ஆந்திர மாநிலத்தில் கம்மம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பாலாயிர் ஏரி இந்தியாவிலுள்ள அழகான ஏரிகளுள் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. கம்மம் மாவட்டத்தில் குசுமஞ்சி தாலுக்காவில் (மண்டல்) உள்ள பாலாயிர் எனும் கிராமத்தின் ஒரு பகுதியாக இந்த ஏரி வீற்றுள்ளது.
கம்மம் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரியை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். மனித முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை ஏரி நாகார்ஜுனசாகர் அணைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவும் செயல்படுகிறது. லால் பகதூர் கால்வாய் என்று அழைக்கப்படும் ஒரு கால்வாய் மூலமாக இணைக்கப்பட்டு ஒரு உபரி நீர்த்தேக்கமாக இந்த ஏரி பயன்படுத்தப்படுகிறது.
1748 ஹெக்டேர் பரப்பளவில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ஏரி 2.5 டி.எம்.சி நீரை சேமிக்கக்கூடிய கொள்ளளவை கொண்டுள்ளது. நீர்ப்பாசனத்துக்கான ஆதாரமாக பயன்படுவது மட்டுமல்லாமல் மீன் வளர்ப்புக்கும் இந்த ஏரி பயன்பட்டு வருகிறது.
பலவித நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் இந்த பாலாயிர் ஏரி கம்மம் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.
நன்னீர் மீன்கள் மற்றும் இறால் போன்றவை இந்த ஏரியில் கிடைக்கின்றன. இந்த ஸ்தலத்திலேயே இவை உணவாக தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் வசதியும் இங்குள்ளது.
பாலாயிர் ஏரிக்கு வெகு அருகிலேயே வய்ரா ஏரி என்ற மற்றொரு பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமும் அமைந்துள்ளது. கம்மம் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்த ஏரிப்பகுதிகளுக்கு ஓய்வாக விஜயம் செய்து இந்த சூழலின் இயற்கை அழகை ரசித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications