அஸ்ஸாம் சுற்றுலா – கன்னிமை மாறா இயற்கையின் அற்புத வனப்பு

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

தனித்தன்மையான கிழக்கிந்திய கலாச்சார பாரம்பரியம் மற்றும் செழிப்பான வனப்பகுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும் அஸ்ஸாம் மாநிலம் எல்லாவகையிலும் ஒரு இயற்கை சொர்க்கம் என்பது இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்யாதவர் அனைவரும்கூட அறிந்திருக்கும் ஓர் உண்மை.

காட்டுயிர் சுற்றுலாவை விரும்பும் இயற்கை ரசிகர்களுக்கு இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏராளமான வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த வடகிழக்கு இந்திய மாநிலமானது வடக்கில் பூடான் மற்றும் அருணாசலப்பிரதேசத்தையும், கிழக்கில் நாகலாந்து மற்றும் மணிப்பூரையும் தெற்கில் மிஜோரத்தையும் தனது அண்டை மாநிலங்களாக கொண்டுள்ளது.

அஸ்ஸாம் வழங்கும் காட்டுயிர் சுற்றுலா

அஸ்ஸாம் மாநிலம் காட்டுயிர் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்குள்ள தேசிய இயற்கைப்பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்றவை அஸ்ஸாம் மாநிலத்தின் சுற்றுலா செயல்பாடுகளில் பிரதான இடத்தை வகிக்கின்றன.

இங்குள்ள தேசியப்பூங்காக்கள் பல அரியவகை காட்டு உயிரினங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சாகச பொழுது போக்கு அம்சங்களையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்குகின்றன.

கஜிரங்கா வனவிலங்கு சரணாலயம் அஸ்ஸாம் மாநில சுற்றுலா அம்சங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக பாரம்பரிய ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அளவில் அருகி வரும் பல உயிரினங்கள் இந்த கஜிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் வசிக்கின்றன. இவற்றில் இந்திய காண்டாமிருகம் முக்கியமான ஒரு விலங்காகும்.

இது தவிர கோல்டன் லாங்குர் குரங்கு, பெங்கால் ஃப்ளோரிகன். பிக்மி ஹாக், வெள்ளைச்சிறகு மர வாத்து போன்றவை இங்கு வசிக்கும் உயிரினங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிகமான அளவில் புலிகள் வசிக்கும் வனப்பகுதியாகவும் இது புகழ் பெற்றுள்ளது. பலவகையான பறவையினங்களும் இங்கு வசிக்கின்றன.

புலம்பெயர் பறவைகள், இருப்பிடப்பறவைகள், நீர்ப்பறவைகள், வேட்டைப்பறவைகள் போன்ற பலவகைப்பாடுகளில் இவை காணப்படுகின்றன.கஜிரங்கா வனவிலங்கு சரணாலயம் தவிர்த்து அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மனஸ் தேசியப்பூங்காவும் யுனெஸ்கோ அமைப்பின் மூலம் பல்லுயிர்பெருக்க இயற்கை ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் முதல் புலிகள் சரணாலயமான இந்த மனஸ் பூங்காவில் இதர விலங்குகளும் ஏராளம் வசிக்கின்றன. அற்புதமான இயற்கை அழகுக்காகவும் புகழ் பெற்றுள்ள இது நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது.

பொபிடோரா காட்டுயிர் சரணாலயம், ஒராங் தேசியப்பூங்கா மற்றும் நாமேரி தேசியபூங்கா ஆகியவை அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள இதர தேசிய இயற்கை பூங்காக்களாக அமைந்துள்ளன.

அஸ்ஸாம் சுற்றுலாவின் இதர சுவாரசிய அம்சங்கள்

செழிப்பான காட்டுயிர் அம்சங்கள் மட்டுமல்லாது கோயில்கள் மற்றும் வரலாற்றுச்சின்னங்கள் போன்றவற்றையும் அஸ்ஸாம் மாநிலம் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது.

இது தவிர ஆற்றுப்பயணம், ஆற்று மிதவைப்படகு சவாரி, தூண்டில் மீன் பிடிப்பு, சிகரமேற்றம், மலையேற்றம், மலைச்சைக்கிள் சவாரி, பாரசூட் பறப்பு மற்றும் ஹேங் கிளைடிங் போன்ற பல சாகச பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு காத்திருக்கின்றன.

கோல்ஃப் விளையாட்டுப்பிரியர்கள் இங்குள்ள கோல்ஃப் மைதானங்களுக்கு விஜயம் செய்து பங்கேற்பு மற்றும் பயிற்சிகளில் ஈடுபடலாம்.

அஸ்ஸாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்

சந்தைகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற அம்சங்களையும் அஸ்ஸாம் மாநிலம் அபரிமிதமாக கொண்டுள்ளது. அஸ்ஸாமிய திருவிழாக்கள் யாவும் அவர்களது தனித்தன்மையான பாரம்பரியம், கலாச்சாரம், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.

பிஹு, ரொங்கேர், பைஷாகு, ஜொன்பில் மேளா மற்றும் பய்கோ போன்றவை இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் குறிப்பிடத்தக்கவை.

போக்குவரத்து வசதிகள்

அஸ்ஸாம் பிரதேசம் மற்ற மாநிலங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. குவஹாட்டி நகரத்தில் ‘லோகப்பிரியா கோபிநாத் போர்டோலோய் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்’ விமானநிலையம் அமைந்துள்ளது.

இங்கிருந்து எல்லா இந்திய பெருநகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நாட்டின் இதர பகுதிகளுடன் அஸ்ஸாம் மாநிலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...