காங்க்ரா பகுதியில் தரம்ஷாலாவில் உள்ள கொட்வாலி பஜார் எனும் இடத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமான காங்க்ரா ஆர்ட் மியூசியம் அமைந்துள்ளது. அழகான காங்க்ரா தூரிகை ஓவியங்களை இங்கு பயணிகள் பார்க்கலாம்.
கண்கவரும் வண்ணங்களில் உருவாக்கப்பட்ட கவர்ச்சியான உருவங்கள் இவற்றில் தீட்டப்பட்டுள்ளன. 5ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சில உன்னதமான ஓவியங்களையும் இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.
ஒரு நூலகம் மற்றும் சமகால ஓவியர்கள், சிற்பிகள் மற்றும் புகைப்படக்கலைஞர்களின் படைப்புகளுக்கான தனிப்பிரிவு ஆகியவற்றை இந்த கலைக்கூடம் கொண்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் புராதன மட்பாண்ட பொருட்கள், மானுடவியல் தொடர்பான அரும்பொருட்கள் மற்றும் சிலைகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
திபெத்திய மற்றும் பௌத்த மரபுகளை சேர்ந்த ஏராளமான கலைப்பொருட்களையும், பூர்வகுடி மக்களால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள், தையல் வேலைப்பாடு கொண்ட உடைகள், மர கைவினைப்பொருட்கள் போன்றவற்றையும் இங்கு பயணிகள் காணலாம்.
காங்க்ரா ஓவியங்கள் அல்லது பஹாரி குறு ஓவியங்கள் எனப்படும் பாரம்பரிய ஓவியங்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக காட்சிக்கூடத்தையும் இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது.
ஹிமாசலபிரதேசப்பகுதியின் பாரம்பரிய கலையம்சமாக கருதப்படும் இந்த ஓவியப்பாணி மற்றும் படைப்புகளை இந்த அருங்காட்சியகம் பாதுகாத்து ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மூலிகைகள் மற்றும் மலர்களிலிருந்து பெறப்படும் வண்ணச்சாயங்களை பயன்படுத்தி இந்த ஓவியங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு சிறப்பம்சமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications