எலிஃபண்டா - பாறைகளில் உருவான அதிசயம்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள எலிஃபண்டா குகைகள், எலிஃபண்டா தீவில் அமைந்துள்ளது. இந்தத் தீவுக்கு 17-ஆம் நூற்றாண்டுகளில் வந்த போர்த்துகீசிய ஆராய்ச்சியாளர்கள் இங்கு நிறைய யானை சிற்பங்கள் இருப்பதைக் கண்டு இதற்கு எலிஃபண்டா தீவு என்று பெயரிட்டனர். அதற்கு முன்பு கராப்புரி என்ற பெயரிலேயே இந்தத் தீவு அழைக்கப்பட்டு வந்தது. இதற்கு குகைகளின் நகரம் என்று பொருள்.

எலிஃபண்டா குகையில் முற்றிலும் வெவ்வேறு வகையான இரண்டு குகைத் தொகுப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று ஹிந்து மரபையும், மற்றொன்று புத்த மரபையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு குகைகளும் திங்கட்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

எலிஃபண்டா தீவுக்கு படகுப் பயணம்

மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா முனையத்திலிருந்து படகு அல்லது ஃபெர்ரி சேவை மூலமாக சுலபமாக எலிஃபண்டா தீவை அடையலாம். இதற்கான கட்டணமாக அவர்கள் வசூலிக்கும் தொகையும் மிகவும் குறைவே. அதோடு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இரண்டு முறை எலிஃபண்டா தீவுக்கு ஃபெர்ரி சேவை இயக்கப்படுகிறது.

இந்தப் படகுளில் பயணிக்கும் போது மும்பை துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளின் அழகான காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருக்கும். மேலும், பயணத்தின் போது தூரத்தில் தெரியும் பல்கலைகழக கோபுரம், விக்டோரியா டெர்மினஸ் மற்றும் தாஜ் ஹோட்டல் ஆகிவற்றின் கவின் கொஞ்சும் தோற்றங்கள் எவரையும் எளிதில் மயக்கம் கொள்ளச் செய்து விடும்.

எலிஃபண்டா தீவை அடைந்த பிறகு, பயணிகள் கப்பலிலிருந்து கீழே இறங்கினால் முதலில் தீவின் தொணித்துறையில் தான் கால்பதிக்க வேண்டும். இந்தத் துறை அவர்களை நேரே குகைகளின் படிக்கட்டுகளுக்கு கூட்டிச் செல்லும்.

அதுமட்டுமல்லாமல் குறுகிய இருப்புப் பாதையில் செல்லும் எலிஃபண்டா எக்ஸ்பிரஸ் என்னும் சிறிய ரக ரயிலில் பயணம் செய்தும் குகைகளை அடையலாம்.

குகைகளும், யோகாவும்

எலிஃபண்டா தீவில் உள்ள குகைகளிலேயே பிராதான ஆலயம் அல்லது சிறப்பு குகைதான் பயணிகள் மத்தியில் பிரபலமானதாக விளங்கி வருகிறது. இங்கு உள்ள புகழ்பெற்ற சிற்பங்களாக எலிஃபண்டா திருமூர்த்தி மற்றும் நடராஜர் சிலைகள் அறியப்படுகின்றன.

அதோடு நடனமாடும் சிவன் சிலையையும் பயணிகள் பார்க்க மறந்துவிடக் கூடாது. இவைதவிர, பல்வேறு யோக ஆசனங்களில் இருப்பது போன்ற சிவனின் மற்ற சிலைகளும் கலா அற்புதங்கள்.

எலிஃபண்டா தீவில் உள்ள அருங்காட்சியகத்துக்கும் நேரமிருந்தால் பயணிகள் சென்று பார்க்கலாம். மேலும், எலிஃபண்டா தீவின் மலை உச்சிக்கு நீங்கள் செல்லும் பட்சத்தில், அங்கு உள்ள பீரங்கி முனையையும், பீரங்கி மேடையையும் பார்க்கும் அரிய வாய்ப்பை பெறுவீர்கள். ஆனால் மலையின் உச்சியை அடைய உங்களுக்கு விடாமுயற்சியும், தளர்வுறாத மனமும் அவசியம் தேவை.

Please Wait while comments are loading...