எல்லோரா - உலக புராதன சின்னம்

இந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது. யுனேஸ்கோ அமைப்பால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது.

இங்குள்ள 34 குகைகளும் ஹிந்து, புத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளையும், அதன் பெருமைகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் 12 குகைகள் புத்த கோயில்களாகவும், அடுத்த 17 குகைகள் ஹிந்து கோயில்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில் மீதம் உள்ள 5 குகைகளும் ஜைன மரபின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த காலங்களில் இந்த மூன்று மதங்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தன என்பதை நமக்கு எடுத்துச் சொல்லும்  சரித்திர புத்தமாக இந்த குடைவறைக்கோயில்கள் இன்று நம்மிடையே உள்ளன.

எல்லோரா - குகைகளின் உலகம்

எல்லோரா குகைகளில் முதலில் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்கள், அதன் முதல் 12 கோயில்களான புத்த கோயில்களே ஆகும். இந்த கோயில்கள் அனைத்தும் 450 மற்றும் 700 ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. இதன் முதல் 5 கோயில்கள் ஒரு பிரிவாகவும், அடுத்த 7 கோயில்கள் இன்னொரு பிரிவாகவும் கொள்ளப்படுகின்றன.

இங்குள்ள பிராமணிய குகைகளே ஹிந்து கோயில்கள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் 13 முதல் 29-ஆம் குகைகள் வரை மொத்தம் 17 குகைக் கோயில்களாக மேற்கு பக்கத்தில் அமைந்திருக்கின்றன. இந்த குடைவறைக்கோயில்கள் ஒவ்வொன்றும் பல்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.

எல்லோராவின் கடைசி 5 குகைகளும் ஜைன கோயில்கள் ஆகும். இந்த குடைவறைக்கோயில்கள் முடிக்கப்படாமல் இருந்தாலும், அதன் நுணுக்கம் அலாதியானது. எனினும் புத்த மற்றும் ஹிந்து கோயில்களோடு ஒப்பிடும் போது ஜைன கோயில்கள் தரத்தில் குறைந்ததே.

எல்லோராவின் அனைத்து குகைகளிலும் காணப்படும் நீர் தொட்டிகள் அதன் தனித்துவத்தை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கின்றன. இந்த நீர் தொட்டிகள் அந்த காலங்களில் இங்கு வாழ்ந்த ரிஷிகளுக்கும், அவர்களின் சீடர்களுக்கும் நீர் ஆதாரமாக இருந்து வந்தன.

இவர்கள் மழை நீரை சேமிப்பதில் தனி கவனம் செலுத்தி வந்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இங்குள்ள பாறைகளை எல்லாம்  சாதுர்யமாக செதுக்கி மழை நீரை இந்த நீர் தொட்டிகளில் விழுமாறு இவர்கள் அமைத்திருக்கிறார்கள்.

எல்லோராவுக்கு எப்போது, எப்படிச் செல்வது

எல்லோராவின் வெப்பநிலை எப்போதும் சீராக இருப்பதால் வருடத்தின் எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம். இருந்தாலும் கோடை காலத்தில் வெப்பம் சற்று அதிகமாக இருப்பதால், எல்லோராவின் குகைக்கோயில்களில் நடந்து செல்வது சிலருக்கு சோர்வை ஏற்படுத்தலாம். எல்லோராவின் சுட்டெரிக்கும் கோடை காலத்தோடு ஒப்பிடுகையில் அதன் மழைக் காலம் சுற்றிப் பார்க்க மிகவும் சிறந்தது.

எல்லோரவை நீங்கள் விமானம், ரயில் மற்றும் சாலை மூலமாகவும் சுலபமாக அடையலாம். எல்லோராவுக்கு மிக அருகில் ஔரங்கபாத் விமான நிலையம் இருக்கிறது. அதே போல் 45 நிமிட நேர பயணத்தில் ஔரங்கபாத் ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடைந்து விடலாம். அதுமட்டுமல்லாமல் அஹமதாபாத் ரயில் நிலையமும் எல்லோராவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், பயணிகள் அஹமதாபாத் வந்த பிறகு ஆட்டோ மூலம் எல்லோரா வந்து சேரலாம்.

இந்திய கலாச்சாரத்தினை உலகுக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் எல்லோரா, இந்தியாவின் 10 முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அதோடு இந்தியாவையும், உலகையுமே மாற்றி அமைத்த சமயங்களான புத்தம், இந்து மற்றும் ஜைன மதங்களின் பெருமைகளை அறிந்து கொள்ள எல்லோராவை விட சிறந்த இடம் வேறேதும் இல்லை.

Please Wait while comments are loading...