Search
  • Follow NativePlanet
Share
» »ஆக்ராவில் தாஜ்மஹாலைத் தவிர வேற என்னெல்லாம் இருக்கு தெரியுமா?

ஆக்ராவில் தாஜ்மஹாலைத் தவிர வேற என்னெல்லாம் இருக்கு தெரியுமா?

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் வீற்றிருக்கும் இந்த புராதன

By Udhaya

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் வீற்றிருக்கும் இந்த புராதன நகரத்தில் தாஜ்மஹால் மட்டுமல்லாது இன்னும் இரண்டு யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய ஸ்தலங்களும் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவை ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரி ஆகிய இரண்டுமாகும். இவை மட்டுமல்ல இன்னும் சில இடங்களும் இங்கு காணப்படுகின்றன. வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இத்மத் உத் தௌலா கல்லறை

இத்மத் உத் தௌலா கல்லறை

பேரரசர் அக்பரின் மகனான ஜஹாங்கீர் தனது மனைவி நூர்ஜஹானின் தந்தையான மிர்ஸா கியாஸ் பேக் அவர்களுக்கு இத்மத் உத் தௌலா எனும் சிறப்புப்பட்டத்தை அளித்து கௌரவித்தார். ஆனால் இந்த இத்மத் உத் தௌலா கல்லறை நூர் ஜஹானால் கட்டப்பட்டதாகும்.

தனது பெற்றோரான இத்மத் உத் தௌலா மற்றும் அவரது மனைவி அஸ்மத் ஜஹான் ஆகியோருக்காக அவர் இதனை எழுப்பியுள்ளார். 1622ம் ஆண்டிலிருந்து 1628ம் ஆண்டு வரை இதன் கட்டுமானம் நிகழ்ந்திருக்கிறது.

குட்டி தாஜ் மஹால்

இந்த கல்லறை மாளிகையின் பிரம்மாண்டமும் கம்பீரமும் குறிப்பிடத்தக்கதாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும், தாஜ்மஹால் உருவாவதற்கான ஒரு முன்மாதிரியாகவும் இது இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே இது குட்டி தாஜ் மஹால் அல்லது நகைப்பெட்டி என்ற சிறப்புப்பெயருடனும் அழைக்கப்படுகிறது.

அமைப்பு

23 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்லறை மாளிகை யமுனை நதியின் கிழக்குக்கரையில் என்.எச்-2 நெடுஞ்சாலையில் ராம் பாக் சர்க்கிள் எனும் இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

சிவப்புக்கற்களால் ஆன ஒரு பீட அமைப்பின் மீது சுற்றிலும் சார்பாக் எனப்படும் அழகிய பாரசிக பாணி பூங்கா சூழ்ந்திருக்கும்படியாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிரது. இந்த தோட்டப்பூங்காவின் நடுநடுவே குறுகிய நீர்ப்பாதைகள் மற்றும் நீர்த்தொட்டிகள், நீருற்றுகள் ஆகியவை நடைபாதைகளோடு சேர்த்து அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை தோட்டத்தை நான்கு அங்கங்களாக பிரிப்பது போல் அமைந்திருப்பது ஒரு கூடுதல் வசீகரம்.

Muhammad Mahdi Karim

காஞ்ச் மஹால்

காஞ்ச் மஹால்

சிக்கந்த்ரா எனும் இடத்தில் அக்பரின் கல்லறை மாளிகைக்கு அருகே இந்த சதுரவடிவிலான காஞ்ச் மஹால் எனும் உன்னதமான மாளிகை முகாலயர் கால கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் சின்னமாக அமைந்திருக்கிறது. 1605ம் ஆண்டிலிருந்து 1619ம் ஆண்டு வரை இதன் கட்டுமானம் நிகழ்ந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அமைப்பு

அபரிமிதமான வண்ண ஓடுகள் இதில் பதிக்கப்பட்டிருப்பதால் இதற்கு காஞ்சன் மஹால் என்ற பெயர் வந்துள்ளது. இதன் வெளிப்புறம் சாந்துப்பூச்சால் பூசப்பட்டு குழி குழியான அலங்கார வடிவமைப்புடன் காட்சியளிக்கிறது. இந்த குழிவுகளில் மதுரசக்குடுவைகள், மலர்க்கொடிகள் மற்றும் திரிகோணமிதி ஓவியங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த அரண்மனை மாளிகையானது துவக்கத்தில் அந்தப்புர மகளிர் இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டு பின்னர் ஜஹாங்கீர் மன்னரால் ஷிகார்கர் எனப்படும் வேட்டை மாளிகையாக மாற்றப்பட்டிருக்கிறது. இரண்டு அடுக்குகளை கொண்டுள்ள இந்த மாளிகையின் நாலா புறமும் நான்கு சதுர அறைகள் காணப்படுகின்றன.

பிரதான கூடத்தில் காற்றும் வெளிச்சமும் நன்கு ஊடுறுவும்படியாக இரண்டு திறப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜரோக்கா எனப்படும் சல்லடை ஜன்னல்கள் மற்றும் பலகணிகளோடு இந்த மாளிகையின் அறைகள் காணப்படுகின்றன. மேலும் மாளிகையை சுற்றி ஒரு பூங்கா, நீர்வழிப்பாதைகள், தடாகங்கள் போன்ற பயன்பாட்டு அம்சங்கள் துல்லியமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

Abhishek727

தயால்பாக்

தயால்பாக்

சோயாமி பாக் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த தயால்பாக் எனும் பெயருக்கு கருணையின் தோட்டம் என்பது பொருளாகும். ராதாசோயாமி மதப்பிரிவினரின் தலைமையகமாக இந்த பூங்கா வளாகம் இயங்குகிறது. இந்த பிரிவின் 5 வது குருவாகிய ஹுசுர் சஹாப்ஜி மஹராஜ் என்பவரால் 1915ம் ஆண்டில் பசந்த் பஞ்சமி தினத்தில் ஒரு மல்பெரி மரத்தை நட்டு அடிக்கல் நாட்டப்பட்டு இந்த பூங்கா துவங்கப்பட்டிருக்கிறது.


இயற்கை எழில் அமைப்பு

ஆக்ராவிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இயற்கை வனப்பு கவிந்த சூழலின் நடுவே இந்த ராதாசோயாமி மதப்பிரிவினரின் இருப்பிடப்பூங்கா அமைந்திருக்கிறது. பக்தர்கள் மட்டுமல்லாது சுற்றுலாப்பயணிகளும் தினசரி அதிக அளவில் இந்த ஆன்மீக வளாகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த இருப்பிட வளாகம் அமைந்திருக்கும் இடம் ஒரு காலத்தின் மணற்குன்றுகள் நிரம்பிய பூமியாக இருந்திருக்கிறது. இருப்பினும் பக்தர்களின் ஒன்றுபட்ட முயற்சியில் இன்று ஒரு பசுமை வளாகமாக 1200 ஏக்கர் பரப்பளவில் இது உருவாகியிருக்கிறது. 110 அடி உயரத்தில் ஹிந்து கட்டிடக்கலை முறைப்படி உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கோயில் ஒன்றும் இவ்வளாகத்தில் உள்ளது. தாஜ் மஹாலுக்கு இணையாக இது பார்வையாளர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Isewell

அராம் பாக்

அராம் பாக்

அராம் பாக் அல்லது பாக் இ குல் அப்ஷான் என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்த ராம் பாக் முதல் முகலாய பேரரசரான பாபரால் 1528ம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சினி கா ரௌஜா எனும் கல்லறை மாளிகையிலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், இதிமத் உத் தௌலா'வுடைய கல்லறை மாளிகையிலிருந்து 3 கி.மீ தூரத்திலும், தாஜ் மஹாலிலிருந்து 5 கி.மீ தூரத்திலும் இது உள்ளது.

அமைப்பு

இந்த பிரம்மாண்டமான பூங்கா நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு அழகிய நடைபாதைகள் மற்றும் நீர்வழிக்கால்வாய்களோடு அமைக்கப்பட்டிருக்கிறது. பாரசீக ‘சார்பாக்' தோட்டபூங்கா பாணியில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. சார்பாக் என்பது ‘பூமியிலுள்ள சொர்க்க பூங்கா' எனும் பொருளைக்குறிப்பதாகும்.

தக்காணா

இந்த பூங்காவின் நீர்வழிக்கால்வாய்களுக்கான நீர் யமுனை நதியிலிருந்து பெறப்பட்டு மூன்று தளங்களை கடந்து அருவி போல் வழிந்து இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யமுனை நதியை நோக்கியவாறு இரண்டு காட்சி மாடங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு கிழே ‘தக்காணா' எனப்படும் நிலவறைகளும் வெயில் காலத்தில் ராஜ குடும்பத்தினர் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

பலவகையான பூச்செடிகளும் தாவரங்களும் வளர்க்கப்பட்டு குறுக்கு நெடுக்காக செல்லும் நீர்ப்பாதைகள் மற்றும் ஆங்காங்கு நீரூற்றுகளோடு ரம்மியமாக இந்த பூங்கா காட்சியளிக்கிறது. ஜஹாங்கீரின் மனைவியான நூர் ஜஹான் இந்த பூங்காவை புதுப்பித்ததாக தெரிய வருகிறது.

MikeParker

மூஸாம்மான் புர்ஜ்

மூஸாம்மான் புர்ஜ்

மூஸாம்மான் புர்ஜ் எனப்படும் இந்த கோபுரம் சமான் புர்ஜ் அல்லது ஷா புர்ஜ் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது ஆக்ரா கோட்டையின் உள்ளே ஷாஹஹான் கட்டிய திவான் இ காஸ் மாளிகைக்கு அருகே அமைந்திருக்கிறது. எண்கோண வடிவமைப்புடன் காட்சியளிக்கும் இந்த கோபுரம் ஷாஜஹான் மன்னரால் அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோபுரத்திலிருந்து தாஜ் மஹாலின் அழகை நன்கு பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல அடுக்கு கோபுரத்தில் விலைமதிப்பற்ற கற்கள் அதிகமாக பதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்ப்பகுதியில் சல்லடைச்சன்னல்கள் அலங்கரிக்கப்பட்ட குழிவு அமைப்புகளுடன் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் அந்தப்புர மகளிர் வெளியே நடப்பவற்றை பார்த்து ரசிக்கும் நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு கலையம்சம் கொண்ட நீரூற்று அமைப்பைக்கொண்டிருக்கும் இதன் மையக்கூடத்தை ஒட்டி ஒரு தாழ்வாரமும் உள்ளது. வரலாற்றின் சில சோக நாடகங்களும் இந்த மூஸாம்மான் புர்ஜ் கோபுர மாளிகையில் அரங்கேறியுள்ளன. அதாவது, ஔரங்கசீப் மன்னர் தனது தந்தை ஷாஜஹானையும் சகோதரி ஜஹன்னரா பேகத்தையும் இங்குதான் சிறைப்படுத்தி வைத்திருந்தார்.

David Castor

Read more about: travel agra tajmahal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X