கோழிக்கோடு – வரலாற்றின் காலடித் தடங்கள் நிரம்பிய மண்

கேரளாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் தலைநகரமே இந்த ‘காலிகட்’ அல்லது கோழிக்கோடு என்று அழைக்கப்படும் நகரமாகும். மேற்கில் அரபிக்கடலால் சூழப்பட்டுள்ள இப்பிரதேசமானது கடல் கடந்த வாணிபம் மற்றும் வியாபாரத்தில் புகழ் பெற்ற துறைமுகப்பகுதியாக பண்டைக்காலத்தில் அறியப்பட்டுள்ளது.

வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி, வாசனைப்பொருட்கள் மற்றும் பட்டு ஆகிய பொருட்களுக்கு கோழிக்கோடு பிரதான சந்தையாக இருந்ததினால், இந்தியப்பெருங்கடலை ஒட்டிய பல நாடுகளோடு இது கடல்வழி வாணிபத்தொடர்புகளைப் பெற்றிருக்கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.

தனது பொற்காலத்தில் காலிகட் நகரமானது ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஆழமான வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரு பரபரப்பான வாணிபக்கேந்திரமாக திகழ்ந்துள்ளது.காலனிய யுகத்தில் இப்பகுதி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரால் ‘மெட்ராஸ் பிரசிடென்சி’யின் ஒரு அங்கமாக நிர்வகிக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து 18கி.மீ தூரத்தில் உள்ள கப்பட் எனும் இடத்தில் வாஸ்கோடகாமா முதன் முதலாக 1498ம் ஆண்டு இந்திய மண்ணில் கால் பதித்ததால் இது வரலாற்றிலும் தன் பெயரை கொண்டுள்ளது. அந்த இடத்தில் ஒரு ஞாபகச்சின்னம் அமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் ஒரு ஸ்தமாகவும் அது பிரசித்தி பெற்றுள்ளது.

கண்ணையும் கருத்தையும் கவரும் கலாச்சாரம் மற்றும் திகட்ட வைக்கும் உணவு வகைகள்

மற்ற எல்லாவற்றையும் விட, காலிகட் பகுதியின் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் ருசியான உணவுவகைகள் ஆகிய இரண்டு அம்சங்களும் பயணிகளையும், வரலாற்று ஆர்வலர்களையும் வெகுவாக கவர்கின்றன.

‘வடக்கன் பாட்டுகள்’ எனும் கேரள நாட்டுப்புற கானங்கள் இப்பிரதேசத்தில் தோன்றியவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய கலையம்சங்களும் இப்பகுதியில் செழிப்புடன் காணப்படுகின்றன.

ஒப்பணா எனும் நடன வடிவம், ‘மாப்பிள்ள பாட்டுகள்’ எனும் இசைப்பாட்டு வடிவம் மற்றும் கஜல் இசை போன்ற இஸ்லாமிய கலை வடிவங்கள் ஆகியவற்றுக்கு காலிகட் பகுதி பிரசித்தமாக அறியப்படுகிறது.

குறிப்பிடத்தக்கவகையில் முற்போக்கு இலக்கியப் பாரம்பரியத்தையும் பெற்றுள்ள இந்நகரத்தில் பல பிரசித்தமான கேரள எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் தோன்றியுள்ளனர். கலையம்சங்கள் தவிர்த்து காலிகட் மக்கள் கால்பந்து மற்றும் உபசரிப்பு போன்றவற்றிலும் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்களாக உள்ளனர்.

அரேபிய மற்றும் சீனபாரம்பரியங்கள் இங்கு ஊடுறுவியுள்ளதால் காலிகட் நகரின் உணவுமுறை ஒரு வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் தயாரிப்பு முறைகளை கொண்டுள்ளது. ‘கோழிக்கோடன் அல்வா’ எனும் சுவையான இனிப்பு வகை இந்த நகரின் விசேஷ அம்சமாக பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது.

அற்புதமான இந்த இனிப்பை சுவைக்காமல் பயணிகள் காலிகட்டிலிருந்து திரும்பக்கூடாது. இதற்கு அடுத்தப்படியாக மலபார் பிரியாணி எனும் உள்ளூர் தயாரிப்பானது காலிகட் மாவட்டத்தின் எல்லா உணவகங்களிலுமே பரிமாறப்படுகிறது.

கடல் உணவு வகைகள், பத்திரி, நேந்திர வற்றல்கள் மற்றும் நெய் சோறு ஆகியவை பயணிகள் இங்கு சுவைத்துப் பார்க்கவேண்டிய இதர உணவுத்தயாரிப்புகளும், தின்பண்டங்களுமாகும்.

ஊர் சுற்றிப்பார்க்கும் இனிமையான அனுபவம்

கால்நடையாகவே ஊர்சுற்றிப்பார்க்க விரும்பும் பயணிகளுக்கு கோழிக்கோடு நகரம் ஒரு சொர்க்கபூமி என்றே சொல்லலாம். இங்குள்ள தேவாலயங்கள், கோயில்கள், தெருக்கள் மற்றும் வரலாற்றுச்சின்னங்கள் போன்றவை தங்கள் ஒப்பற்ற எழில் அம்சங்களின் மூலம் பயணிகளை வசீகரிக்கின்றன.

பேப்பூர் மற்றும் கப்பட் பீச் போன்றவற்றின் இயற்கை எழிலும், கடற்கரை உல்லாசமும் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் காட்சியளிக்கின்றன. அதிகமான பறவையினங்கள் காணப்படும் ‘கடலுண்டி பறவைகள் சரணாலயம்’ பறவை ஆர்வலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பிடித்த இடமாகவும் திகழ்கிறது.

துஷாகிரி நீர்வீழ்ச்சி மற்றும் பெருவண்ணாமுழி அணை போன்ற ஸ்தலங்கள் குடும்பத்துடன் ஒரு நாள் சிற்றுலா(பிக்னிக்) செல்வதற்கு உகந்த ஸ்தலங்களாக உள்ளன.

கோழிக்கோடு நகரத்தில் மிட்டாய் தெருவு அல்லது எஸ்.எம் ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் சாலை மிகப்பிரசித்தமான ஷாப்பிங் சென்டராக பெயர் பெற்றுள்ளது. பயணிகள் இங்கு தங்களுக்கு விருப்பமான உள்ளூர் ஞாபகார்த்த பொருட்கள் மற்றும் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

இவை தவிர திக்கொட்டி லைட் ஹவுஸ், மனச்சிரா ஸ்கொயர், பழசிராஜா மியூசியம், கலிபொயிக்கா, லயன்’ஸ் பார்க், தலி கோயில், கக்கயம், கிருஷ்ண்ட மேனன் மியூசியம் மற்றும் பிளானேட்டேரியம் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் கோழிக்கோடு நகரத்தில் உள்ளன.

சந்தடி ஏதுமற்ற சாந்தம் தவழும் சூழல்

சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடியே காலிகட் கடற்கரையில் ஒரு மாலை நேரத்தை கழிப்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் உலகப் பிரசித்தமான மலபார் உணவுவகைகள் இங்குள்ள பல தரமான உணவகங்களில் கிடைக்கின்றன. மலிவான அதே சமயம் தரமான விடுதிகள் ஏராளமாக இந்த நகரத்தில் நிறைந்துள்ளதால் தங்கும் வசதிகளுக்கு எந்த குறையுமில்லை.

விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நல்ல போக்குவரத்து வசதிகளை கோழிக்கோடு நகரம் கொண்டுள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்களுக்கும் சுலபமாக செல்லும்படி இது இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு ஏற்ற இனிமையான பருவநிலையே காலிகட் பகுதியில் நிலவுகிறது.

கம்பீரமான வரலாற்று சின்னங்கள், நீண்ட அழகிய கடற்கரைகள், பிரசித்தமான உணவு வகைகள், உயிரோட்டமுள்ள தெருக்கள், செழுமையான பாரம்பரியம் மற்றும் உபசரிப்பு குணம் கொண்ட உள்ளூர் மக்கள் என்று எல்லாவிதத்திலும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் அம்சங்களுடன் காலிகட் நகரம் காட்சியளிக்கிறது.

Please Wait while comments are loading...