குடியரசு தின விடுமுறை கொண்டாட புதுச்சேரிக்கு போறீங்களா? அப்படி என்றால் நிச்சயம் இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும். சென்னைக்கு அடுத்தபடியாக பலரும் அதிகம் விரும்பிச் செல்லும் சுற்றுலாத் தலம் என்றால் அது புதுச்சேரி தான். வருடம் முழுவதும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தலமாக புதுச்சேரி இருந்து வருகிறது. குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் ஜாலியாக சென்று புதுச்சேரியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களின் விபரங்கள் இதோ...

மணக்குள விநாயகர் கோவில்
புதுச்சேரியில் உள்ள மிக பிரபலமான, சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது மணக்குள விநாயகர் கோவில். மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் இந்த விநாயகர் கோவிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோவிலின் அழகான சிற்பங்கள், அழகான கட்டிடக்கலை ஆகியவை இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரையும் கூட கவர்ந்து வருகிறது. இந்த பழமையான கோவிலுக்கு இந்த ஆண்டு காணும் பொங்கலன்று குடும்பத்துடன் சென்று வழிபடலாம்.
கோகிலாம்பாள் கோவில்
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ளது கோகிலாம்பாள் சமேத திருகாமேஸ்வரர் கோவில். புதுச்சேரியில் உள்ள பிரபலமான கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக பழமையான இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டாக தல புராணம் சொல்கிறது. சோழ மன்னர்களின் நோய் தீர்த்த தலம் என சொல்லப்படுவதால் அதிகமானவர்கள் தங்களின் நோய் தீர இக்கோவிலில் வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இக்கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவம் மிகவும் பிரபலமானதாகும்.
ஒஸ்டெரி படகு குழாம்
ஒஸ்டெரி சதுப்பு நிலம் மற்றும் தேசிய பூங்கா புதுச்சேரியின் பிரபலமான நன்னீர் ஏரியாகும். ஒசுடு ஏரி என்றும் இது அழைக்கப்படுகிறது. ஆசியாவின் மிக முக்கியமான ஈர நிலங்களில் இயற்கை மற்றும் வளங்களின் பாதுகாப்பிற்கான சர்தேச அங்கீகாரம் பெற்ற தலமாக இது உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஏரி விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 390 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்து ரசிப்பதற்கும், படகு சவாரி சென்று மகிழவும் ஏற்ற இடமாக உள்ளது.
ராக் பீச்
வங்கக் கடலின் அற்புதமான அழகை காட்டும் இடமாக உள்ளது ராக் பீச். புதுச்சேரியின் மிக பிரபலமான கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள போர் நினைவுச்சின்னம், டூப்ளெக்ஸ் பூங்கா, காலனித்துவ கட்டிடங்கள் ஆகியவை இங்கு அவசியம் காண வேண்டியவை. இந்த கடற்கரை சாலை கைப்பந்து போன்ற கடற்கரை விளையாட்டுக்கள் விளையாடவும், சன் பாத் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுவதால் வெளிநாடு, உள்நாடு என பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
புதுச்சேரி மியூசியம்
புதுச்சேரியின் வரலாற்றை கூறும் சிற்பங்கள், கட்டிடக்கலை, கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த மியூசியம் உள்ளது. அரிக்கமேடு ரோமானிய குடியேற்றங்களின் நினைவுச் சின்னங்களும் இங்கு உள்ளது. அதே போல் பல்லவ மற்றும் சோழர் கால கலைப் பொருட்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று ஆர்வலர்கள், கலாச்சார பிரியர்களை ஈர்க்கும் மிக முக்கியமான தலமாக இது இருந்து வருகிறது.
சுண்ணாம்பாறு படகு இல்லம்
புதுச்சேரியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் சுன்னம்பார். இயற்கை அழகுடன் அமைந்த இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுன்னம்பார் படகு இல்லம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் பிரபலமான இடமாக உள்ளது. உப்பங்கழிப் பகுதியில் அமைந்துள்ள இந்த படகு இல்லத்திற்கு செல்வதே சிறந்த அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications



