காசர்கோட் - மாறுபட்ட கலாச்சாரங்களின் பூமி

கேரளாவின் வட எல்லையில் அமைந்திருக்கும் காசர்கோட் மாவட்டம் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்ட பகுதி. இந்த மாவட்டத்தின் வழியாகத்தான் அரேபியர்கள் 9 மற்றும் 14-ஆம் நூற்றாண்டுகளில் கேரளாவுக்குள் காலடி எடுத்து வைத்தனர் என்று சொல்லப்படுகிறது.

காசர்கோட் என்ற வார்த்தை 'கசாரா' மற்றும் 'க்ரோடா' ஆகிய இரு சமஸ்கிருத சொற்களில் இருந்து பிறந்தது. இதில் கசாரா என்பதற்கு 'ஏரி' என்றும், க்ரோடா என்பதற்கு 'பொக்கிஷம் இருக்கும் பாதுகாப்பான இடம்' என்றும் சம்ஸ்கிருத மொழியில் அர்த்தம் சொல்லப்படுகிறது.

அதோடு காசர்கோட் மாவட்டம் முழுவதும் 'காசரக்கா' என்று அழைக்கப்படும் எட்டி மரங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் இந்த மாவட்டம் காசர்கோட் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் காசர்கோட் மாவட்டத்தின் கடலோரங்களில் எட்டி மரங்களை போன்று பல்வேறு வகையான மரங்களும் செழிப்பாக வளர்ந்து காட்சியளிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் காசர்கோடின் கரையோரங்களில் அமைந்திருக்கும் பேக்கல் கோட்டை, இங்கு உள்ள நினைவுச் சின்னங்களிலேயே அரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது.

காசர்கோட் மாவட்டத்தின் நிலப்பரப்பு தென்னை மற்றும் பனை மரங்களும், அழகிய நீரோடைகளும் நிரம்ப காட்சியளிக்கின்றன. அதோடு இந்த மாவட்டம் சாய்வான கூரைகளை கொண்ட வீடுகள் மற்றும் வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டு வேயப்பட்டும் ஓடுகளுக்காக மிகப்பிரபலம்.

காசர்கோடும், கலாச்சாரமும்

காசர்கோட் மாவட்டம் அதன் மாறுபட்ட கலாச்சாரங்களுக்காக நாடு முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மாவட்டத்தில் தெய்யம் கடவுளை போற்றும் விதத்தில் நடத்தப்படும் சேவல் சண்டையும், கம்பாலா எனப்படும் எருமைச் சண்டையும் மிகவும் புகழ்பெற்றவை.

இங்கு மலையாளம், துளு, கன்னடா, கொங்கனி, தமிழ் போன்ற பல மொழிகளை பேசும் பல மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் இந்த மாவட்டம் மத ஒருமைபாட்டுக்கு இன்றளவும் மிகச் சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது.

காசர்கோடின் வானிலை

காசர்கோட் மாவட்டத்தின் கலாச்சாரத்தை போலவே அதன் வானிலையும் வேறுபட்ட தன்மைகளை கொண்டது. இந்த மாவட்டம் வறண்ட, ஈரப்பதமான, குளிச்சியான மற்றும் சூடான வெப்பநிலையை கொண்டிருக்கும்.

அதிலும் குறிப்பாக இந்த மாவட்டம் கடலோரத்தில் அமைந்திருப்பதால், நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களை தவிர மற்ற காலங்களில் ஈரப்பதமான வானிலையே நிலவும்.

Please Wait while comments are loading...