பீமேஸ்வரி - சாகசக்காரர்களின் புகலிடம்

சாகசக்காரர்களுக்கும், இயற்கை காதலர்களுக்கும் விருப்பமான சுற்றுலா தலமாக மாறி வரும் அழகிய சிறு நகரம் பீமேஸ்வரி. இது பெங்களூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  மந்தியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெகிதாத்தூவுக்கும், ஷிவனசமுத்திர அருவிக்கும் இடையே காண்போரை சொக்க வைக்கும்படி காட்சியளிக்கும் இதன் அழகை காணவே இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் வருகின்றனர்.

பீமேஸ்வரியில் ஓடிக்கொண்டிருக்கும் காவேரியில் மகாசீர் என்ற அரிய மீன் வகை அதிகமாக காணப்படுவதால் இந்த இடத்தை தேடி வரும்  தூண்டிற்காரர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பீமேஸ்வரியை சுற்றி நிறைய மீன்பிடி முகாம்களும் புதிதாக செயல்பட துவங்கியுள்ளன. இதனால் இந்த இடம்  தூண்டிற்காரனின் சொர்க்க பூமியாகவே திகழ்ந்து வருகிறது.

பீமேஸ்வரியில் இயற்கை முகாம்கள் நிறைய உள்ளன. இதன் வழியாக நீங்கள் காடுகளுக்கு பயணம் சென்று மான், சிறுத்தை, கரடி, முதலை மற்றும் ஏராளமான பறவை இனங்களையும் கண்டு ரசிக்கலாம்.

இந்த இடம் பசுமையான காடுகளாலும், செங்குத்தான பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்டிருப்பதால் நடை பயணம் செல்ல ஏற்ற இடமாக இருக்கும். அதிலும் இங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தனித்திருக்கக் கூடிய தொட்டம்கலி என்ற இடத்துக்கு நீங்கள் நடை பயணம் சென்று, அங்கு காணப்படும் பறவை இனங்களை ரசிக்கும் அனுபவம் அலாதியானது. அதுமட்டுமல்லாமல் தொட்டம்கலியில் நீங்கள் கட்டு மரங்களில் பயணம் செய்வது, மீன் பிடிப்பது போன்ற பொழுதுபோக்குகளிலும் ஈடுபடலாம்.

மேலும் பீமேஸ்வரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலிபோரே மீன் பிடி முகாமுக்கும் நடை பயணம் செல்லலாம். ஆனால் இங்கு நீங்கள் பிடிக்கும் மீன்களை மீண்டும் ஆற்றில் விட்டுவிட வேண்டும். இங்கிருந்து  காவேரி நதியின் கரையோரங்களிலேயே நடந்து சென்றால் நீங்கள் யானைகள் முகாமை அடைவீர்கள். இந்த வழியில் நீங்கள் நடந்து செல்லும் போது ஒரு கற்பனை ராஜ்ஜியமே உங்கள் கண் முன்னே தோன்றி உங்களை மயக்கம் கொள்ளச் செய்யும்.

பீமேஸ்வரியில் வேகமாக சலசலத்து ஓடும் காவேரி ஆற்றில் நீங்கள் இக்கரையிலிருந்து, அக்கரைக்கு நீந்தி செல்வது சிலிர்ப்பூட்டும் சாகசமாக இருக்கும். அதோடு கட்டுமரத்தில் செல்வதும், பரிசலில் செல்வதும் சிறந்த அனுபவமாக அமையும்.

Please Wait while comments are loading...