Search
  • Follow NativePlanet
Share
» »வயசுக்கு வர்றதுன்னா என்னங்க ?

வயசுக்கு வர்றதுன்னா என்னங்க ?

தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள்.

சனி, ஞாயிறு ஜாலியாய் இருந்துவிட்டு, திங்களன்று, பேருந்து, ஆட்டோ என கிடைத்ததை அடித்து பிடித்து அலுவலகத்திற்கு வந்து நொந்து நூடுல்ஸாயிருக்கும் அன்பர்களே. மாறுதலுக்கு, இன்று ஒரு சினிமாவைப் பற்றி பேசுவோம்.

ஆங்கிலத்தில் Coming-of-age என்று ஒரு சொற்றொடர் உண்டு. வயதிற்கு வருவது என்று அர்த்தம். வெறும் உடல் ரீதியான மாற்றம் என்று பார்க்காமல், மன முதிர்ச்சி அடைவது என்றும் பொருள் கொள்ளலாம்.

ஒரு சினிமாவோ , நாவலோ எடுத்துக்கொண்டால் - அந்த படைப்பின் பிரதான கதாபாத்திரம், ஆரம்பத்தில், அதிகம் விவரம் தெரியாத, யாரிடமும் எளிதாக பேசாமல், தாழ்வு மனப்பான்மை கொண்டதாக இருக்கும். பின், அந்த கதாபாத்திரத்தின் போக்கு தான் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள் ஆகியவற்றால் மெல்ல மெல்ல மாறி கடைசியில் ஒரு பக்குவப்பட்ட பாத்திரமாக மாறும். இத்தகைய மாற்றத்தை பல ஆங்கில சினிமாக்களில், இலக்கியத்தில் நீங்கள் காணலாம். இதற்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கும் இருக்கின்றனர். தமிழில் coming-of-age நாவல்கள் மிகக்குறைவு. உலகப்புகழ்பெற்ற Coming-of-age நாவலான The Catcher in the Rye தாக்கத்தில் இங்கு வந்த நல்லதொரு நாவல் ஆதவன் எழுதிய என் பெயர் ராமசேஷன். கண்டிப்பாக படித்துப் பாருங்கள். நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடிய நாவல்.

தமிழ் சினிமாவில் செல்வராகவன் படங்கள் :

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன என எல்லாமே ஒரே வகை Coming-of-age ஜானர்கள்தான். ஆனால், வேறு வேறு களத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Rainbow

பயண தளத்தில் ஏன் சம்பந்தமேயில்லாமல் இதைப் பற்றிக் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று குழம்ப வேண்டாம்.

Queen என்ற சுவாரஸ்யமான Coming-of-age, Travel படத்தைப் பற்றி பேசத்தான் இந்த சின்ன முன்னுரை.

Queen இரண்டு ஆண்டுகள் முன் வெளிவந்த ஒரு ஹிந்திப் படம். 12 கோடியில் படத்தை எடுத்து 100 கோடிக்கும் மேல் அள்ளிய படம். அப்படி என்ன விசேஷம் படத்தில் ? இத்தனைக்கும் பாலிவுட்டின் டாப் ஸ்டார்களான அமீர், ஷாருக், சல்மான், என்று யாருமே படத்தில் கிடையாது. அவ்வளவு ஏன், படத்தில் ஹீரோவே கிடையாது. ஒரே ஒரு லண்டன் மாப்பிள்ளை கேரக்டர் மட்டும்தான்.

Queen

சரி, படத்திற்கு வருவோம் : டெல்லியில் இருக்கும் பஞ்சாபி பெண்ணான ராணி (கங்கனா ரனாவுட்) சராசரி இந்தியப் பெண்ணைப் போல ஆண்களோடு அதிகம் பரிச்சயம் கிடையாது, செல்லமாக வளர்க்கப்பட்டு, எங்கு போனாலும் துணைக்குத் தம்பியை அழைத்துக்கொண்டு போகும் ஒரு பயந்த சுபாவம் கொண்ட கதாபாத்திரம். ராணியை துரத்தித் துரத்திக் காதலித்து கடைசியில் கல்யாணத்திற்கு முதல் நாள் ஒரு காஃபி ஷாப்பிற்கு அழைத்து, நீ என் அந்தஸ்திற்கு, லண்டன் கலாச்சாரத்திற்கு சரிப்படமாட்டாய் என்று ராணியை நிராகரிக்கிறான் அவளது காதலன். கல்யாணம் நின்று போகிறது.

ராணியால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை.யார் கண்ணிலும் படாமல் நிம்மதியாய சில நாட்கள் இருக்க ஆசைப்படுகிறாள். தேனிலவிற்கு எடுத்த டிக்கெட்டை வைத்து பாரிஸ் செல்கிறாள் தனியாக.

சொந்த ஊரிலேயே எங்கு போனாலும் தம்பியை அழைத்துக் கொண்டு போகும் ராணி, மொழி தெரியாத வேறு நாட்டில் தனியாக காலம் கழிப்பது எப்படியிருக்கும் ? மொழியால் அவளுக்கு ஏற்படும் உணவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பாஸ்போர்ட் இல்லாமல் வெளியே சென்றதால் போலிஸ் பிடித்துக் கொள்ளும் தொந்தரவுகள் என ஒவ்வொரு பிரச்சனையாக சந்திக்கிறாள்; அதிலிருந்து வெளிவருகிறாள். அவளுக்கு ஹோட்டலில் ஒரு பணிப்பெண்ணின் நட்பு கிடைக்கிறது. பாரிஸை நன்றாக சுற்றுகிறார்கள். பின் அங்கிருந்து Amsterdam செல்கிறாள். அங்கு அவளுக்கு இன்னும் அழகான விதவிதமான கதாபாத்திரங்களின் நட்பு கிடைக்கிறது.

மெல்ல மெல்ல ராணி Queenஆக மாறுகிறாள். இதுதான் கதை. பயணம் அவள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை நகைச்சுவையுடன், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் வழியே திரையில் காட்டியிருக்கிறார்கள்.

கங்கனா ரனாவுட்டிற்கு தேசிய விருது கிடைத்தது; சிறந்த ஹிந்திப் படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.

இந்தியப் பெண்கள், பயண விரும்பிகள் என்று அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X