இரவிக்குளம் நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசியப்பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.
பல்லுயிர்ப்பெருக்கச் சூழல் நிறைந்ததாக கருதப்படும் இந்த இயற்கைப்பூங்கா வனப்பகுதி மற்றும் காட்டுயிர் பராமரிப்பு துறையின் கட்டப்பாட்டின் கீழ் உள்ளது. நீலகிரி தாஹிர் எனப்படும் வரையாடு இந்த பூங்காவில் அதிகமாக வசிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேசியப்பூங்காவோடு சின்னார் வனப்பகுதி மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவை இணைந்து ஒட்டுமொத்தமாக மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் பாதுகாப்பு சரகமாக விளங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் பல முக்கியமான ஆறுகளின் நீர்பிடிப்புப்பகுதியாகவும் இந்த வனப்பகுதி திகழ்கிறது.
இரவிக்குளம் தேசியப்பூங்கா மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மையப்பகுதி, இடைப்பகுதி மற்றும் சுற்றுலாப்பகுதி என்பவையே அவை. சுற்றுலாப்பயணிகளும் பார்வையாளர்களும் ராஜமலா என்றழைக்கப்படும் சுற்றுலாப்பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.
இந்த தேசியப்பூங்காவில் 26 வகையான பாலூட்டிகளும், 132 வகையான பறவை இனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்க காலமான ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும், மழைக்காலத்திலும் இந்த பூங்காவுக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.



Click it and Unblock the Notifications