இந்தியாவில் ரயில் பயணம் ஒரு தனித்துவமான அனுபவமாகும். பரந்து விரிந்த நிலப்பரப்பையும், மாறுபட்ட கலாச்சாரத்தையும் ரசித்தபடி பயணிப்பது மனதை கொள்ளை கொள்ளும். இந்த அனுபவத்தை மேலும் ஆடம்பரமாகவும், வசதியாகவும் மாற்ற இந்தியாவில் பல சொகுசு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இவை 5- நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையான வசதிகளுடன், பயணிக்கும் இடங்களின் அழகையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கின்றன. நாம் இருப்பது ரயிலிலா அல்லது ஸ்டார் ஓட்டலிலா என நம்ப முடியாத அளவிற்கு சொகுசான வசதிகள் கொண்ட பயண அனுபவத்தை தரும் இந்தியாவின் டாப் 5 சொகுசு ரயில்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த 5 சொகுசு ரயில் சேவைகள்:

1. மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் (Maharajas' Express):
இந்தியாவின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான ரயில்களில் இது முதன்மையானது. 2012 முதல் 2018 வரை தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் "உலகின் முன்னணி சொகுசு ரயில்" என்ற விருதை வென்று இதன் பெருமையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் இயக்கப்படும் இந்த ரயில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு சொகுசான பயணத்தை வழங்குகிறது.
வசதிகள்:
இந்த ரயிலில் தங்கும் அறைகள் மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் தனித்தனி குளியலறை, ஏர் கண்டிஷனிங், எல்சிடி டிவி, நேரடி டயல் தொலைபேசி மற்றும் இணைய வசதி போன்ற நவீன வசதிகள் உள்ளன. ரயிலில் இரண்டு உலகத்தரம் வாய்ந்த உணவகங்கள் (ரங் மஹால் மற்றும் மயூரி), ஒரு பார் மற்றும் லவுஞ்ச் (சஃபாரி பார் மற்றும் ராஜ் மஹால்) பயணிகளின் உணவு மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
- பயண வழிகள்: மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் நான்கு விதமான பயணத் திட்டங்களை வழங்குகிறது:
- ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா (Heritage of India): மும்பையில் தொடங்கி உதய்பூர், ஜோத்பூர், பிகானேர், ஜெய்ப்பூர் வழியாக டெல்லியில் முடிவடைகிறது.
- இந்தியன் பனோரமா (Indian Panorama): டெல்லியில் தொடங்கி ஜெய்ப்பூர், ரந்தம்பூர், ஃபதேபூர் சிக்ரி, ஆக்ரா, குவாலியர் வழியாக மீண்டும் டெல்லியில் முடிவடைகிறது.
- இந்தியன் ஸ்ப்ளெண்டர் (Indian Splendour): டெல்லியில் தொடங்கி ஆக்ரா, ரந்தம்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர் வழியாக மும்பையில் முடிவடைகிறது.
- ட்ரெஷர்ஸ் ஆஃப் இந்தியா (Treasures of India): டெல்லியில் தொடங்கி ஆக்ரா, குவாலியர், வாரணாசி வழியாக மீண்டும் டெல்லியில் முடிவடைகிறது (குறுகிய பயணம்).

2. பேலஸ் ஆன் வீல்ஸ் (Palace on Wheels):
இது ராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியில் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பாரம்பரிய சொகுசு ரயில் ஆகும். ராஜஸ்தானின் அரச பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களான ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர், மற்றும் ஆக்ரா வழியாக பயணிகளை அழைத்துச் செல்கிறது.
வசதிகள்:
இந்த ரயிலில் 14 சொகுசான பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியும் ராஜஸ்தானின் முன்னாள் மகாராஜாக்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. அறைகள் வசதியான படுக்கைகள், ஏர் கண்டிஷனிங் மற்றும் இணைக்கப்பட்ட குளியலறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மஹாராணி மற்றும் மஹாராஜா என்ற இரண்டு உணவகங்கள் ராஜஸ்தானி மற்றும் சர்வதேச உணவு வகைகளை வழங்குகின்றன. ஒரு பார் மற்றும் லவுஞ்ச் பயணிகளின் ஓய்வு நேரத்தை இனிமையாக்குகிறது.

3. டெக்கான் ஒடிஸி (Deccan Odyssey):
மகாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (MTDC) மற்றும் இந்திய ரயில்வே இணைந்து 2004 ஆம் ஆண்டு இந்த சொகுசு ரயில் சேவையைத் தொடங்கின. இது மகாராஷ்டிரா மட்டுமல்லாமல், ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகாவின் சில முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிக்கிறது. இந்த ரயில் இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதியின் இயற்கை எழில் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.
வசதிகள்:
டெக்கான் ஒடிஸியில் 21 சொகுசு பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியும் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகளை கொண்டுள்ளது. ரயிலில் இரண்டு உணவகங்கள் (பேஷ்வா மற்றும் விஹார்), ஒரு பார் (ஜூனியர் மஹாராஜா எக்ஸ்பிரஸ் பார்), ஒரு ஸ்பா மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகளும் உள்ளன. வணிக நோக்கங்களுக்கான ஒரு தனிப் பெட்டியும் இதில் உள்ளது.
4. கோல்டன் சாரியட் (Golden Chariot):
கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் (KSTDC) இயக்கப்படும் இந்த சொகுசு ரயில் தென்னிந்தியாவின் அழகிய கோவில்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை பயணிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த ரயில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிக்கிறது.
வசதிகள்:
கோல்டன் சாரியட்டில் 19 சொகுசு பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் நவீன வசதிகளுடன் கூடியது. நளபாகா மற்றும் ருச்சி என்ற இரண்டு உணவகங்கள் தென்னிந்திய மற்றும் சர்வதேச உணவு வகைகளை வழங்குகின்றன. மதுரா பார் மற்றும் அரோக்யா ஸ்பா பயணிகளின் ஓய்வு மற்றும் புத்துணர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

5. ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் (Royal Rajasthan on Wheels):
இதுவும் ராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இயக்கப்படும் ஒரு சொகுசு ரயில் ஆகும். இது பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலைப் போன்றே ராஜஸ்தானின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கிறது. இந்த ரயில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர்,ரந்தம்பூர் மற்றும் சித்தரங்கன் போன்ற ராஜஸ்தானின் முக்கிய நகரங்களுக்குப் பயணிக்கிறது.
வசதிகள்:
இந்த ரயிலில் 14 சொகுசு பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் ராஜஸ்தானின் அரச குடும்பங்களின் பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஸ்வர்ண மஹால் மற்றும் ரூப் மஹால் என்ற இரண்டு உணவகங்கள் உள்ளன. சஃபாரி பார் மற்றும் ஒரு நினைவுப் பொருள் கடை போன்ற வசதிகளும் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த சொகுசு ரயில் சேவைகள் வெறும் பயணத்தை மட்டுமல்ல, ஒரு மறக்க முடியாத அனுபவத்தையும் அளிக்கின்றன. இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை ஆடம்பரமான முறையில் அனுபவிக்க விரும்புவோருக்கு இவை சிறந்த தேர்வாகும்.
டிக்கெட் புக் செய்யும் முறையும், கட்டண விபரமும்
1. மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் - Maharajas' Express train இணையதளத்திற்கு சென்று பயணம் செய்யும் தேதியை தேர்வு செய்து, இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். டீலக்ஸ் கேபின், அதாவது இரண்டு பேர் பயணிக்கக் கூடிய பெட்டியில் பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.3,90,600. இது 3 இரவுகள், 4 பகல் பயணம் செய்வதற்கான கட்டணம். பிரசிடெண்ட் சூட் பிரிவில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.20,90,760 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
2. பேலஸ் ஆன் வீல்ஸ் - www.palacesonwheels.com இணையதளத்திற்கு சென்று டிக்கெட் புக் செய்யும் பக்கத்திற்கு சென்று, பயணம் செய்பவரின் பெயர், பயண தேதி, பயணம் செய்பவர் பற்றிய விபரங்களை நிரப்பி டிக்கெட் புக் செய்ய வேண்டும். சீசன் குறைவாக இருக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கும் டீலக்ஸ் கேபினுக்கு ரூ.7,62,300 கட்டமும், சீசன் உச்சத்தில் இருக்கும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் ரூ.4,95,600 முதல் ரூ.5,60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
3. டெக்கான் ஒடிஸி - https://traindeccanodyssey.com என்ற இணையதளத்திற்கு சென்று டிக்கெட் புக் செய்ய வேண்டும். இதில் 7 இரவு, 8 பகல் பயணம் செய்ய குறைந்தபட்சம் ரூ.5 லட்சமும், அதிக பட்சமாக ரூ.19 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
4. கோல்டன் சாரியட் - IRCTC இணையதளத்திற்கு சென்று இதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். 5 இரவுகள், 6 பகல் கர்நாடகாவில் பயணிக்க டீலக்ஸ் கேபினில் பயணிக்க ரூ.398,160ம், 3 இரவுகள் மற்றும் 4 பகல் பயணிக்க ரூ.265,440 ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
5. ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் - https://www.royal-rajasthan-on-wheels.com இணையதளத்திற்கு சென்று டிக்கெட் புக் செய்யலாம். டீலக்ஸ் கேபினில் பயணிக்க ஒரு இரவுக்கு ரூ.2,64,300 முதல் ரூ.2,87,800 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இருவர் பயணிக்கும் பெட்டியில் பயணிக்க ஒரு இரவுக்கு ரூ.70,800 முதல் ரூ.80,000 வரை செலுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications




