பெல்லிங்கின் வெப்பநிலை வருடம் முழுவதும் சிறப்பாகவே இருந்து வருகிறது. இதனாலேயே சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக பெல்லிங் உள்ளது. எனினும், சுற்றுலாப் பயணத்தை கடினமானதாக மாற்றி விடும் மழைக் காலங்களில் பெல்லிங்கிற்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது. மிதமான கோடைக்காலமும், குளிர்ச்சியான குளிர் காலமும் உள்ள பெல்லிங்கிற்கு குளிர் காலத்தில் வருவது மிகவும் சிறந்த சுற்றுலா அனுபவத்தைத் தரும்.
பெல்லிங்கில் கோடைக்காலம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நீடித்திருக்கும். இந்நாட்களில் பெல்லிங்கின் வெப்பநிலை 10°C முதல் 28°C வரை இருக்கும். மே மாதங்களில் வெப்பநிலை அதன் உச்சநிலையைத் தொடும். கோடைக்காலம் மிதமாகவே இருப்பதால், கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்வது பரிந்துரைக்கப்படுகிறது.
பெல்லிங்கில் ஜுன் மாதம் தொடங்கும் மழைக்காலத்தில் தென்-மேற்கு பருவக்காற்று மழையைப் பெற்றுத்தருகிறது. ஜுன் மாதத்திற்குப் பிறகு மழை மெதுவாக குறைந்து, அக்டோபரிலிருந்து சுற்றுலாப் பருவம் தொடங்கி விடுகிறது.
பெல்லிங்கின் குளிர் காலம் டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடித்திருக்கிறது. இந்நாட்களில் அதிக பட்ச வெப்பநிலையாக 16°C -ம் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலையாக ஜில்லிட வைக்கும் -5°C ம் உள்ளன. பெல்லிங்கிற்கு சுற்றுலா வருவதற்கு இது மிகவும் ஏற்ற பருவமாகும்.