கொடலா – வசீகரிக்கும் சின்னஞ்சிறிய கிராமம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் 1800 அடி உயரத்தில் இந்த கொடலா எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. தன் அமைதியான சூழலுக்காக பிரசித்தமாக அறியப்படும் இந்த கொடலா கிராமம் இங்குள்ள வைதர்ணா ஏரி, இகத்புரி கசரா காட் மற்றும் திரிங்கால்வாடி கோட்டை போன்றவற்றுக்காக முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்பட்டுள்ளது.

இயற்கை எழிலின் இருப்பிடம்

அடர்த்தியான பசுமை வளத்துடன் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கொடலா பிரதேசமானது மலையேற்றம் மற்றும் இன்பச்சிற்றுலா போன்றவற்றுக்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.

பாரம்பரிய இயற்கைச்சூழலுடன் காட்சியளிக்கும் இந்த பகுதி பயணிகளுக்கு சுற்றிப்பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களுக்கு மிக அருகே அமைந்திருந்தாலும் இந்த கொடலா கிராமம் அவ்வளவாக பிரசித்தமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் பெரும்பாலும் பூர்வகுடிகளே வசிக்கின்றனர். மிருகங்களை பிரதானமாக கொண்ட பலவகையான சடங்குகள் இன்னமும் இவர்கள் வாழ்க்கை முறையில் பின்பற்றப்படுகின்றன.

இவை இந்திய தொல்குடி மரபு குறித்த தகவல்களை பயணிகளுக்கு அளிக்கின்றன. பூர்வகுடிகளின் இசை மற்றும் நடனம் போன்றவையும்,  அவர்களின் எளிமையான உடைகளும் இயற்கையோடு இயைந்திருக்கும் அவர்கள் வாழ்க்கை முறையை விளக்குவதாய் அமைந்துள்ளன.

கொடலா பற்றிய விசேஷ தகவல்கள்

கொடலாவின் விசேஷ அம்சங்களில் ஒன்று இது மலையேற்றத்துக்கான முக்கிய கேந்திரம் என்பதாகும். மலைப்பாதை சைக்கிள் சவாரி, மலையேற்றம் போன்றவை இங்கு சாகசப்பிரியர்களை ஈர்க்கும் அம்சங்களாகும்.

இங்குள்ள அடர்த்தியான வனப்பகுதியில் பலவகை தாவரங்கள் நிறைந்திருப்பதோடு, இங்குள்ள மரங்களில் பல அரிய புலம்பெயர் பறவைகள் வசிப்பதையும் காணலாம்.

மிதமான இனிமையான பருவநிலையை கொடலா பிரதேசம் கொண்டிருந்தாலும் குளிர்காலம் மற்றும் மழைக்கு பிந்தைய காலம் இங்கு விஜயம் செய்து ரசிப்பதற்க்கு ஏற்ற காலமாக உள்ளது.

அதுமட்டுமன்றி உள்ளூர் பூர்வகுடிகளின் திருவிழாக்காலங்களில் விஜயம் செய்ய முடிந்தால் பல வகை உள்ளூர் பாரம்பரிய கொண்டாட்டங்கள் மற்றும் நடனங்களை பார்த்து ரசிக்கலாம்.

விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கங்களில் எளிதாக சென்றடையும் வகையில் கொடலா கிராமம் அமைந்துள்ளது. கொடலாவுக்கு அருகில் உள்ள விமான நிலையமாக மும்பை  சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அமைந்துள்ளது.

இங்கிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்களுக்கும் சர்வதேச நகரங்களுக்கும் ஏராளமான விமான சேவைகள் உள்ளன. மேலும், கொடலாவிலிருந்து 30 கி.மீ தூரத்தில் இகத்புரி ரயில் நிலையம் அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையமாக அமைந்துள்ளது. 

இருப்பினும் கொடலாவிலிருந்து 450 -500 கி.மீ தூரத்தில் நீங்கள் வசித்தால் காரில் கொடலாவுக்கு பயணிப்பது ரசிக்கும்படியான அனுபவமாக இருக்கும்.

Please Wait while comments are loading...