ஜார்கண்ட் சுற்றுலா – காடுகள், அருவிகள் மற்றும் மலைகள்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

ஜார்கண்ட் மாநிலம் 2000 ஆண்டு நவம்பர் 15ம் தேதி பீஹார் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒரு புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. வெகு காலமாக பீஹார் மாநிலத்தின் அங்கமாக இருந்து வந்த ஜார்க்கண்ட் பகுதிக்கு  தனி மாநில அந்தஸ்து வேண்டி இங்குள்ள பழங்குடி மக்கள் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தீவிரமாக போராடி வந்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் அதன் வடக்கே பீஹார் மாநிலத்தையும், மேற்கே சட்டிஸ்கர் மாநிலத்தையும், தெற்கே ஒடிஷா மாநிலத்தையும், கிழக்கே மேற்கு வங்காள மாநிலத்தையும் தனது எல்லைகளாக கொண்டிருக்கிறது.

ராஞ்சி நகரம் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது. அது தவிர ஜாம்ஷெட்பூர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் நகரமாகவும் வணிகக்கேந்திரமாகவும் திகழ்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தின் இதர முக்கியமான நகரங்களாக தன்பாத், பொக்காரோ மற்றும் ஹஸாரிபாக் போன்ற நகரங்கள் அமைந்திருக்கின்றன. ‘காடுகளின் பூமி’ என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ஜார்கண்ட் மாநிலம் தன்னுள்ளே மனிக்கரங்கள் தீண்டாத இயற்கை வளத்தை வாய்க்கப்பெற்றிருக்கிறது.

பசுமை மாறாக்காடுகள், அலையலையாய் மடிந்து கிடக்கும் மலைகள், பாறைப்பாங்கான பீடபூமி பிரதேசங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பல்வேறு எழில் அம்சங்களுக்கு இந்த மாநிலம் புகழ் பெற்றுள்ளது.

ஜார்கண்ட் – புவியியல் அமைப்பும் பருவநிலையும்!

ஜார்கண்ட் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் சோட்டா நாக்புர் பீடபூமிப்பகுதியில் அமைந்திருக்கின்றன. தாமோதர், கர்காய், கோயல் மற்றும் சுபநரேகா போன்ற ஆறுகள் இந்த பூமியின் நீர்த்தேவையை பூர்த்தி செய்கின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தின் பெரும் நிலப்பகுதி காடுகளால் சூழப்பட்டிருப்பதால் புலிகள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனித நடமாட்டமேயில்லாத அடர்த்தியான சால் மர காட்டுப்பகுதிகள் இந்த பூமியில் பரவலாக அமைந்திருந்தன. இங்கு புதைந்து கிடக்கும் கனிம வளத்தின் இருப்பு கண்டறியப்பட்டபிறகே இம்மாநிலம் ஒரு தொழில் பிரதேசமாகவும், வாழ்விடங்களாகவும் வளரத்துவங்கியது.

கனிம சுரங்கங்கள், ரயில்வே பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் என்று ஒரு புறமும்,  கல்வி, தொழில் நுட்பக்கல்லூரிகள் என்று மறுபுறமும் இந்த மாநிலத்தின் முக்கிய நகரங்கள் தற்போது மிக வேக வளர்ச்சியடைந்து வருகின்றன. நவீன வாழ்க்கை வசதிகள் மற்றும் நாகரிக வழக்கங்களை கொண்டதாக இந்த நகரங்கள் மாற்றமடைந்து வருகின்றன.

கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவற்றை அடக்கிய மூன்று முக்கிய பருவங்களை ஜார்கண்ட் மாநிலம் பெற்றிருக்கிறது. கோடைக்காலம் இங்கு கடும் வெப்பம் மற்றும் வறட்சியுடன் காணப்படும் என்பதால் அக்காலத்தில் ஜார்கண்ட் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்க்க வேண்டியுள்ளது.

செப்டம்பர் மாதம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்ற இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. மழைக்காலம் முடிந்து மிதமான குளுமையான சூழல் அச்சமயம் நிலவுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்கள்!

ஜார்கண்ட் மாநிலம் விதவிதமான சுவாரசிய அம்சங்களை சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கிறது. இங்குள்ள மக்கள், இயற்கை அழகு மற்றும் மொழி ஆகிய அனைத்துமே தனித்தன்மையான இயல்புடன் புதிதாக விஜயம் செய்யும் அன்னியர்களை வசீகரித்து ஈர்க்கின்றன.

இம்மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் பல்வேறு சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. ராஞ்சி மலை, சூரியக்கோயில் ஆகியவற்றோடு இன்னும் இதர அம்சங்களையும் இந்நகரம் கொண்டுள்ளது. ஜாம்ஷெட்பூர், தன்பாத், பலாமு மற்றும் பொக்காரோ போன்றவை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மற்ற முக்கியமான சுற்றுலா நகரங்களாகும்.

பெட்லா தேசியப்பூங்கா, தல்மா காட்டுயிர் சரணாலயம் போன்றவை இம்மாநிலத்தில் உள்ள முக்கியமான தேசிய இயற்கை பூங்காக்களாகும். இவற்றில் அபரிமிதமான காட்டுயிர் வளம் மற்றும் தாவரச்செழிப்பு போன்றவை நிரம்பியுள்ளன.

செழிப்பான இயற்கை வளம் மற்றும் காட்டுயிர் அம்சங்கள்!

பல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் தாவர வகைகளை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளும், தேசியப்பூங்காக்களும், வனவிலங்கு சரணாலயங்களும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக லடேஹர் மாவட்டத்திலுள்ள பெட்லா தேசியப்பூங்கா ஏராளமான காட்டுயிர் அம்சங்கள் வசிக்கும் வனப்பகுதியாக புகழ் பெற்றுள்ளது.

‘புராஜெக்ட் டைகர்’ எனும் திட்டத்தின் கீழ் இங்குள்ள பலாமு புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டு வனத்துறையின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதில் புலிகள் மட்டுமல்லாமல் ஏனைய காட்டுயிர் அம்சங்களும் தாவர வகைகளும் நிரம்பியுள்ளன.

இது தவிர, ஹஸாரிபாக் காட்டுயிர் சரணாலயமும் பலாமு புலிகள் சரணாலயத்திற்கு இணையான இயற்கை வளம் மற்றும் காட்டுயிர் வளத்தை கொண்டுள்ளது.

பொக்காரோ ஸ்டீல் சிட்டி நகர்ப்பகுதியில் ஜவஹர்லால் நேரு பயாலஜிகல் பார்க் எனும் மற்றொரு விலங்கியல் பூங்காவும் அமைந்திருக்கிறது. இந்த பூங்கா 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது.

பல்வேறு விலங்கினங்கள் மற்றும் பறவைகள் இந்த பூங்காவில் வசிக்கின்றன. அது மட்டுமல்லாமல் இந்த வளகத்தில் உள்ள செயற்கை ஏரியில் படகுச்சவாரி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மற்றும் ஒரு விலங்கியல் பூங்கா பிர்சா முண்டா ஜைவிக் உத்யன் என்ற பெயரில் ராஞ்சியிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இங்குபலவிதமான பாலூட்டி விலங்குகளை பயணிகள் பார்க்கலாம்.

கலாச்சார வண்ணக்கலவை, திருவிழா மற்றும் உணவுச்சுவை!

பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் என்பதால் இம்மாநிலத்தின் எல்லா அம்சங்களிலும் இயற்கையோடு ஒன்றிய பாரம்பரியம் வேரூன்றி காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் புனிதமான மரங்கள் நடப்பட்டிருப்பதை இந்த மாநிலத்தில் பார்க்க முடியும்.

சடங்குபூர்வமான நிகழ்ச்சியாக இந்த மரங்கள் கொண்டுவரப்பட்டு வீட்டு வாசலில் நடப்படுகின்றன. இது போன்ற மரங்களை தெய்வமாகவே கருது வழிபடுவது இம்மக்களின் ஆதி இயற்கை உறவை பிரதிபலிக்கிறது.

பௌஷ் மேலா அல்லது துசு திருவிழா எனும் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி திருநாளின்போது விமரிசையாக இம்மாநிலத்தில்  கொண்டாடப்படுகிற்து.

நாட்டுப்புற தெய்வங்களின் சிலைகளை அச்சமயம் ஊர்வலமாக எடுத்துச்சென்று மக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். இது ஒரு நாட்டுப்புற அறுவடைத்திருவிழாவாகும்.

துசு என்பது எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பதல்ல என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும். இது உண்மையில் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு சிறு குழந்தையை குறிக்கிறது.

அறுவடை முடியும்போது இந்த துசு திருவிழா கொண்டாடப்படுகிறது. கோலாகாலமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா நிகழ்ச்சிகளில் பழங்குடி மக்கள் மட்டுமல்லாது அனைத்து பிரிவினரும் மகிழ்ச்சியோடு கலந்துகொள்கின்றனர்.

சோட்டா நாக்பூர் பீடபூமிப்பகுதியில் கரம் திருவிழா எனும் திருவிழாவும் உள்ளூர் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒராவோன் இனத்தார் மத்தியில் இந்த கரம் திருவிழா முக்கியமான சமூக நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது.

இந்தப்பகுதியின் முக்கியமான கொண்டாட்ட நிகழ்ச்சியாக விளங்குவதால் இந்த கரம் திருவிழா வெகு விமரிசையாக ஒராவோன் பிரதேசத்தில் நடத்தப்படுகிறது.

தற்போது நவநாகரிக அம்சங்களும் இந்த திருவிழாவில் சேர்ந்து கொண்டதால் சோட்டாநாக்பூர் துவங்கி நாட்டின் பலபகுதிகளிலும் இந்த திருவிழா பிரசித்தமடைந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் உணவு முறைகள் யாவுமே பாரம்பரிய அம்சங்களுடன் இம்மாநிலத்துக்கே உரிய தனித்தன்மையான தயாரிப்பு முறைகளுடன் அமைந்துள்ளன.

பொதுவாக இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் எளிதில் செரிக்கக்கூடியதாகவும் வயிற்றுக்கு சிரமத்தை அளிக்காத குணத்தை கொண்டவையாகவும் உள்ளன. இதிலிருந்தே இந்த மாநிலத்தில் வசிக்கும் ஆதிகுடி மக்களின் உணவுப்பாரம்பரியத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

லிட்டி மற்றும் சொக்கா எனும் உணவுகள் ஜார்க்கெண்ட் பகுதியில் முக்கியமானவையாக விளங்குகின்றன. காரமான சிக்கன் குழம்பு போன்றவற்றுக்கும் ஜார்கண்ட் மாநிலச்சமையல் புகழ் பெற்றுள்ளது. முகலாய பாணி உணவுத்தயாரிப்பு முறைகளும் இந்த மாநிலத்தின் சமையல் முறைகளில் கலந்துள்ளதை காண முடிகிறது.

உள்ளூர் மதுபான வகையாக இங்கு அரிசியில் தயாரிக்கப்படும் ஹண்டியா எனப்படும் ஒரு வகை மது இங்குள்ள மக்களால் அருந்தப்படுகிறது. குறிப்பாக சதான் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்களிடையே இந்த ஹண்டியா ஒரு முக்கியமான பானமாக அருந்தப்படுகிறது.

திருமணம் உள்ளிட்ட சடங்கு நிகழ்ச்சிகளின்போது ஆண்கள், பெண்கள் ஆகிய இரு தரப்பினருமே இந்த கள் வகையை அருந்தி மகிழ்கின்றனர். அது தவிர, இம்மாநிலத்தில் மஹு எனப்படும் மற்றொரு உள்நாட்டு மதுபானமும் மஹுவா மர பழங்கள் மற்றும் பூக்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.   

Please Wait while comments are loading...