர்வீழ்ச்சி நம்மை முதல் பார்வையிலேயே திகைக்க வைத்துவிடுகிறது.

நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பல்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு கோணத்தில் இதன் அழகை பயணிகள் ரசிக்கலாம். நீர்வீழ்ச்சியை நோக்கிச்செல்லும் பாதையிலிருந்து பார்க்கும்போதே நீர்வீழ்ச்சியின் முன்புற தோற்றமும் கீழே ஆழத்தில் ஓடும் ஆறும் காட்சியளிக்கின்றன. பாறைகளில் வழிந்து சிதறும் வெண்ணிறப்பரப்பு நீரா, புகையா, ஆவியா, மேகமா, பஞ்சுப்பொதியா என்றெல்லாம் நம்மை மனம் தடுமாற வைக்கும் அமானுஷ்யத்துடன், பிரதேசம் முழுதும் எதிரொலிக்கும் ஆங்கார ஓசையுடன் இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. அதுதான் இயற்கையின் குரலா என்று கூட நீங்கள் வியக்கக்கூடும்.


சர்ப்பா நீர்வீழ்ச்சி திருச்சூர்

அதிகமாக அறியப்படாத இந்த சர்ப்பா நீர்வீழ்ச்சி அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் நெடுஞ்சாலைப்பகுதியில் உள்ளது. வெறும் 25 அடி உயரத்திலிருந்து வழியும் அருவிதான் இது என்ற போதிலும் பிரம்மாண்டமான பாறைகளில் வலிமையுடன் நீர் வழியும் காட்சி கண்ணைக்கவரும் அற்புதமாக தோன்றும் என்பதில் சந்தேகமில்லை. சாலக்குடி ஆற்றின் வழியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி ‘ இந்தியாவின் நயாகரா' என்றும் அழைக்கப்படுகிறது. தில் ஸே, குரு, இருவர் போன்ற திரைப்படங்களில் இந்த நீர்வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

திரிசூர் நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி ஒரு பெருக்கெடுத்து வழியும் அருவி இல்லை என்றாலும் கூட மழைக்காலத்தில் இங்கு சாலையில் கூட நீர் வழிந்து ஓடக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

வாழச்சல் திருச்சூர்

சோலயார் மலைப்பகுதியில் அதிரப்பள்ளி மழைக்காடுகளுக்குள்ளே இந்த வழச்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஓவியம் போன்ற அழகுடன் காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஒரு மாற்றத்தை தேடும் இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் ஏற்றது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப்போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் வேகமாக ஓடும் ஆறு போன்றே இந்த நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு நயாகரா போன்றே இதுவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. நீரின் பரப்பு எங்கிருக்கிறது என்று இனங்காண முடியாத அளவுக்கு பிரமாண்டமான நீர்ப்புகையுடன் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி காட்சியளிப்பது பிரமிக்க வைக்கும் ஒரு தரிசனமாகும். வழச்சல் நீர்வீழ்ச்சியின் காட்சிதளத்திற்கு செல்லும் வாயிற்பகுதியில் பொது நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து 5 கி.மீ தூரத்திலும் சாலக்குடி காடுகளிலிருந்து 36 கி.மீ தூரத்திலும் உள்ளது.

Jan J George

இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் அருவிகள்

இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் அருவிகள்

இடுக்கியில் நிறைய அருவிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் நாம் நிச்சயம் தவற விடக்கூடாது. கீழார்குத்து அருவி இடுக்கி, வாகமன் நீர்வீழ்ச்சி இடுக்கி, ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் இடுக்கி, பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி இடுக்கி, தொம்மன்குத்து அருவி இடுக்கி, பள்ளிவாசல் அருவி(இடுக்கி), ஆட்டுக்கல் இடுக்கி, தூவானம் அருவி இடுக்கி ஆகியன இந்த மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான அருவிகள் ஆகும்.


கீழார்குத்து அருவி இடுக்கி

நிசப்தம் நிரம்பிய தொடுபுழா நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த கீழார்குத்து அருவி அமைந்துள்ளது. பார்ப்பவரை சொக்க வைக்கும் இந்த அருவி ‘வானவில் நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் ஒரு பாறைப்பகுதியிலிருந்து உருவானதுபோல் இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. வருடமுழுதுமே வேகம் குறையாமல் இந்த நீர்வீழ்ச்சி ஊற்றுவது குறிப்பிடத்தக்கது.

வாகமன் நீர்வீழ்ச்சி இடுக்கி

ஒரு ஏரியிலிருந்து ஒரு சிறு நீரோடை இந்த வாகமண் நீர்வீழ்ச்சியாகும். ஒரு பாறைப்பிளவின் ஊடாக இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் பின்னணியில் பசுமையான பாறைத்திட்டுகளும் அடர்ந்த காடுகளும் வீற்றுள்ளன. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மலையேறிகள் மத்தியில் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி ரசிக்கப்படுவதற்கான காரணம் இதன் பிரம்மாண்டமோ அல்லது உயரமோ இல்லை.


ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் இடுக்கி

ஆனயிறங்கல் எனும் சுற்றுலா ஸ்தலம் மூணாரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இங்குள்ள தேயிலை தோட்டங்கள், அணி மற்றும் ஏரிக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காக பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.


பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி இடுக்கி

மூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான ஒன்றாகும். சீதா தேவி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்விழ்ச்சி தேவிகுளம் பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கவும், பிக்னிக் சிற்றுலா செல்வதற்கும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் மிகவும் ஏற்றதாக உள்ளது. அன்றாட வாழ்க்கையின் சந்தடியிலிருந்து விலகி பயணிகள் இந்த இடத்தின் அமைதி நிரம்பிய இயற்கைச்சூழலில் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.

தொம்மன்குத்து அருவி இடுக்கி

கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் காணப்படும் தொம்மன்குத்து நீர்வீழ்ச்சி தொடுப்புழா நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது. சிறிய நீர்வீழ்ச்சியான இது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. அற்புதமான இயற்கைக்காட்சிகளை பின்னணியில் கொண்டுள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். தொம்மன் என்ற பழங்குடி இனத் தலைவரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆற்றைக்கடக்கும் போது இந்த நீர்வீழ்ச்சியில் அவர் அடித்துச்செல்லப்பட்டு இறந்ததாக சொல்லப்படுகிறது.


பள்ளிவாசல் அருவி(இடுக்கி)

தேவிகுளம் பகுதியின் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான சீதா தேவி ஏரிக்கு வெகு அருகிலேயே பள்ளிவாசல் அருவி அமைந்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய அலுத்துப் போன நகர வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறான இந்த அருவியின் தனிமையையும், அமைதியையும் வெகுவாக விரும்புகிறார்கள். கேரளாவின் முதல் நீர்மின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இடமாக இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் கிராமம் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கிராமம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பள்ளிவாசல் கிராமத்தை சாலை மூலமாக சுலபமாக அடைய முடியும்.


ஆட்டுக்கல் இடுக்கி

ஆட்டுக்கல் என்ற இடம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூணாரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் நடைபயணிகளுக்கும் பிக்னிக் பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்றாகவும் திகழ்கிறது. மூணாருக்கும் பள்ளி வாசலுக்கும் இடையே அமைந்துள்ளதால் பள்ளிவாசலுக்கும் செல்லும்போதே பயணிகள் இந்த ஆட்டுக்கல் எனும் நீர்வீழ்ச்சி ஸ்தலத்துக்கும் விஜயம் செய்யலாம். நிசப்தம் தவழும் இந்த ஆட்டுக்கல் பிரதேசமானது செழிப்பான மலைகள் மற்றும் தூய்மையான இயற்கை அழகுடன் நிரம்பி வழிகிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சியை சுற்றிலும் நிறைய மலையேற்றப்பாதைகள் காணப்படுவதால் இந்த இடம் மலையேற்றப்பிரியர்களுக்கு ரொம்பவும் பிடித்தமானதாக இருக்கும்.


தூவானம் அருவி இடுக்கி

மரயூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த தூவானம் அருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி சின்னார் சரணாலயத்திற்கு கிழக்கு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் பாம்பார் நதியிலிருந்து உற்பத்தியாகிறது. தூவானம் அருவியின் காடுகளில் பல்வேறு தாவரங்களையும், விலங்கினங்களையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதோடு தூவானம் அருவியிலிருந்து கரிமுட்டி காட்டுப்பகுதிகள் வரை நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.

Wikistranger

 அருவிக்குழி நீர்வீழ்ச்சி கோட்டயம்

அருவிக்குழி நீர்வீழ்ச்சி கோட்டயம்

கண்ணைக்கவரும் அழகோடு காட்சியளிக்கும் இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி குமரகம் அருகிலேயே உள்ளது. கோட்டயம் நகரத்திலிருந்து 18கி.மீ தொலைவில் குமரகம் செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி இயற்கைச்சூழலில் நடைபயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற இடமாகும்.

இந்த நீர்வீழ்ச்சியில் 100 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்ட பாறை அமைப்பின் வழியாக நீர் சரியும் காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் திணற வைக்கிறது. பரந்த ரப்பர் மரக்காடுகளின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் குடும்பத்தோடு சிற்றுலா செல்வதற்கும் உல்லாச பிக்னிக் பொழுது போக்குகளுக்கும் இந்த ஸ்தலம் ஏற்றதாகும். இயற்கையின் தூய்மை மிளிரும் இச்சூழலானது இயற்கை ரசிகர்களையும் புகைப்பட ஆர்வலர்களையும் வசியப்படுத்தி விடுகிறது.

குமரகம் நகரத்திலிருந்து நடக்கும் தூரத்திலேயே உள்ள இந்த நீர்வீழ்ச்சியின் சத்தத்தை வெகு தூரத்திலிருந்தே பயணிகள் கேட்க முடியும். மழைக்காலத்தில் படிகம் போன்ற புதிய நீரானது வேகத்துடன் இந்த நீர்வீழ்ச்சியில் வழிகிறது. மழைக்காலம் முடிந்த பின், கோடை துவங்குவதற்கு முன் உள்ள இடைப்பட்ட காலம் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்க ஏற்ற பருவமாகும்.

பாலருவி கொல்லம்

கேரளா - தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள இந்த பாலருவி நீர்வீழ்ச்சி தேன்மலா சுற்றுலாத்தலத்தின் மற்றொரு முக்கியமான அம்சமாகும். பால் வழிந்து ஊற்றுவதுபோல் நுரையுடன் நீர் வழிவதால் இதற்கு பாலருவி என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது. நுரைத்துக்கொண்டு ஓடிவரும் சிற்றோடைகள், வெள்ளிக்கம்பி போல் விழும் அருவிகள் என்று இந்த நீர்வீழ்ச்சிப்பிரதேசம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது.

பயண உபகரணங்கள் மற்றும் பாதை வரைபடங்கள் போன்றவற்றையும் இங்குள்ள வனத்துறை கிளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இயற்கையின் மையப்பகுதியில் வீற்றிருக்கும், நிசப்தம் நிலவும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு தக்க துணை மற்றும் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வது அவசியம்.

எப்படி செல்வது

கொல்லம் நகரிலிருந்து 75 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை 4 கி.மீ தூரம் காட்டுப்பகுதி வழியாக மலையேற்றம் செய்து மட்டுமே சென்றடைய முடியும். சூழலியல் சுற்றுலா வளாகத்துக்கு அருகிலேயே உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்வது கூடுதல் பரவச அனுபவமாக இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் பசுமைமாறாக்காடுகள் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசிகர்களை வசியப்படுத்தும் வகையில் இப்பகுதி தோற்றமளிக்கிறது. 300 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை நோக்கிய இயற்கைப்பயணம் மேற்கொள்வதற்கு உதவியாக உள்ளூர் காட்டுச்சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர்.


பெருந்தேனருவி பத்தனம்திட்டா

பத்தனம்திட்டா நகரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் பெருந்தேனருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி 100 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுவதும், அதன் பிறகு பம்பை நதியுடன் கலக்கின்ற காட்சியும் பயணிகளின் நினைவை விட்டு என்றும் அகலாது. அதோடு இந்த அருவியின் சுற்றைமைப்பு இதை அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கிறது. பெருந்தேனருவி என்பதற்கு 'பெருக்கெடுத்து ஓடும் தேனின் வெள்ளம்' என்று பொருள். இதன் பெயருக்கு தகுந்தார் போல தேன் அருவியாகவே திகழ்ந்து வரும் இந்த அருவி உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

Prajaneeshp

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X